நான் கிணற்றின் வீட்டிற்குத் திரும்பினேன். நீர் மட்டம் உயர்ந்திருந்தது, கைகளை நீட்டினால் முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்.
கிணறே நீ எனக்கு குடிநீரைத் தராதே முகம் பார்க்கும் கண்ணாடியாக மட்டும் இரு என்றேன். சிற்றலையைச் சம்மதமாகத் தெரிவித்தது.
உடனடியாக கிடைக்கும் சம்மதம் குழந்தையின் வாயில் இருக்கும் இனிப்பை ஒத்தது.
கால்களை நல்ல வாடகைக்கு விட்டவன் போல நாடு நகரம் எல்லாம் சுற்றிவிட்டு ஒரு கோடையில் வந்தேன்.
கிணறு எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி இருந்தது முகம் பார்த்த கண்ணாடியை கைக்கும் கண்ணுக்கும் எட்டாத தூரத்தில் வைத்திருந்தது.
காலம் தாண்டி கானகம் தாண்டி வந்த ஒருவனை இப்படி ஏமாற்றலாமா என்றேன். என் குரலையே எதிரொலித்தது.
மற்றவருக்கு விருப்பமான ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்க முடியாத போது வாயையும் தொண்டையையும் எங்கோ வைத்து விடுவது போல கிணறு ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது.
கிணறு விளையாடுவதற்கு ஒரு பந்தை கொடுத்துவிட்டு திரும்பினேன்.
பெண்களிடம் மிக மரியாதையாக நடந்து கொள்ளும் ஒரு மரம். அன்று யாரும் வராத போதும் 41 வது பூவை எனக்காக உதிர்த்தது. ஒருமுறை நான் அழகாக இருந்ததை உணர்ந்தேன்.
உலர்ந்த தாவரங்களுக்கு எந்த உணவை கொடுப்பது என்று தெரியாமல் வெயிலில் நின்றேன். மழையை வர வைக்க தவளைகளை பிரார்த்தனை செய்ய கேட்டேன்.
சிறுவன் தீட்டிய சித்திரமாக பாதி மகிழ்ந்து இருந்தேன்.
அந்தியும் புலரியும் இரண்டு எளிய உயிரினங்களாக என்னுடன் வாழ்ந்தன. அவை ஒளிச்சேர்க்கையின் மூலமே உண்டு உயிர்த்து இருப்பைத் தக்கவைத்தன.
எவ்வளவு முட்டாள்தனமாக நீந்தினாலும் மீன் கரையை கடந்து வராது அது போல என் கால்களும் பூமியைத் தாண்டி எங்கும் போகவில்லை.
நானும் அதிகப்படியாக முட்டாளகவும் இருக்க முயன்றேன்.
நகங்களுக்குப் பதிலாக விரலை வெட்டினேன். பழங்களை எரிந்து தோலைத் தின்றேன். பறவைகளை குரங்குகள் எனவும் கடலைப் பட்டாம்பூச்சி எனவும் அழைத்தேன். என் தலைமுடிக்கு ஐநூறு வயது என்றேன்.
கார்காலம் தொடங்கியது. குதிரைகளின் காவலர்கள் கல்லாக மாறியதாக வந்த வதந்திகளை நம்பினேன். காற்று செத்துவிட்டது என்பதையும் நம்பினேன்.
இறுதியாக இரவிலும் கரும்பில் இருக்கும் இனிப்பாக என்னிடம் இருக்கும் அன்பு, விதைப்பவரின் கால்தடங்களும் தானியங்கள் என சொல்லிகொடுத்தது.
கார்காலம் முடிந்தது.
நனைந்து நனைந்து நானே மேகமாகிவிட்டது போல உணர்ந்தேன். கிணற்றின் வீட்டிற்குச் சென்றேன். நீர் மட்டம் உயர்ந்திருந்தது, கைகளை நீட்டினால் முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்.
மீண்டும் எனது கண்ணாடியானதற்கு நன்றி கிணறே என்றேன்.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் காத்திருப்பு எல்லாவற்றையும் மாற்றும் என கிணறு முதலும் கடைசியுமாய் பேசியது.🌻.