மூன்று இலட்சம் கவிதைகள்

 

 

பெண்களுக்காக ஆண்கள் எதற்காக இப்படி உருகுகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை ஆனால் இந்த உலகம் கவிதைகளுக்காக ஏன் இப்படி உருகுகிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் உண்டு. கவிதை தான் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் கண்டுபிடிப்பான மொழி உருவாக்கிய முதல் உயர்ந்த வடிவம் அதனால் தான் உலகம் கவிதைகளுக்காக உருகுகிறது.

ஆகஸ்ட் 24, 1899 இல் பியூனஸ் அயர்ஸில் பிறந்த ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்ஹேஸ் உலக இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ளார். நேற்று ஆகஸ்ட் 24 ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவின் 123 ஆண்டு பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

 

அவரின் பிறந்த நாளை அவர் பிறந்த அர்ஜென்டினா நாடு 2012ஆம் ஆண்டு முதல் வாசகர் தினமாகக் கொண்டாடி வருகிறது.

அவருடைய பிறந்த நாளை ஒட்டி நடக்கும் ட்விட்டர் மாரத்தானில் #MaratonElAleph என்ற ஹேஷ்டேக் இலும் வரும் வெள்ளிக்கிழமை வரை பதிவிடலாம் , போர்ஹெஸ் கலாச்சார மையத்தில் கல்வி மாநாடுகள், கச்சேரிகள், தியேட்டர் உள்ள புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் நூல்களுடன் “தி போர்ஹெஸ் அட்லஸ்” என்ற தலைப்பில் ஒரு புதுமை கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு பிரபலமாக உள்ள நடிகை மற்றும் பாடகி நாச்சா குவேரா என்பவர் அவருடைய நினைவிடத்தில் கவிதை வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

 

இக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக அந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கவிதைகளையும் கவிஞர்களையும் கொண்டாடுகின்றனர்.

அத்தகைய வரலாற்று கவிதை வெளியீட்டு நிகழ்வை, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அனைத்து கலாச்சார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிக்கவும் 1974 இல் தொடங்கப்பட்ட Fundación El Libro அறக்கட்டளை மற்றும் SADE (Argentine Society of Writers) ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து நாடு முழுவதும் 250 கவிஞர்களின்  கவிதைகள், மூன்று லட்சம் பிரதிகள் அட்டையில் அச்சிட்டு விநியோகித்து உள்ளனர்.

இதற்காக பியூனர்ஸ் அயர்ஸ் நகரத்தில் ஐந்து தெருமுனைகளிலும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள 60 SADE அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் கவிதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

விழா முன்னேற்பாட்டளர்கள் எந்தெந்த இடங்களில் எந்தெந்த கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பையும் முன்கூட்டியே சேர்த்து வெளியிட்டுள்ளனர்

 ஒரே நேரத்தில் மூன்று லட்சம் கவிதைகள் வெளியிடப்பட்ட அற்புதமான நிகழ்வு கவிதை வாசகனாகவும் கவிஞனாகவும் மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரைப் பற்றியும் அவருடைய கவிதைகளையும் படிக்க கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.

https://www.poetryfoundation.org/poets/jorge-luis-borges

 

 

 

தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை – 2

தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை -2

“தமிழை பொறுத்தவரை கவிதை என்பது தானாக வளரும் காடு”
என்று தமிழின் மூத்த கவிஞர் சமயவேல் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
காட்டில் புலிகளோ யானைகளோ இருந்தால் அந்தக் காட்டின் பரப்பும் வளமும் எளிதில் குறைந்து விடாதபடி அவை பார்த்துக் கொள்ளும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக புலிகள் இருக்கும் எல்லா காடுகளும் ( Tiger reserves ) அதன் வழியே ஓடும் ஆறுகளின் நீர் ஆதாரத்தை ஆண்டிற்கு 30 சதவீதத்திற்கு மேல் அதிகப்படுத்தி அருகில் உள்ள நகரங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்வதாக ஒரு ஆய்வு சொல்கிறது

தமிழ் கவிதை என்ற காட்டில் அப்படிப்பட்ட புலிகளும் யானைகளும் இல்லாமல் போய்விட்டது. தமிழ்க் கவிதை என்னும் காடு தனது பரப்பை தனது வளங்களை சுருக்கிக் கொண்டு வந்துள்ளது என்ற ஐயம் எனக்கு வலுவாக எழுந்துள்ளது.

