3 கவிதைகள்

தாத்தாவின்  செய்தித்தாள்

தாத்தாவுக்கு

காலை உணவுக்குப் பின் தினமும்

நாளிதழ்களில் வரும்

கண்ணீர் அஞ்சலி விளம்பரங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு

பரீட்சைக்கு படிப்பது போல்

மீண்டும் மீண்டும் அவற்றைக் படித்து முடிக்கிறார்

அவரது பெயரின் முன் பகுதியோ பின் பகுதியோ

எழுதப்படவில்லை என்பதை உணரும் போது

ஒரு பெருமூச்சு விடுவார்

கடைசியாக

செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு

அமைதியாக யோசிப்பார்

ஒரு வேப்பம்பூவோ புளியம்பூவோ அல்லது ஒரு பழுத்த இலையோ

அதன் மீது விழுந்ததும்

அவரும் அஞ்சலி செலுத்தியது போல

எழுந்து நடப்பார்.

 

விளையாட்டு

நான் என் மகன்களுடன்

பார்வையற்ற மனிதனின் கோழியாக நடிக்கிறேன் 

இந்த பாத்திரத்திற்கு

நான் சரியாக பொருந்துகிறேன் என்று

எனக்குத் தெரியும்

இது

மறக்க முடியாத விளையாட்டு.

இரண்டு பெண்கள்

தண்ணீருக்கு என்று ஒரு கல்லறை உள்ளது அது மேகம்.

அங்கிருக்கும் புற்களில் என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பதற்கு விரும்புகிறேன்.

பீச் வாலிபால் விளையாடும் பெண்களைப் போல அவற்றை அங்கு குதித்து விழுந்து விளையாட விடுவேன்.

இமைக்க வழியின்றி இளம் பெண்ணின் மார்பு போல மேலிருந்து பூமியைப் பார்ப்பேன்.

நானும் ஆட்டுக் குட்டிகளும் பூமிக்குத் திரும்பி வந்ததும் செடிகொடிகளிடம் இந்தச் சுற்றுலா பற்றி பேசிக் கொள்வோம்.

வழி தவறி வந்த நிலவுகள்

 

நான்கு நிலவுகள் உள்ள கோளில் இரவில் சூரியனின் பாதி வெளிச்சம் இருக்கிறது.

அவளுடைய கண்ணில் ஒரு நிலவும் அவனுடைய கண்ணில் ஒரு நிலவும் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் நீளமான கையிருந்தால் உன் தோளுக்குப் பதிலாக நிலவின் தோளிலிலே போட்டிருப்பேன் எனச் சொல்லி சிரிக்கிறான்.

நிலவுகளை அருகருகே வரவழை அதைவிட அழகான உள்ளாடை எதுவும் இருக்காது எனச் சொல்லி அவளும் உரத்து சிரிக்கிறாள்.

நீ அப்படி செய் நான் வரவழைக்கிறேன் என அவள் காதோரம் ஏதோ கிசுகிசுக்கிறான். சினுங்கி சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பே அவர்களை நிலவுகளுக்குப் போட்டியாக ஒளிரச் செய்கிறது.

இரசிப்பதற்கும் அதிகமாக குடித்த குடிகாரனுக்கு எட்டு நிலவுகள் தெரிகின்றன. அவற்றைத் தலைக்கு மேலே நடந்துவரும் நாய்க்குட்டிகள் எனக் கூப்பிடுகிறான். மேகங்கள் நகர்வதால் அவை நடப்பதாக நம்பி புறப்படுகிறான்.

எடையைக் குறைத்துக்கொண்டு விலையை மாற்றாத நான்கு பிஸ்கட்களை அவற்றிற்கு வாங்கிச் செல்கிறான். வீட்டிற்குள் சென்றதும் பிஸ்கட்டுகளையே நாய்க்குட்டிகள் எனக் கொஞ்சி விளையாடுகிறான்.

அவன் குடித்து அழிவதாகச் சண்டையிட்டு கோவித்துச் சென்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டிற்கு வர நெடுநேரம் காத்திருந்து இலவச பயணச்சீட்டுக்காக நகரப்பேருந்தில் ஏறுகிறார்கள்.

கடலை ஒரு போதும் கேலி செய்யாத ஆறு  திருவிழாவிற்குக் கரையில் கூடியுள்ள மக்களின் கண்களால் உடல் முழுவதும் நிலவுகளையே சுமந்து செல்கிறது.

