முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

 

 

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

 

எனக்குக் காதலிகள் இல்லை என்று சொன்னால்

யாரும் நம்புவதில்லை

இருப்பினும்

என் கடந்தகாலத்தில் மட்டும் இருக்கும் பெண்களைக் காதலிக்கிறேன்

வாழ்வு மறப்பதற்கு நிறைய அனுமதிக்கப்பட்டது,

இதில்

அன்பு ஒரு வகை மாமிசம்

அதை இறந்தவனைப் போல சாப்பிடலாம்.

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

உரையாடுபவர்களை A மற்றும் B என குறியீடுகளாக மாற்ற வைக்கிறது

இதை விட அதிர்ச்சி எதுவென்றால்

இதயம் இயற்கைக்கு மாறாக இயங்கத் தெரியாத விலங்கு போல நடந்து கொள்வதுதான்.

 

 

திறப்பு

கண்களை இறுக மூடியிருக்கும் துறவி

வேறு யாராலும் திறக்க முடியாத அளவு

மெல்லியதாய்க் கண் திறந்து பார்த்துக்கொள்கிறார்

கேனி

நான் காகிதத்திலிருந்து பிறந்து வந்தேன் என்று
சொல்லித் திரியும் கேனி
ஒரு காகிதத்தை
அவளின் அம்மா என்று சொல்லிக்கொண்டு திரிகிறாள்
உற்றுப் பார்த்தால்
அக்காகிதம் இரண்டுபக்கமும் வெற்றுப் பக்கமாக இருக்கிறது.
காகிதத்தில் ஒரு பூட்டிய கதவு இருப்பதாகவும்
அதன் சாவியைத் தேடுவதாகவும் அடிக்கடி புலம்பியவள்,
இன்று
தினமும் அவளைப் பார்த்து
குலைத்துத் திரிந்த நாயை மடியில் வைத்திருக்கிறாள்
அவளிடம் காகிதம் எதுவும் இல்லை.
சாவிகள் உலோகத்தால் செய்யப்பட்டதாகவோக
உயிரற்றதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லைதானே?

பியானோவை இசைக்கும் மழை

வெட்ட வெளியில் இருக்கும் பியானோ மீது
ஆலங்கட்டி மழை பெய்கிறது
மழையைக் கேட்டு இசையைப் பார்க்கும்
சிறுவன் கண்களில்
இரண்டு தொட்டி மீன்கள் இசைக்கின்றன.
எனவே
திறந்து இருக்கும் சவப்பெட்டியில் விழும் மழைத்துளிகளால்
சடங்குகளுக்குப் பிறகு இறந்தவன் எப்படியும் முளைத்துவிடுவான்


பேஸ்புக்கில் இரண்டு கவிஞர்கள்



நான் வேறு யாருமல்ல
வானில் பறக்கும்போது
குளத்தில் தெரியும் பறவைகளை உண்பவன்


நீயும் வேறு யாருமல்ல
குளத்துக்கு மேலே பறவைகள் எதுவும் பறக்காதிருக்க
காவல் காப்பவள் அவ்வளவே


நாம் போன பிறகு
பறவைகள் அதே குளத்தில் நீர் அருந்துகின்றன
நாம் நண்பர்கள் என்று நினைத்து.

தாத்தாவின் சொற்றொடர்கள்

தாத்தாவின் சொற்றொடர்கள்

 

அந்த வயதான மனிதனுக்கு அதிகபட்சம் ஐந்து வயதுதான் இருக்கும்”


இப்படி ஒரு தொடரை தாத்தா தினமும் சொல்லிவிடுவார்.


அப்போது கடவுளை விட அழகாக இருப்பார்.


