மனைவியை ஒயின் பாட்டிலில் வைத்துவிட்டவன்
நான் உங்களைப் போல் இல்லை
எனக்கு பிடிக்காதவர்களை பார்க்கப் போகும்போது
இதயத்தை வீட்டிலேயே வைத்துவிடுவேன்
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
நேற்று மாலை தோழியை முத்தமிட்டு திரும்பும்போது
நாக்கு இல்லாமல் திரும்பினேன்
எதுவும் பேசாததால்
அம்மா ஹெட்போனில் பாட்டு கேட்பதாக நினைத்து கொண்டார்
என் நல்ல நேரம் M.A.C Retro Matte லிப்ஸ்டிக் பூசிய முத்தத்தில்
காலையில் திருப்பித் தந்தாள்
வாரம் முழுவதும் பெறும் முத்தங்களை
லிப்ஸ்டிக் நிறமாகவோ வாசனையாகவோ கணக்கு வைத்துக் கொள்வேன்
எனக்கு L’Oreal Paris Colour Matte பிடிக்கும்
நேரத்தை நினைவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள
சட்டையில் இரண்டு பாக்கெட் தைக்கப் போயிருந்தேன்
தையலர் தன் மனைவியை முன்பு எப்போதோ
வைன் பாட்டிலில் வைத்துவிட்டதாக எடுக்கப் போயிருந்தார்
இப்போதெல்லாம் நினைவுகளையும் உறவுகளையும் உறுப்புகளையும்
வைத்துவிட்ட இடம் தெரியாமல் தேடுவது இயல்பாகிவிட்டது.