தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை – 2

தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை -2

“தமிழை பொறுத்தவரை கவிதை என்பது தானாக வளரும் காடு”
என்று தமிழின் மூத்த கவிஞர் சமயவேல் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
காட்டில் புலிகளோ யானைகளோ இருந்தால் அந்தக் காட்டின் பரப்பும் வளமும் எளிதில் குறைந்து விடாதபடி அவை பார்த்துக் கொள்ளும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக புலிகள் இருக்கும் எல்லா காடுகளும் ( Tiger reserves ) அதன் வழியே ஓடும் ஆறுகளின் நீர் ஆதாரத்தை ஆண்டிற்கு 30 சதவீதத்திற்கு மேல் அதிகப்படுத்தி அருகில் உள்ள நகரங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்வதாக ஒரு ஆய்வு சொல்கிறது

தமிழ் கவிதை என்ற காட்டில் அப்படிப்பட்ட புலிகளும் யானைகளும் இல்லாமல் போய்விட்டது. தமிழ்க் கவிதை என்னும் காடு தனது பரப்பை தனது வளங்களை சுருக்கிக் கொண்டு வந்துள்ளது என்ற ஐயம் எனக்கு வலுவாக எழுந்துள்ளது.

என்னுடைய கவிதைத் தொகுப்பைப் பற்றி கருத்து சொல்ல என் நண்பரிடம் கேட்டிருந்தேன். நண்பர் சாதகங்களைச் சொல்லி விட்டு தன்னிடம் மாறுபட்ட கருத்து உள்ளதாகவும் அதைச் சொல்லலாமா என்று தயக்கத்துடன் கேட்டார். ஏன் இப்படி சொல்றீங்க என்று நான் கேட்டதும், “எதிர்மறையாக கருத்துச் சொன்னால் பலபேர் அதன்பிறகு நேரில் பார்த்தால் கூட பேசுவதில்லை கருத்து சொல்பவர்களை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்” என்று பதில் சொன்னார்.

இந்த மன ஓட்டம் உருவானதற்கு காரணம் எங்குத் தொடங்கியது? கவிதை நூல் குறித்து பேச நூல்வெளியீட்டு விழாவிற்கு அல்லது நூல் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்ட மரியாதைக்காக அந்த புத்தகத்தை பற்றி பாராட்டி பேசுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் ஆனால் பாராட்டுவதற்கு பதிலாக வானளாவப் புகழ்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் .

சமீபத்தில் 70 க்கும் குறைவான கவிதை அடங்கிய ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த கவிதை தொகுப்பைப் பாராட்டி பேசினார்கள் இல்லை இல்லை புகழ்ந்து பேசினார்கள் பேசியவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதை வாங்கிப் படித்தால் அது புதுமையோ நுட்பமோ இல்லாமல் சராசரியான கவிதைகளோடு அந்தப் புகழ்ச்சிக்கு சற்றும் அருகில் செல்லாத கவிதைகளுமே இருக்கின்றன.

அப்படி தமிழில் கவிதை முகமாக அழைக்கப்படுபவர்கள் பேசிய பேச்சுகள் அந்த கவிஞர்களின் தலையில் கிரீடங்களை வைத்துவிடுகிறது . அதனால் அந்த தொகுப்பைப் பற்றி யாராவது எதிர்மறையாக பேசினால் வாழ்நாள் முழுமைக்குமான எதிரிகளாக உருவாக்கி விடுகிறார்கள். அதனால்

ஏன் வம்பு என்று கவிதையின் புதுமை தரம் மேன்மை உத்தி முயற்சி போன்ற கூறுகளின் உண்மை தன்மையை பேசாமல் போனதால் என்ன நடக்கிறது என்றால் தன்னுடைய முந்தைய தொகுப்லிருந்து எந்த மாற்றமும் வளர்ச்சியும் இல்லாமல் அதே போல இன்னொரு தொகுப்பை வெளியிட தயாராகி விடுகிறார்கள். இது இத்தோடு நின்றுவிடுவதில்லை அதைப் போலவே எழுதும் இன்னொரு கவிஞர் அல்லது அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர் நாம் மட்டும் அதற்கு என்ன குறைந்தவரா என்று அதே தொனியோடு ஒரு கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார்.

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி- என்ற அளவுகோல் தமிழ் கவிதை நூல்களைப் பற்றி பேசுபவர்களிடம் இல்லாமல் மறைந்து போய்விட்டது என்றே சொல்லலாம்.

இந்தச்சூழலை மாற்றுவதற்கு இரண்டு கருத்துக்கள் பயன்படும் என்று நினைக்கிறேன்

  1. புதியதாக கவிதை எழுதுபவர்கள் அல்லது தங்களுடைய கன்னி முயற்சியாக கவிதை நூல் வெளியிட்டவர்கள் மூத்த கவிஞர்களிடம் கருத்து கேட்க வாய்ப்பு அமையும்போது
  2. என்னுடைய கவிதைகளில் என்னென்ன குறைகள் உள்ளன ?
  3. அதை மேம்படுத்திக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
  4. நான் அவசியம் படிக்க வேண்டிய சமகால கவிதை புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
  5. கவிதை இயல் சார்ந்து அறிந்து கொள்ள இனிமேல் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன என்ன ?
  6. கவிதை குறித்து தெரிந்துகொள்ள யாருடைய இணையப் பக்கங்களை தொடர வேண்டும்?
  7. எந்த இலக்கிய இதழ்களை வாங்கி படிக்க வேண்டும்?
  8. கவிதை நூல் குறித்த சரியான பார்வையை தெரிந்து கொள்ள யாருடைய யூ ட்யூப் உரைகளைக் கேட்க வேண்டும்?
  9. கடந்தஆண்டில் விருது பெற்ற நூல் களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

போன்ற முக்கியமான கேள்விகளைக் கேட்டு குறைந்தது சில கேள்விகளுக்காவது பதில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இது போன்று கருத்து கேட்கிறேன் என்ற பெயரில் அவர்களை தொல்லை படுத்தக் கூடாது இதுதான் புதியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து.

பொருளாதார வாய்ப்புள்ளவர்கள் மூத்த கவிஞர்கள் தங்கள் கவிதை நூல்களை படித்து கருத்து சொல்வதற்காக கட்டணம் செலுத்தலாம். இதை நான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன் ஏனெனில் நேரம் என்பது விலை மதிக்க முடியாதது.

சிலருடைய கவிதை நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செலவிடும் தொகையை ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரியதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

2.கவிதை நூலைப் பற்றி பேசுகின்ற இலக்கிய விமர்சகர்கள் மூத்த கவிஞர்கள் சமகால கவிஞர்கள் அனைவரும் வெளிப்படையாக பேசுவதற்கு முன் வரவேண்டும்
சமகால கவிதை பரப்பில் உருவாகிவரும் மாற்றங்களில் குறைந்தபட்சம் ஒரு சிலவற்றையாவது பகிர்ந்து கொண்டு அதை நோக்கி செல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்ட வேண்டும்.
பொருட்படுத்தத் தக்கதாக இல்லை எனில் கடுமையாக நிராகரிக்க வேண்டும்

மேலும் பேசுவோம்….

Leave a comment