நுணாமர நுகத்தடி போல இருக்கும் பாட்டி
பல் துலக்கி ~ வாயைத் துவைத்தது போல கொப்பளிப்பதாகக் கூறி தாத்தா சிரிப்பார்


அப்பாவும் அப்பபடி தாத்தா சொன்ன ஒரு வாக்கியத்திலிருந்துதான் பிறந்திருக்கிறார் அவ்வளவு சமநிலையின்மை இருக்கிறது அவர் இயல்பில்


தாத்தாவின் குடிசையில்
தொங்கும் குட்டித்தழைகளோடு ஒரு வெள்ளாட்டுக் குட்டியே கதவாகப் இருந்தது.


விரல்களை வைத்துக்கொண்டு உள்ளங்கையை விற்றுவிடு என எதிரே வந்தவரிடம் சொல்லிவிட்டு தாத்தா ஏர் கலப்பையோடு நடந்ததைதான் கடைசியாகப் பார்த்தேன்.


தாத்தா படுத்தப் படுக்கையாகிப் போன போதும்
அவர் உடலில் விளைச்சல் தரும் பகுதியாக வாய் மட்டும் இருந்தது.


இன்று காலை என் மனைவியிடம்
“நேற்று இரவு யாரோ என் தலையை இந்த உடம்பில் பொருத்திவிட்டு போனது போல உடல் அசதியாக இருக்கிறது” என்றேன்


அருகிலிருந்தவர்கள் வாயை மூடிய பிறகும் தலைமுடியாலும் சிரித்தார்கள்.


தாத்தா எனக்குச் சமீபத்தில் வசிக்க ஆரம்பித்திருப்பது போல உணர்ந்தேன்


இனிமேல்


ஒரு விண்மீனின் கடவுள் நான்,


சரி சரி.. நீங்களும் ஏதோ ஒரு விண்மீனின் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.

ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது

ஒருவரை அதிகமாக காதலிப்பதால் விரைவில் வயதாகிவிடுகிறது

அன்பே! உனக்கு போதுமான மனிதனாக இல்லாதற்கு வருந்துகிறேன்

என்னைப்பற்றிய புத்தகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களைப் படித்திருக்கிறாய்.

யாரைப்போலவோ நான் தோன்றக் கூடும் என்ற பயத்தில்

மீண்டும் மீண்டும் வந்தபோதும் உன் வீட்டின் கதவைத் தட்டாமல் அதன் மீது பின்வரும் பல குறிப்புகளை எழுதியிருக்கிறேன்


உப்பு நுனியிருக்கும் விரல்கள் உன்னுடையவை


கடுகு விதை போன்ற அழகான பெண் நீ


ஒரு தும்பியின் வாலை ஊசியாகக் கொண்டு ஆடை தைக்கும் பார்வையற்ற பெண் நீ


ஆமணக்கு இலை காம்பு குழலில் புகைப்பிடிக்கும் கிழவன் நான்


நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அவ்வளவு வயதாகிவிடுகிறது


நம் காதல் காகிதத்தில் செய்த வீடு அது அமைதியாக இருக்க காற்று நீண்ட நேரம் உதவாது.


குளிரை சந்திக்காத மேகம் மழை என்ற சொல்லை கற்பனை கூட செய்யாது


தண்ணீரின் மீது படுத்து தூங்கும்போது வரும் எல்லா கனவுகளும் பலித்துவிடும்
….
….
பிறகு நாம் திரிந்த தோட்டத்தின் எல்லா இடத்திலும் நின்றேன்

தோட்டத்தின் எல்லா காற்றையும் சேகரித்தேன்

அரை முட்டாள் போல அவற்றை அங்கேயே விட்டுவிட்டேன்


மேகங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும்

கற்களின் பின்னால் ஒளிந்துகொள்ளவும் தேர்ந்தவன் போல

செல்கிறேன் ~ மறைகிறேன்.

கடவுளுக்கு வயதாகட்டும்

கடவுளுக்கு வயதாகட்டும்

வருத்தங்களுடன் புறப்பட்ட பெண்ணின் பாடலில் இருந்த மலர் அசைந்தபடியே இருந்தது

தனக்குப் பிடித்தமானவர்களின் நிழலைச் சேமிக்கும் சிறுமி வெளிச்சமான உள்ளங்கை காட்டி அழைத்தாள் கரப்பான்பூச்சிகள் நகைச்சுவை வடிவம் மிக்கவை என்றாள்.