என்னுடைய கவிதைத் தொகுப்பைப் பற்றி கருத்து சொல்ல என் நண்பரிடம் கேட்டிருந்தேன். நண்பர் சாதகங்களைச் சொல்லி விட்டு தன்னிடம் மாறுபட்ட கருத்து உள்ளதாகவும் அதைச் சொல்லலாமா என்று தயக்கத்துடன் கேட்டார். ஏன் இப்படி சொல்றீங்க என்று நான் கேட்டதும், “எதிர்மறையாக கருத்துச் சொன்னால் பலபேர் அதன்பிறகு நேரில் பார்த்தால் கூட பேசுவதில்லை கருத்து சொல்பவர்களை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்” என்று பதில் சொன்னார்.

இந்த மன ஓட்டம் உருவானதற்கு காரணம் எங்குத் தொடங்கியது? கவிதை நூல் குறித்து பேச நூல்வெளியீட்டு விழாவிற்கு அல்லது நூல் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்ட மரியாதைக்காக அந்த புத்தகத்தை பற்றி பாராட்டி பேசுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் ஆனால் பாராட்டுவதற்கு பதிலாக வானளாவப் புகழ்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் .

சமீபத்தில் 70 க்கும் குறைவான கவிதை அடங்கிய ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த கவிதை தொகுப்பைப் பாராட்டி பேசினார்கள் இல்லை இல்லை புகழ்ந்து பேசினார்கள் பேசியவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதை வாங்கிப் படித்தால் அது புதுமையோ நுட்பமோ இல்லாமல் சராசரியான கவிதைகளோடு அந்தப் புகழ்ச்சிக்கு சற்றும் அருகில் செல்லாத கவிதைகளுமே இருக்கின்றன.

அப்படி தமிழில் கவிதை முகமாக அழைக்கப்படுபவர்கள் பேசிய பேச்சுகள் அந்த கவிஞர்களின் தலையில் கிரீடங்களை வைத்துவிடுகிறது . அதனால் அந்த தொகுப்பைப் பற்றி யாராவது எதிர்மறையாக பேசினால் வாழ்நாள் முழுமைக்குமான எதிரிகளாக உருவாக்கி விடுகிறார்கள். அதனால்

ஏன் வம்பு என்று கவிதையின் புதுமை தரம் மேன்மை உத்தி முயற்சி போன்ற கூறுகளின் உண்மை தன்மையை பேசாமல் போனதால் என்ன நடக்கிறது என்றால் தன்னுடைய முந்தைய தொகுப்லிருந்து எந்த மாற்றமும் வளர்ச்சியும் இல்லாமல் அதே போல இன்னொரு தொகுப்பை வெளியிட தயாராகி விடுகிறார்கள். இது இத்தோடு நின்றுவிடுவதில்லை அதைப் போலவே எழுதும் இன்னொரு கவிஞர் அல்லது அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர் நாம் மட்டும் அதற்கு என்ன குறைந்தவரா என்று அதே தொனியோடு ஒரு கவிதைத் தொகுப்பை கொண்டுவருகிறார்.

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி- என்ற அளவுகோல் தமிழ் கவிதை நூல்களைப் பற்றி பேசுபவர்களிடம் இல்லாமல் மறைந்து போய்விட்டது என்றே சொல்லலாம்.

