வட்டத்திலிருந்து சதுரமாக வெளிவருதல்

வட்டத்திலிருந்து சதுரமாக வெளிவருதல்

1.
பார்வையற்றவருக்கு ஐந்தறிவுதானா ?
தொல்காப்பியரின் வீட்டு மேல் மாடியில் குடியிருப்பவர் விவாதிக்கிறார்
தொல்காப்பியர் வீட்டு பூச்செடியின் 1610 பூக்களில் 1516 வது பூ அசைகிறது

2.
261 குறிஞ்சிப் பூக்களின் நீலம் பூசிய
கபிலரின் வீட்டுச் சுவரில் எச்சமிட்ட பறவை
235 கிரகணம் வீசும் சூரியனை விட்டு பறக்கிறது
3.
திருவள்ளுவரின் பக்கத்து வீட்டில் செத்தவனை
ஓர் அலாரம் எழுப்புகிறது
மணி: 9.26.

4.
வாய்த் தகராறில் தூக்கிட்டு இறந்தவளின்
பதினோராம் நாள் காரியத்திற்கு வந்த M. கலாஸ் நிக்கோவிடம்
“வாய் தான் உலகின் முதல் துப்பாக்கி”
350 மீ தூரத்தில் நின்று சொல்லுகிறான் இறந்தவளின் கணவன்

5.
பிரார்த்தனையில் விருப்பமில்லாதவன்
தூரம் என்ற கண்ணுக்குத் தெரியாத இடம் வரை
பிரார்த்தனையை அனுப்புவதற்கு பதிலாக
செடிகளுக்கு நீர் ஊற்றுகிறான் வாளி – சாய்ந்து நிமிரும் போது,
கடவுளின் விக்கல் சத்தத்தைக் கவனிக்காமல்

6.
இரவு – பகல் காலியான கருப்பு பெயிண்ட் டப்பா
பகலை மீண்டும் நிரப்ப உலகில் யாராவது ஒருவர்
கனவு கண்டால் போதும் என்ற ஃபிராய்டை
Non 24 தூக்க வியாதிக்காரன் துரத்துகிறான்.

7.
பேருந்தில் தாயின் தோள் மீது சாய்ந்தபடி
சிரித்த குழந்தையைப் பார்த்து சிரித்தவன்
அது அழும் போது
தனக்கு ஏன் அழுகை வரவில்லையென யோசித்து
இறங்க வேண்டிய நிறுத்தம் கடந்து இறங்குகிறான்

8.
ஒரு நாளை மேற்கண்டவாறு
கண்டபடி பிரித்தப் பிறகு
அடுத்த நாளை வேகமாக வர வைப்பது யார்

9.
இரவின் சுவை திகட்டிவிட்டது என்று
புரண்டு படுக்கும் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்

Leave a comment