பெண்ணின் வருத்தங்களின் அருகில் கரப்பான்பூச்சி பற்றிய ஒரு சித்திரம் வந்ததும் மழை பற்றி அப்பாவியான எண்ணம் உடைய அவள் வருத்தங்களை அணிகலனாக மாற்றுவது குறித்து யோசித்தாள்.

முதலில் கண்களில் தொடங்கினாள் அந்தி சூரியனின் சாய்வை எடுத்து பூசினாள்

மனதை காகிதம் போல பரப்பினாள் பெயரில்லாத உயிர்களை நேசிப்பதாக எழுதினாள்

கூந்தலைக் களைத்தாள் சிங்கங்களின் இனச்சேர்க்கை பார்க்க ஆவல் கொண்டாள்

வளையல்கள் உடையும்படியாக இசைத்தாள் : அவளிடம் இருந்த பழம்பாடலைப் பாடினாள்.

மழை பெய்யாமல் போனால் ஏழைகளுக்குப் பதிலாக கடவுளுக்கு வயதாகட்டும்

~ உரக்க கத்தினாள்:சிரித்தாள்

நடந்தாள்

எல்லா பாதையிலும் அவளோடு உரையாட ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்

பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.

பூமியில் பெரும்பாலும் எல்லோரும் பழையவர்கள் காதலிக்கிற இரண்டு பேர் மட்டும் புதியவர்கள்.



என் பெயரைப் புதுமையாக உச்சரித்தபடி

இறந்தவர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்றாள்.


கவலைப்படாதே நான் இறந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை விற்கிறேன் என்றேன்.


எப்போதும் போலன்றி உள்ளங்கை அளவு அதிகம் விரிந்திருந்தது வானம்
எப்போதும் போலன்றி முழங்கால் அளவு ஆழம் கூடியிருந்தது கடல்
எப்போதும் போலன்றி கண் சுருக்கும் அளவு ஒளி கூடி இருந்தது சூரிய சாய்வில்


கடவுளையும் காதலியையும் சமமாக நடத்துவதற்கு சிறந்த வழிமுறை கொஞ்சமாக மது அருந்துவதுதான்


அதிலும் காகங்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட மது என்றால் கொஞ்சம் பரவாயில்லை


அப்போதுதான் மரக்கிளையைப் பறவைகளின் நாற்காலி என்று சொல்லமுடியும்.


துப்பாக்கிச்சூடுகளைப் போல தீவிரமாக குரைக்கும் ஓநாய்களின் இயல்பு என் வயிற்றுக்கு எப்படி வந்தது?
காதலியிடம் கேட்டேன் : கொஞ்சம் மது அருந்தியிருந்தேன்.


பூனையின் கண்களை அதிஷ்ட கற்களாக பெற்ற அவள்
விதை நெல்லில் இருக்கும் நீரைப் பருகு என்றாள்.