இந்தச்சூழலை மாற்றுவதற்கு இரண்டு கருத்துக்கள் பயன்படும் என்று நினைக்கிறேன்

 1. புதியதாக கவிதை எழுதுபவர்கள் அல்லது தங்களுடைய கன்னி முயற்சியாக கவிதை நூல் வெளியிட்டவர்கள் மூத்த கவிஞர்களிடம் கருத்து கேட்க வாய்ப்பு அமையும்போது
 2. என்னுடைய கவிதைகளில் என்னென்ன குறைகள் உள்ளன ?
 3. அதை மேம்படுத்திக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
 4. நான் அவசியம் படிக்க வேண்டிய சமகால கவிதை புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?
 5. கவிதை இயல் சார்ந்து அறிந்து கொள்ள இனிமேல் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன என்ன ?
 6. கவிதை குறித்து தெரிந்துகொள்ள யாருடைய இணையப் பக்கங்களை தொடர வேண்டும்?
 7. எந்த இலக்கிய இதழ்களை வாங்கி படிக்க வேண்டும்?
 8. கவிதை நூல் குறித்த சரியான பார்வையை தெரிந்து கொள்ள யாருடைய யூ ட்யூப் உரைகளைக் கேட்க வேண்டும்?
 9. கடந்தஆண்டில் விருது பெற்ற நூல் களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

போன்ற முக்கியமான கேள்விகளைக் கேட்டு குறைந்தது சில கேள்விகளுக்காவது பதில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இது போன்று கருத்து கேட்கிறேன் என்ற பெயரில் அவர்களை தொல்லை படுத்தக் கூடாது இதுதான் புதியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து.

பொருளாதார வாய்ப்புள்ளவர்கள் மூத்த கவிஞர்கள் தங்கள் கவிதை நூல்களை படித்து கருத்து சொல்வதற்காக கட்டணம் செலுத்தலாம். இதை நான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன் ஏனெனில் நேரம் என்பது விலை மதிக்க முடியாதது.

சிலருடைய கவிதை நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செலவிடும் தொகையை ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரியதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

2.கவிதை நூலைப் பற்றி பேசுகின்ற இலக்கிய விமர்சகர்கள் மூத்த கவிஞர்கள் சமகால கவிஞர்கள் அனைவரும் வெளிப்படையாக பேசுவதற்கு முன் வரவேண்டும்
சமகால கவிதை பரப்பில் உருவாகிவரும் மாற்றங்களில் குறைந்தபட்சம் ஒரு சிலவற்றையாவது பகிர்ந்து கொண்டு அதை நோக்கி செல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்ட வேண்டும்.
பொருட்படுத்தத் தக்கதாக இல்லை எனில் கடுமையாக நிராகரிக்க வேண்டும்

மேலும் பேசுவோம்….

தமிழ்க் கவிதையின் இன்றைய நிலை-1

தமிழ்க் கவிதைகளின் இன்றைய_நிலை

1.கவிதை புத்தகங்கள்பிரசுரம் செய்வதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் தயங்குகின்றன.

 1. நாவல் சிறுகதைகள் போன்றவற்றிற்கான பிரசுர வாய்ப்பு பரவலாகி உள்ளது. இந்த இரண்டுகருத்துக்களை ஒட்டி கவிதைகளுக்கான இடம் ஏன் சுருங்கிப் போனது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
  கடந்த வாரம் தமிழின் மிக முக்கிய பதிப்பகமான யாவரும் பதிப்பகத்தின், #யாவரும்.காம் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது, அதில் இணைய இதழுக்கு சிறுகதைகள் கட்டுரைகள் (மட்டுமே) அனுப்ப கேட்டிருந்த செய்தியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, ( அவர்கள் கவிதையைப் புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லவில்லை) கவிதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டதா என்று எண்ணத் தோன்றியது.
  தமிழ் கவிதை வாசகர்களும் சமகால தமிழ் கவிதையின் ஊடாக செயல்பட்டு கொண்டிருப்பவர்களும் கவிஞர்களும் இதை ஒரு முக்கிய இலக்கிய போக்கிற்கான தொடக்கமாக கருதவேண்டியுள்ளது. இப்போது மேற்கண்ட இரண்டு கருத்துகளையும் இதனோடு பொருத்திப் பார்த்தால் கவிதை சார்ந்த ஒரு கருத்தோட்டத்தை இன்று நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
  You talk me in riddles
  I will answer you in rhymes
  I love you for a little
  I will you love for all time