தன் இணையைக் கூடுவதற்குக் கூச்சப்பட்டவன் விரட்ட முடியாத வெள்ளைக்காகங்களாக இந்த நிலவுகள் இருக்கின்றன மேகமே உன் கருணை நல்ல கம்பளியாக மாறாதா என்று வேண்டுகிறான்.

சின்னஞ்  சிறுவனும் சிறுமியும் அட்சரங்களை மண்ணில் எழுதி பழகுகிறார்கள்.

அதே நான்கு நிலவுகள் அவர்களின் கண்களிலும் இருக்கின்றன. அறிவை வெளிச்சமாக்கும் ஒளி கடவுளுக்கு முன்பு ஏற்றப்படும் கற்பூரம் அல்லது மெழுகுவர்த்திக்கு நிகராகிறது

பூங்காவில் இருக்கும் கொரில்லா அப்படியும் இப்படியும் சில அடி தூரம் மட்டும் நடக்கிறது. ஏதேனும் ஒரு நிலவைத் தட்டிப்பறிக்க எட்டி எட்டி குதித்துப் பார்க்கிறது.

சர்க்கஸில் வாங்கிய  அப்பளங்களைக் கொண்டுவந்த சிறுமி அதை நோக்கி எறிகிறாள். அவை சிதறுகின்றன. உடைந்த நிலாக்களைக் கண்ட  கொரில்லா  வருத்தத்தோடு அமர்கிறது.

இன்னும் சில நிமிடங்களில் இந்த நிலவுகள் மறைந்துவிடும் என அரசு அறிவிப்பு செய்கிறது.

புதிய நிலவுகளைப் பார்க்க மூன்றிலிருந்து பதினொட்டு சதவீதம் வரி விதித்தால் என்ன என நிதியமைச்சரின் செவ்வி தொலைகாட்சிகளில் ஓடுகிறது.

நிலவுகளைப் பராமரிப்பது அரசாங்கத்தால் முடியாது எனவே தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்கிறார்.

இடதுசாரிகள் மாணவர்கள் எதிர்க்கிறார்கள்.

வாகனத்திற்கும் சாலைக்கும் குறுக்கே வந்தது போல கண்களுக்கும் வானத்திற்கும் குறுக்கே எதற்காக வருகிறீர்கள் என்று முழங்குகிறார்கள். மக்கள் எப்போதும் போல உண்டு உறங்குகிறார்கள்.

வழிதவறி பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்த மூன்று நிலவுகள் இன்னொருமுறை வழிதவறி வெறெங்கோ சென்றன.

வழிதவறிய ஆட்டைத் தேடி சென்ற ஏசு ஆரண்யத்தில் மாய மானைத் தேடும் இராமனைச் சந்திக்கிறார்.

ஆட்டையும் மானையும் மறந்துவிட்டு இருவரும் நிலவுகளைத் தேடிச்செல்கிறார்கள்.

ஒரு போதும் திரும்பப் போவதில்லை என அவர்களுக்கும் தெரியவில்லை.

 

கிணற்றின் வீடு

நான் கிணற்றின் வீட்டிற்குத் திரும்பினேன். நீர் மட்டம் உயர்ந்திருந்தது, கைகளை நீட்டினால் முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்.


கிணறே நீ எனக்கு குடிநீரைத் தராதே முகம் பார்க்கும் கண்ணாடியாக மட்டும் இரு என்றேன். சிற்றலையைச் சம்மதமாகத் தெரிவித்தது.

உடனடியாக கிடைக்கும் சம்மதம் குழந்தையின் வாயில் இருக்கும் இனிப்பை ஒத்தது.


கால்களை நல்ல வாடகைக்கு விட்டவன் போல நாடு நகரம் எல்லாம் சுற்றிவிட்டு ஒரு கோடையில் வந்தேன்.


கிணறு எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி இருந்தது முகம் பார்த்த கண்ணாடியை கைக்கும் கண்ணுக்கும் எட்டாத தூரத்தில் வைத்திருந்தது.


காலம் தாண்டி கானகம் தாண்டி வந்த ஒருவனை இப்படி ஏமாற்றலாமா என்றேன். என் குரலையே எதிரொலித்தது.


மற்றவருக்கு விருப்பமான ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்க முடியாத போது வாயையும் தொண்டையையும் எங்கோ வைத்து விடுவது போல கிணறு ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது.


