தலைப்புகளின் – காலம்
ஸ்காட்லாந்து நாட்டின் வரைபடத்தில் எங்கு தொடுகிறோமோ அந்த இடத்தை பற்றி ஒரு கவிஞர் எழுதிய கவிதையை படிக்கும் அளவுக்கு stanzapoetry என்ற இணைய இதழ் கவிதை வரைபடம்-( poetery map) என்ற புதுமையான முன்னெடுப்பை வழங்குகிறது, இதே போல pover poetery என்ற இணையதளமும் அமெரிக்க கவிஞர்களைக் வரைபடத்தில் காட்டுகிறது.
நிலம் சார்ந்த கவிதைகளை எழுதிய நம் முன்னோர்களும் அதை அவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்திய முன்னோர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் கவிதையில் புதுமையை செய்திருக்கிறார்கள்
ஆங்கில கவிதை உலகில் 1920களில் தான் எஸ்ரா பவுண்ட் அவர்கள் படிமம் என்ற இயக்கத்தை தொடங்குகிறார் ஆனால்அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ளுறை இறைச்சி போன்ற உத்திகள் தமிழின் அகப்பாடல்களில் அதிகம் காணலாம்
மேற்கண்ட கருத்துகளைப் பொருத்திப் பார்க்கும்போது தமிழ் கவிதைகள் அடிப்படையில் காலம்தோறும் தனக்குள்ளேயே ஏதேனும் ஒரு புதுமையை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது எனலாம்.
அதில் எதுகை மோனை என்று தொடங்கும் ஏழு நயங்கள் மட்டுமின்றி பாடலின் பொருளும் அது தரும் அழகுக்காகவும் செந்தொடை என்ற எட்டாவது நயத்தை அமைத்தனர். அதற்கு எடுத்துக்காட்டாக மிகவும் புகழ்பெற்ற பின்வரும் சங்கப் பாடலைக் குறிப்பிடலாம்
பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே
இன்றளவும்கூட சம கால தமிழ் கவிதைகள் இந்திய மொழிகளில் எழுதப்படும் மிகச்சிறந்த கவிதைகளாக விளங்குகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி மிகச் சிறந்த கவிதைகளை எழுத இளம் எழுத்தாளர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தப் பத்தியை எழுதுகிறேன்.
என்னுடைய முதல் கவிதை தொகுப்பான
வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி – நூல் குறித்த கருத்துக்களை நான் பலரிடம் கேட்டு அதில் உள்ள குறைபாடுகளை எப்படி களைவது என்றும் அறிந்து கொண்டேன் அவற்றோடு உங்கள் கவிதை எப்படி இருந்தால் கவனிக்கப்படும் என்பதைப் பற்றி நான் படித்து தெரிந்து கொண்ட செய்திகளை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்
கவிதைகளுக்கான தலைப்பைத் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்-
சமீபத்தில் வெளிவந்து சிறந்த கவிதைத் தொகுப்புகள் ஆக பேசப்பட்ட நூல்களில் நீளமான, புதுமையான தலைப்புகள் வைப்பது அந்தக் கவிதையை படிப்பதற்கான ஆவலையும் தூண்டுதலையும் எடுத்த எடுப்பிலேயே தருவதாக அமைகின்றன. எழுதியிருக்கும் கவிதையிலிருந்து ஒரு வரியை தேர்ந்தெடுத்தல் அல்லது ஒரே சொல்லில் ஒரு தலைப்பை வைப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளை மாற்ற முயற்சி செய்யலாம்,
இதற்கு உதாரணமாக Puschcart விருது பெற்ற ஒரு கவிதையின் தலைப்பையும் எனக்குப் பிடித்தமான ஆங்கில கவிதை நூலில் உள்ள ஒரு கவிதையின் தலைப்பையும் உங்களுக்கு தர விரும்புகிறேன்
“To the Man on the Bus Who Told Me to Go Back to Where I Came From ” – By Gavin Gao
“ Poem to be found among my possession following the occasion of my sudden disappearance and analysed for clues as to where I may have gone and why” –
_ இந்தக் கவிதை இடம்பெற்ற நூலைப் பற்றியும் நூல் ஆசிரியரைப் பற்றியும் வேறு ஒரு தனித்த பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.