( #Sea_of_strangers- By #Long_leav)
குறுகிய அளவிலான எளிய கவிதைகள் மூலம் அதிகப்படியான வெகுஜன வாசக பரப்பை பெற்ற லாங் லீவ் எழுதிய மேற்கண்ட கவிதை புத்தகம் ( Lallaby also) அதிகப்படியாக ஆங்கிலத்தில் விற்பனை ஆனாலும் பெரும்பாலான மேலை நாட்டு அறிஞர்கள் அது போன்ற கவிதைகளை எழுதாமல் மிகுந்த தீவிரத் தன்மையுடன் எழுதி வருகின்றனர் ,
மேலை நாடுகளில் கவிதையை அடுத்த தலைமுறை இடம் கொண்டு செல்வதற்கு அங்கே பல்வேறு வகையான திட்டமிடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதுவும் பள்ளி அளவிலிருந்து இளம் கவிஞர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குஅதுபோன்றவேலைகளை செய்ய வேண்டியது மிக முக்கியமான தேவையாக படுகிறது.

நாவல்களும்சிறுகதைகளும் கவிதை புத்தகங்களை விட அதிகமாக வாங்க படுவதாக சொல்லப்படும் கருத்துகளில் உண்மை இல்லாமலும் இல்லை குறிப்பாக மொழிபெயர்ப்பு நாவல்கள் சிறுகதைகள் முன்பு எப்போதையும் விட அதிக அளவில் விற்பனையாகும் கருத்துக்கள் சொல்லப் படுகிறது.

இதைப்பற்றி தொடர்ந்து அதிகப்படியாக நாவல்களையும் சிறுகதைகளையும் வாசிக்கும் என் நண்பர்களிடம் விசாரித்தபோது நாவல்களில் இப்போது பல்வேறு வகையான சோதனை முயற்சிகளும் கதைகளும் நிலப்பரப்புகளும்தமிழ் வாசகர்களுக்கு அதிகப்படியாக தேவைப்படுவதாக அவர் கூறினார் அதனால் அத்தகைய புள்ளிகளை தொடும் நூல்கள் விற்பனை ஆவதாக மேலும் கூறினார். 
அது எனக்கு சரி என்று பட்டதாக தோன்றியது ஏனெனில் நாவல் சிறுகதைகளில் தமிழ் இலக்கிய வாசக மனம் எத்தகைய புதிய கோணங்களையும் களங்களையும் தேடும் மனநிலையில் இருக்கிறதோ அதைப் போலவே கவிதையிலும் அத்தகைய புதிய மொழியையும் களத்தையும் தேடும் மனம் வெளிவரும் கவிதை புத்தகங்களை ஒன்றிரண்டை தவிர மற்றதை வாங்கிப் பார்த்து சலிப்படைந்து விடுகிறது. 

இதைப்பற்றி கவிதை எழுதாமல் தொடர்ந்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் என் நண்பனிடம் கேட்டபோது அட்டைகளை எடுத்துவிட்டால் பெரும்பாலான கவிஞர்கள் புத்தகம் ஒரே மாதிரியாக இருப்பதாக சொன்னார். அதுமட்டுமில்லாமல் கவிதைகளில் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தனக்கென்று ஒரு சட்டங்களை வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக சலிக்காமல் எழுதுவதாகவும் அதை படிக்கும்போது நூலின் முடிவு வரை ஆர்வம் தொடர்பு இல்லை என்றும் சொன்னார். 

நாவல் கவிதை சார்ந்து மேற்கண்ட இரண்டு நண்பர்களின் கருத்துக்களை ஒருசேர சேர்த்து பார்க்கும்போது முதலில் குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களுக்கும் வலு சேர்ப்பதாக அமைவதாக #நான் எண்ணிக்கொண்டேன்.

எனவே தமிழ் கவிதை சூழலில் இயங்கும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இதை ஒரு முக்கிய செய்தியாக எடுத்துக்கொண்டு தங்கள் கவிதை மன நிலையை மேலும் மேம்படுத்திக் கொண்டு புதிய வகை களையும் களங்களையும் சோதனைகளையும் கவிதை வெளிகளையும் மொழி அமைப்புகளையும் புதுமையானதாகவும் ரசிக்கும்படியாகவும் அனைவரையும் கவரும் படியாகவும் முன்வர வேண்டும். அப்படி செய்தால்தான் தமிழ் கவிதை உலகம் சார்ந்து தற்போது உருவாகியிருக்கும் ஒரு தேக்கம் உடைபடும்.

தொடரும் …