Allpoetry.com இணையத்தில் வெளிவந்துள்ள என் ஆங்கில கவிதைகள் வந்துள்ள இணைப்பை பகிர்கிறேன்
Category: மொழிப்பெயர்ப்பு கவிதை
ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள்- குகதர்சனி (தமிழ்க்கிழவி)
01. என் ஓடம் கரையினிலே
என் ஓடம் கரையி னிலே,
என் கப்பல் கடல் தனிலே;
போகமுன், இந்தா என்நண்ப!
இரட்டை ஆயுள்வரம் எய்திடுக!
எனை நேசிப்போர்க்கு இங்கோர் நீண்ட பெருமூச்சு,
எனை வெறுப்பார்க் கிங்கோர் இனிய புன்முறுவல்;
என்மீது வானைப்போல் எதுபரந் திடினும்,
இதயமுண் டெனக்கது எதையுந் தாங்கிடுமடா!
கடல்மாதா எனைச்சுற்றி ஆர்ப்பரிப்பா ளேனும்,
கருணையுடன் என்னையவள் தாங்கியுமே செல்வாள்;
காலத்தால் பாலையதும் எந்தனையே சூழும்
கருணையதால் தருசுனைநீர் எந்தனையும் ஆளும்.
கரையதில் நாவறண்டு நான் வாடினாலும்,
கனிநீர் ஊற்றதன் கடைசித்துளி ஆனாலும்,
எனதறிவு மங்கி இன்னுயிர் சோர முன்னம்
உனை நினைந்தே அதைஅருந்தி உடன்சாந்தி கொள்வன்.
தேவனுக்கு உவந்தளிக்கும் திராட்சை ரசம் போலும்
தேடுதற்கரிய இந்நீரூம் உனக்கு ஈவன்;
ஆனஎன் அகத்துஅமைதி ஆயுள் தனோடிரட்டிப்(பு)
ஆகும்உனக் கென்நண்ப! அகமாரச் சொல்வன்!
எழுதியவர்: பைரன் பிரபு (1817)
தமிழில் : குகதர்சனி (19.04.2020)
மூலம் : ‘ஆக்ஸ்போர்டு உலக கவிதைகளின் நூலகம்’ நூல் (1946).
குறிப்பு :
‘என் நண்ப’ என்பதற்கு மூலக் கவிதையில் பைரன் பிரபு தனது நண்பரான தோமஸ் மோரைக் குறித்துள்ளார்.
02. காதலின் தத்துவம்
நீரூற்றுகள் ஆறுகளுடனும்,
ஆறுகள் கடலுடனும் சங்கமிக்கின்றன;
சொர்க்கத்தின் பவனங்கள் என்றென்றும்
இன்னுணர்வில் ஒன்றிணைகின்றன;
இவ்வுலகில் தனித்ததென்று ஏதுமில்லை;
எல்லாமும், தெய்வீக நியதிப்படி
ஒன்று இன்னொன்றினதாக
இரண்டறக் கலந்திருக்க,
நான் மட்டும் ஏனஃது உன்னுடனில்லை?
பார்! மலைகள் வானளாவி
வானகத்தை முத்தமிடுதலை;
அலைகள் ஒன்றுடன்
ஒன்று ஆரத்தழுவுதலை;
சூரிய ஒளிக்கதிர்கள்
பூமி தழுவுதலை;
சந்திரக் கிரணங்கள்
கடலை முத்தமிடுதலை;
என்னை நீ முத்தமிடாதபோது
இந்த முத்தங்களுக்கெல்லாம்
மதிப்புத் தானேது?
எழுதியவர்: ஷெல்லி
தமிழில் : குகதர்சனி (02.02.2019)
மூலம் : த கொலின்ஸ் புக் ஆஃப் பெஸ்ட் லவ்ட் வேர்ஸ் (1986).குறிப்பு: தமிழ் கலாச்சாரத்துக்கும், இன்றைய உலகின் ‘ஏற்புடைய நடைமுறைக்கும்’ ஒவ்வாத இருவரிகள், மொழி பெயர்ப்பில் தவிர்க்கப்பட்டுள்ளன.
03. மரங்கள்
மரத்தைப் போன்றதோர்
அழகிய கவிதையை
(என் வாழ்க்கைக் காலத்தில்)
நானொருபோதுங் காணமாட்டேன்
என்றே எண்ணுகிறேன்.
பசித்திருக்கும் மரச்சிசுவின் வாய்
பூமித்தாயின் அமுதஞ்சுரக்கும் முலைகளில் பொருந்தியிருக்கும்;
நாள் முழுவதுங் கடவுளைப்
பார்த்துக் கொண்டிருக்கும் மரப்பெண்ணாள்
பிரார்த்தனை செய்வதற்குத்
தனது இலைக்கரங்களை உயர்த்துவாள்;
முதுவேனில் காலத்தில்
ராபின்களின் கூட்டைத்
தலையணியாய் அணிந்து கொள்வாள்;
அவள் மார்பின் மீது
பனி மெல்லெனப் படர்ந்திருக்கும்;
அவள் மழையுடன் கூடுவாள்.
என் போன்ற முட்டாள்களால்
கவிதைகள் படைக்கப்படக் கூடும்;
ஆனால்,
ஒரு மரத்தைச் சிருஷ்டிப்பதென்பது
கடவுளுக்கு மட்டுமே
சாத்தியமாவதொன்று.
எழுதியவர் : ஜாய்ஸ் கில்மர்
தமிழில் : குகதர்சனி (12.04.2020)
மூலம் : ‘கவிதை’ (Poetry) மாத இதழ் (ஆகத்து,1913)
குகதர்சனி (தமிழ்க்கிழவி)
இயற்பெயர் குகதர்சனி (றஜீவன்) பாலசுப்பிரமணியம். புனைபெயர் தமிழ்க்கிழவி. ஈழத்தில், யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். பிரித்தானியாவில் வசிப்பவர். மனிதவள ஆலோசகர், தமிழ்/ஆங்கில மொழி பெயர்ப்பாளர். தமிழில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டியில் கவிதை(திறமைச் சான்றிதழ்,2005), சிறுகதை(2ஆம் இடம், 2006) மற்றும் சிறுகதை மொழி பெயர்ப்புக்கான (3ஆம் இடம்,2006) பரிசில்கள் பெற்றவர். இவரது தமிழ்க் கவிதைகள் சில தினமணியிலும் (2019), வளரி கவிதை இதழிலும்(2020), கவிதையும், சிறுகதையும் மொழிபெயர்ப்பு சிறுகதையும் வெற்றியாளர்களின் ஆக்கத் தொகுப்பான ‘பிரகாசம்’ (கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு) நூலிலும், ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதை 2018 இல் JDS Lanka விலும் வெளியாகி உள்ளன.

