தண்ணீர் வாக்கியம்
பேச யாருமில்லை
ஒரு குவளைத் தண்ணீர் மட்டும் அருகிலிருக்கிறது
காதை தூங்கச் சொல்லிவிட்டு
ஒரு மிடறு தண்ணீரில்
தொண்டைக்கு ஒரு வாக்கியத்தை அனுப்புகிறேன்
அவள் அழகாய் இருக்கும் நகரில்
நானும் அழகாய் இருந்தேன்
பழங்கள் ஆவியாகும் என்று யாரிடமாவது
பொய் சொல்லி நம்பவைக்க வேண்டும்
அதன் பிறகு வியாபாரியாவேன்
பறவையின் பாட்டு ஒளியாகும் காலம் வரும் என்று
நகங்களை விற்பேன்
கடல் முழுவதையும் இனிப்பாக மாற்றுவதற்கு தெரியும் என
ஒவ்வொரு விரலாய் விற்பேன்
அவளைச் சந்தித்த பிறகு மழையில் நடப்பதை
ஒரு பழக்கமாக்கிக்கொண்டேன் என
மணிக்கட்டுக்கு மேலே இருக்கும் கைகளை விற்பேன்
உதடுகளைத் தவிர எல்லாவற்றையும் விற்று
இனி எதுவுமே இல்லை என்ற நிலை வந்தால்
ஒரு விதை முளைத்து எழும்போது
கையை விரிக்கிற சிறிய மனிதன் தெரிகிறான் என்று பாடி
அவளை முத்தமிட்ட உதடுகளை விற்கமாட்டேன்
அந்த உதடுகளால் எல்லாவற்றையும் மீட்டுக்கொண்டு
அவளைச் சந்திக்காமல்
ஒரு செடியைப் போல ஒரே இடத்தில் வாழ்ந்துவிடுவேன்.