எல்லா தாய்வழி கோபங்களும் நீங்கிவிட

நீண்டகாலமாக சிறுவனாக இருந்து
நான் முளைப்பதை நானே பார்த்தேன்

காதலில் இருந்து

வாசகசாலையில் என் கவிதைகள்

அவரவர்_முகம்

அவரவர் முகம்

சதுரத்தின் மீது

ஒரு சிலுவை  விழுந்ததும்

உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின

ஒன்றில் தேவன்

ஒன்றில் சாத்தான்

மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்-

ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர்

சிலுவையை அருகிலிருந்த

வட்டத்தின் மீது நகர்த்தியதும்

அதிலிருந்து உருவான  விசிறிகளை  எடுத்து

நால்வரும் காற்று வீசினார்கள்

அப்போது,

அடுத்த சில மூச்சிற்குப் பிறகு

இறப்பவனைப் போல 

காற்று  திக்குமுக்காடியது

தேவனும் சாத்தானும் முறைத்தபடி இருந்தார்கள்

எங்களை முடிந்தால் பிடியுங்கள் என

செவ்வகங்களை மாட்டிக் கொண்டு ஓடிய சிறுவர்கள்

வீட்டுப் பாடம் எழுதிய   சிலேட்டுகளில்

ஆளுக்கொரு  உருவம் கிறுக்கியிருந்தார்கள்

வீடுவரை துரத்திவந்த  தேவனும் சாத்தானும்

இரண்டு உருவத்திலும் அவரவர் முகத்தையே கண்டார்கள்.

மனிதனை மீனாகவும் மீனை மனிதனாகவும் மாற்றுதல்

தண்ணீரில் விழுந்த அவனிடம்

 “நீயும் மீன் தான் ~  நீயும் மீன்தான் ”  என

பல முறை சொன்னபிறகுதான் நீந்தத் தொடங்கினான்

அவனை மீனென நம்பவைக்க

சுண்டு விரலைப் புழுவென காட்டி

கையை தூண்டில் போல வீச வேண்டி இருந்தது. 

நீந்தி கரையேறிய பிறகு

அவனை மனிதன் என்று நம்பவைக்க

பெரிய சிரமமேதும் படவில்லை

தள்ளிவிட்டது நான் தான் என்று சொன்னேன்

என்னைத் துரத்தியபடி மனிதனாகி விட்டான்.

மேலும் வாசிக்க…
https://www.vasagasalai.com/kavithaikal-poovithal-umesh/

கவிதை கவனிக்கும் கலையில் பயிற்றுவிக்கிறது.


கவிதையின் உண்மையான மதிப்பு உடனடியாக உணரக் கூடிய தனிப்பட்ட நன்மைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலம். ஆனால் நம்முடைய உடனடி சூழ்நிலைகளுக்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு வழி கவிதை . அப்படி சிந்திப்பதற்கு வாய்ப்பு அமையும் நாள் மிக அழகானது .

ஒரு கவிதை நம்மை எப்படி கவர்கிறது – கவிதையை ரசிப்பதற்கு தயாராக இருக்கும்போது அது எளிதாக நடக்கிறது. இயல்பிலேயே இரசனை சார்ந்துதான் நான் கவிதைகளைப் படிக்கிறேன் அதிலும் எளிமை உருவாக்கும் அழகு எந்த பேருருவாளும் உருவாக்க முடியாது என்று நினைப்பேன்.
கவிதையில் அமையப்பெறும் உரையாடல் தன்மை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்,

“நான் கண்ணீரை எடுத்துவைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது “

  • அப்துல் ரகுமானின் இந்த வரிகள் உள்ள “போட்டி” என்ற கவிதையைப் பல முறை படித்து ரொம்ப ரசித்திருக்கிறேன் , இந்த ரசனை எனக்கு எங்கிருந்து வந்தது என்றால் கிராமங்களில் கூலி வேலை செய்பவர்கள் அலுப்பு தெரியாமல் இருக்க எதிர்பாட்டு பாடுவதை, விடுகதை போடுவதை அருகிருந்து கேட்டு வளர்ந்ததால் இது மிக நெருக்கமாகிவிட்டது. அப்படியான ஒரு தன்மையுள்ள ஒரு கவிதைதான் நான் மிகவும் ரசித்தது.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும் பாடுவதுபோல புனைவை அழகான கவிதையாக சித்துராஜ் பொன்ராஜ் எழுதியிருக்கிறார். அதில் தொழிற்படும் வடிவமே முதலில் எனக்குப் பிடித்தது.
கடற்கன்னி பாடுவதைப் பெரிய பத்தியாகவும் பறவைகள் பாடுவதை சிறிய பத்தியாகவும் அமைத்துள்ள விதம் கடற்கன்னி மற்றும் பறவைகளின் உருவ ஒப்பீடு போல எனக்கு முதலில் தோன்றியது பிறகு கவிதை நடக்கும் இடம் கடற் புறம் என்பதால் அலைகளின் உயர்வு தாழ்வு (அகடு – முகடு) போல பத்திகளின் அமைப்பு இருப்பதாகவும் பட்டது.
முதலில் இருக்கும் கடற்கன்னியின் பாடல் வெயிலில் தொடங்கி நிழலோடு முடிகிறது இந்த முரண் இத்தோடு முடிவதில்லை உள்ளுக்குள்ளே பல படிநிலைகளில் தொடர்ந்து வருகிறது. இக்கவிதை உருவமின்மையை தொடர்ந்து முன்னெடுக்கிறது அதன் தொடக்கமாக உருவமில்லாத வெயில் அமைகிறது.

