கவிதை என்னும் மின்சாரம்
ஒரு கவிதையில் ஏதேனும் இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்
கவிதை என்பது அவற்றிற்கிடையே கடந்து செல்லும் மின்சாரம் போன்றது
அந்த இரண்டு விஷயம் எவை என்பதைக் கவிஞன் தான் தீர்மானிக்க வேண்டும் அப்படி தீர்மானிப்பதில் தான் கவிஞரின் அறிவும், நுட்பமும், உழைப்பும் இருக்கின்றன.
சொற்களால் கட்டமைத்த கவிஞனால் மட்டுமே உருவாக்க முடிந்த ஒரு காட்சிப் படிமம்
அல்லது சொற்களால் உருவாக்கப்பட்ட ஒரு வெளி
அதற்கு இணை கோடாகவோ அல்லது நேரெதிராகவோ கவிஞன் சொல்ல வரும் செய்தி அல்லது கவிஞனின் மனம் கவிஞனின் உலகம் எதுவாகவும் இருக்கலாம்
சில நேரங்களில் அது வெளிப்பாட்டு உத்தி ஆக கூட இருக்கலாம்
கடுக்காய் பால்
+
கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து
=
சுவர்
கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.
[ ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.
நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.
•
{ முத்துராசா குமார் – நன்றி – அரூ இதழ் }
உத்திக்கும் கருத்துக்கும் இடையில் வைத்து கவிதையை உருவாக்குகிறார்.
அற்புதமான கவிதையாக மாறுகிறது
முதலில் உருவாகும் கட்டுமானத்தின் மீது
கொத்தனும் சித்தாளும் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்பதில் எளிய மனிதர்களின் உழைப்பு மனிதனின் அன்றாட அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைப் போன்றது என்ற ஆழமான உள் உணர்வினால் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்று சொல்கிறார்
அடுத்ததாக உள்ள
ஆணி இறங்கிய நெற்றியில்
தொன்ம புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்
என்ற பத்தியில் மிக நுட்பமான ஒரு காட்சிப் படிமத்தை உருவாக்குகிறார்
அதுமட்டுமல்லாமல் இந்த பத்திக்கு மேல் இருக்கும் அடைப்புக்குறி ஒரு புகைப்பட சட்டகம் போல் காட்சியளிப்பதும் ஒரு மாறுபட்ட அழகியல்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்
இந்தக்கடைசி பத்தியில் இறுதி வரிகள் இந்த கவிதையை மிக அற்புதமாக முடித்து வைக்கிறது
ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனதிற்கு நிறைய திறப்புகளை தரும் இந்த கவிதை மிக நேர்த்தியான பண்பினை மிக இயல்பான ஒரு புதிய உத்தியோடு இணைத்துள்ளது .
வாழ்த்துக்கள் முத்துராசா குமார்
முத்துராசா குமார், பிடிமண் (சால்ட் வெளியீடு) என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் கவிஞர்