தமிழிலும் இதுபோன்ற கவரும் வகையிலான தலைப்புகள் பல நூல்களில் இடம்பெற்றுள்ளன. அதற்கு உதாரணமாக சமீபகாலங்களில் நான் வாசித்த நூல்களில் இருந்து சில தலைப்புகளை கீழே கொடுத்துள்ளேன் இதில் பல நூல்களில் உள்ள கவிதை தலைப்புகள் விடுபட்டிருக்கலாம்,
எனக்கு பிடித்த பெண்கள் எல்லோரும் ஆபாசத்துக்கு எதிரானவர்கள்
200 ஆம் ஆண்டை ஒரு சாண்ட்விச் தலைமுறைக்காரன் பார்க்கிறான்- சித்துராஜ் பொன்ராஜ்
சோகை பீடித்த அன்றாடத்தை விட்டு வெளியேற கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்குஅறிவுரை என்றால் திறக்கும் ஆண் வாய் அத்தனை பெரியது – பெருந்தேவி
எவ்வளவு பலம் கொண்டு ஊதியும் அதிகாரத்தின் மயிர் அசையாதது கண்டபின் ஒவ்வொரு மயிராக சுட துவங்கி விட்டவன்
தங்கவேல் முத்துவேல் ஞானவேல் வடிவேல்- இசை
ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டுவர
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் – இளங்கோ கிருஷ்ணன்
உலகத்தின்அத்தனை மகிழ்ச்சியான சொற்களாலும் எழுதப்பட்ட துயரம்
பறவைகள் குறித்த கவிதை உவமையை யாரும் புரிந்துகொள்ளவில்லை தட்சனே – வெய்யில்
லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு-மௌனன் யாத்ரீகா
சர்ரியலிசத்தனமான ஒரு பெண் முலை
டக்…டக்…டக்… டக்… டக்… -நரன்
வாரத்தின் எட்டாவது நாளில் வந்த கனவு குறிப்பு
காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன்
மீன்களை மனிதர்கள் போல யோசிப்பதை விட்டுவிடுங்கள் – பூவிதழ் உமேஷ்
நடுஇரவில் கரைந்து அழும் பூனைகளுக்கு- ஷங்கர்ராம சுப்ரமணியன்
கொஞ்சம் சுகவீனமும் சில மருந்து துணுக்குகளும் – கனிமொழி – ஜி
பிறை நிலவிலிருந்து மேகம் புடவையாக வீழ்வது- தேன்மொழி தாஸ்
உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்
செம் புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி- ஸ்டாலின் சரவணன்
முகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு
நனைந்த ஆடைகளை மழை நினைப்பதில்லை- பெரு. விஷ்ணுகுமார்
ஐந்து அப்பங்களும் இரு மீன்களும் ஒரு சிலுவையும்
வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்கு பழக்குதல் – கதிர்பாரதி
ஒரு பன்றியை வளர்ப்பதன் பின்னணியில் உள்ள இறையாண்மை எனும் கெட்ட வார்த்தை
தலைவன்தலைவி செய்ய தேவையான பொருட்கள் – ராம் சந்தோஷ்
இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள் – துரை
குதிரை முடியால் கொலை செய்யும் பெண்- நேசமித்திரன்
ஒரு செங்கொடி ஊர்வலம் சாலையை கடந்த பிறகு- ஸ்ரீசங்கர்
அதிகம் பயன்படுத்தப்பட்ட காலுறை என நாறும் ஒரு முத்தம்- சபரிநாதன்
சற்றே மேடான மூலையில் ஒடுங்கிய படி இரவைக் கழித்தல்- இயற்கை
சின்னஞ்சிறியசந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன – வே.நி.சூர்யா
நூலகத்தின்இருண்ட அறை புத்தகத்தின் பக்கங்களில் இருந்து- வேதாநாயக்
பியானோ என்பது ஒரு நீண்ட சவப்பெட்டி- சுபா செந்தில்குமார்
அவரது படுக்கையில் இருக்கும் ஒரு இறந்த மனிதருக்கு- சமயவேல் மொழிப்பெயர்ப்பு
கண்ணே நீ தான் உலகின் அன்றலர்ந்த அணிகலன்
என் சாவுக்கான இடம் டாட் காம் – அனுராதா ஆனந்த் மொழிபெயர்ப்பு
நூல் முழுவதும் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரே தலைப்போடு வரிசை எண் கொடுக்கப்பட்டு இருப்பதும் ஒரு முறையாக உள்ளது உதாரணம்
கோமாளிகளின் நரகம் கவிதைக்காரன் இளங்கோ
சில கவிதைகளுக்கு எண்களால் குறியீடுகளால் எழுத்துக்களால் தலைப்புகளை தருவதும் உண்டு
நாம்இதுவரை அறிந்திருந்த புகழ்பெற்ற வரிகளையே தலைப்புகளாககொண்ட கவிதைகளும் உண்டு உதாரணம்
உண்ண நாழி உடுக்க இரண்டு – யவனிகா ஸ்ரீராம்
இவ்வாறு அமையாமல் ஒரு தொகுப்பு முழுவதும் எவ்வித கவிதை தலைப்பு அமையாமலும் தொகுப்புகள் வெளிவந்துள்ளன உதாரணம்
சிறிய எண்கள் உறங்கும் அறை போகன் சங்கர்
உலர் இலை பக்கங்கள்- எஸ். சண்முகம்
எனவே ஒரு கவிதையின் தலைப்பு அந்த கவிதைக்கான நுழைவாயிலாக இருப்பது மட்டுமல்லாமல் வாசகனை ஈர்க்கும் ஒரு உத்தியாகும் இன்றைய கவிதைகளில் பார்க்கப்படுகிறது
இனி வரும் பதிவுகளில் கவிதையில் இடம்பெறும் சமகால கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்க்கலாம். வாசிப்பவர்கள் தவறாமல் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.