இரண்டாவது பத்தியில் கடல் பறவைகள் பாடுகின்றன – அதில் கடலுக்கு நெய்தல் என்ற பெயர் எப்படி வந்தது என்ற புனைவு மிக அற்புதமாக உள்ளது. அது கடலுக்கு உருவமில்லை என்று முடிகிறது.

மீண்டும் கடற்கன்னி பாடுகிறாள் கடல் மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி என்ற உவமை மிக அழகானது அதில் முகம் பார்ப்பது யார்? அதன் எதிரொளி எங்கு செல்கிறது என்பதற்கான பதில் இன்மை என்பதாகிறது .ஒருவேளை வானம் என்றால் அதற்கும் உருவமில்லை. மேலும் இது முதல் பாட்டில் உள்ள பிரகாசமான வெயில் என்பதன் தொடர்ச்சியாக இருக்கிறது .
கடலுக்கு உருவம் இல்லை என்பதைப் பறவைகளை ஒட்டி கடற்கன்னியும் வழிமொழிகிறாள் ஆனால் ஒரு படி மேலே சென்று கடலை திணை மறுவிய வெற்றிடமான ஒரு மாய நிலம் என்று முடிக்கிறாள் இப்போது வாசிப்பவருக்கு கடற்பறவைகள் என்ன பாடும் என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

தன்பாட்டில் மனிதர்களை ஏற்றிவைத்த கடற்கன்னிக்குப் பதில் தருவது போல் பறவைகள்,
“மனிதர்கள் காற்றிலேறி வருவார்கள்
கவனம் கவனம்
காற்றும் திணை இல்லாத இடம்”
என்று புதிய பதிலைத் தருகிறது . இது கடற்கண்ணி கடலை திணை மறுவிய நிலம் என்று கூறியதற்குப் பதிலாக அமைகிறது.

பறவைகள் இப்படி பாடியதைக் கேட்ட கடற்கன்னி பறவைகள் எச்சரித்த மனிதர்களைத் திணை மறந்து தன்னிடம் வர வைப்பதற்காக கடலின் மூச்சைத் திணற வைக்கும் கர்ப்பத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறாள்
முறையில் திரிந்த நிலத்தைப் பாலை என்று சொல்வது போல கடலுக்குள் பயன்படாமல் இருக்கும் மலைகளையும் பாசிகளையும் உடைய நீர் நிலத்தைப் பாலை என்று சொல்லுகிறாள். இறுதியாக கடலை போதாமை என்று சொல்லி ஆசையை ஒப்பிடுகிறாள்.
இறுதியாக பறவைகள் பாடுகின்றன,
“கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம் கவனம்”
இந்த உரையாடல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் இல்லை அது தொடரும் அதைத் தொடர யார் வேண்டுமானாலும் வரலாம் இந்தக் கவிதையை வாசிக்கும் நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம்.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும

சித்துராஜ் பொன்ராஜ்

கடற்கன்னி பாடுகிறாள்:

இதோ பிரகாசமான வெயில்:
கழுத்தின் பின்புறமாய்த் தூக்குக் கயிற்றின் கனத்தோடும் அசௌகரியத்தோடும் புரள்கிறது.

கடலின் கர்ப்பத்தை என்னுடன் இழுத்து வந்து போட்டதுபோல்
பொன்னிறமான மணலில் சிதறிக் கிடக்கும் நுரைகளின் மத்தியில் கிடக்கிறேன்.

நுரைகளைப்போலவே கடலின் கர்ப்பமும் அரூபமானது.

கடல் நிழல்களோடு கூடித் திளைக்கும் சூரியக் கிரணங்களால் சூலுற்றுத் தன் கர்ப்பத்தைத் தானே யுக யுகாந்திரமாய்க் கலைத்துக் கொண்டிருக்கிறாள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

நெய்வாசக் குழலுடைய ஒரு பெண் ஆயிரமாயிரம் மனிதர்களின்
காலடிகள் தட்டிப்போட்ட மணற்பரப்பில் அமர்ந்தபடியே கருநீல நிறத்தில்
பாடல்களை நெய்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்கள் வெவ்வேறு சமயங்களில் நெய்த பாடல்களே கடல்.

அதனால் கடலைச் சார்ந்திருக்கும் பகுதியும்
நெய்தல் என்று அழைக்கபடுகிறது.

கடலுக்கு உருவமில்லை.

கடற்கன்னி பாடுகிறாள்:

கடல், மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி.

அதற்கு உருவமில்லை.

அதன் உருவமின்மையின் மீதுதான் மனிதர்கள்
ஆழமான பெருமூச்சுகளின் ஓசையோடு
சலித்துத் திரும்பும் பாய்மரக் கப்பல்களின் வடிவத்தில்
தங்கள் போதை மிகுந்த ஆசைகளை ஏற்றி வைக்கிறார்கள்.

இந்தப் போதாமை எனக்கு வருத்தம் தருகிறது.

கடல், திணை மருவி வெறும் வெற்றிடமாகிப் போன மாய நிலம்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

மனிதர்கள் காற்றிலும் ஏறி வருவார்கள்.
கவனம்! கவனம்!
காற்றும் திணை இல்லாத இடம்.

கடற்கன்னி பாடுகிறாள்:

இடுப்புக்கு மேலே மனிதர்களின் உடம்பும்,
கீழே மீனின் வாலும் உடைய சந்ததியை உருவாக்கப் போகிறேன்.
கடலின் மூச்சுத் திணற வைக்கும் கர்ப்பத்தை
எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு.

ஒரு நாள் மூச்சுத் திணறி மனிதர்கள்
திணைகளைத் துறந்து என்னிடம் வரப் போகிறார்கள்.

இதோ கடலுக்கடியில் மலைகள்,
பவளங்கள் வளர்ந்திருக்கும் காடுகள்,
வயல் வரப்புகளாய் விரிந்திருக்கும் வாசனையுள்ள மண்,
நொடிக்கொரு தரம் இருப்பிடமின்றி
அலைந்து கொண்டிருக்கும் பாலை.

இது, கடல்.

இதுவே போதாமை.
அதனால் இதனை ஆசைக்கு உவமையாய்ச் சொல்கிறார்கள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம்! கவனம்!

எதிர்காலத்தில் இதுவே உங்கள் பாடலாய் இருக்கப் போகிறது.//

நன்றி: யாவரும்.காம்

சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். பாரதியார் போல பதினொரு மொழிகள் தெரிந்தவர் . ரஷ்ய மொழியில் இருந்தும் ஸ்பானிஸ் மொழியில் இருந்தும்இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் விரைவில் தனிநூலாக வர உள்ளன. இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இவருடைய ஆங்கில கவிதை தொகுப்பும் ஆங்கில மொழியில் சிறுகதைத் தொகுப்பும் வெளிவர உள்ளன. இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு இத்தாலியின் ஆவது சுலபம், ( அகநி ) இவருடைய மரயானை நாவல் (வம்சி) பரவலான கவனம் பெற்றுள்ளன.

அவருடைய வலைப்பக்கம்

https://sithurajponraj.net/

.

.