கிணறு விளையாடுவதற்கு ஒரு பந்தை கொடுத்துவிட்டு திரும்பினேன்.


பெண்களிடம் மிக மரியாதையாக நடந்து கொள்ளும் ஒரு மரம். அன்று யாரும் வராத போதும் 41 வது பூவை எனக்காக உதிர்த்தது. ஒருமுறை நான் அழகாக இருந்ததை உணர்ந்தேன்.


உலர்ந்த தாவரங்களுக்கு எந்த உணவை கொடுப்பது என்று தெரியாமல் வெயிலில் நின்றேன். மழையை வர வைக்க தவளைகளை பிரார்த்தனை செய்ய கேட்டேன்.

சிறுவன் தீட்டிய சித்திரமாக பாதி மகிழ்ந்து இருந்தேன்.


அந்தியும் புலரியும் இரண்டு எளிய உயிரினங்களாக என்னுடன் வாழ்ந்தன. அவை ஒளிச்சேர்க்கையின் மூலமே உண்டு உயிர்த்து இருப்பைத் தக்கவைத்தன.

எவ்வளவு முட்டாள்தனமாக நீந்தினாலும் மீன் கரையை கடந்து வராது அது போல என் கால்களும் பூமியைத் தாண்டி எங்கும் போகவில்லை.

நானும் அதிகப்படியாக முட்டாளகவும் இருக்க முயன்றேன்.


நகங்களுக்குப் பதிலாக விரலை வெட்டினேன். பழங்களை எரிந்து தோலைத் தின்றேன். பறவைகளை குரங்குகள் எனவும் கடலைப் பட்டாம்பூச்சி எனவும் அழைத்தேன். என் தலைமுடிக்கு ஐநூறு வயது என்றேன்.

கார்காலம் தொடங்கியது. குதிரைகளின் காவலர்கள் கல்லாக மாறியதாக வந்த வதந்திகளை நம்பினேன். காற்று செத்துவிட்டது என்பதையும் நம்பினேன்.

இறுதியாக இரவிலும் கரும்பில் இருக்கும் இனிப்பாக என்னிடம் இருக்கும் அன்பு, விதைப்பவரின் கால்தடங்களும் தானியங்கள் என சொல்லிகொடுத்தது.

கார்காலம் முடிந்தது.

நனைந்து நனைந்து நானே மேகமாகிவிட்டது போல உணர்ந்தேன். கிணற்றின் வீட்டிற்குச் சென்றேன். நீர் மட்டம் உயர்ந்திருந்தது, கைகளை நீட்டினால் முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்.

மீண்டும் எனது கண்ணாடியானதற்கு நன்றி கிணறே என்றேன்.

காலம் எல்லாவற்றையும் மாற்றும் காத்திருப்பு எல்லாவற்றையும் மாற்றும் என கிணறு முதலும் கடைசியுமாய் பேசியது.🌻.

இரண்டு கவிதைகள்

தண்ணீர் வாக்கியம்

பேச யாருமில்லை
ஒரு குவளைத் தண்ணீர் மட்டும் அருகிலிருக்கிறது
காதை தூங்கச் சொல்லிவிட்டு
ஒரு மிடறு தண்ணீரில்
தொண்டைக்கு ஒரு வாக்கியத்தை அனுப்புகிறேன்




அவள் அழகாய் இருக்கும் நகரில்
நானும் அழகாய் இருந்தேன்

பழங்கள் ஆவியாகும் என்று யாரிடமாவது
பொய் சொல்லி நம்பவைக்க வேண்டும்
அதன் பிறகு வியாபாரியாவேன்
பறவையின் பாட்டு ஒளியாகும் காலம் வரும் என்று
நகங்களை விற்பேன்
கடல் முழுவதையும் இனிப்பாக மாற்றுவதற்கு தெரியும் என
ஒவ்வொரு விரலாய் விற்பேன்
அவளைச் சந்தித்த பிறகு மழையில் நடப்பதை
ஒரு பழக்கமாக்கிக்கொண்டேன் என
மணிக்கட்டுக்கு மேலே இருக்கும் கைகளை விற்பேன்
உதடுகளைத் தவிர எல்லாவற்றையும் விற்று
இனி எதுவுமே இல்லை என்ற நிலை வந்தால்
ஒரு விதை முளைத்து எழும்போது
கையை விரிக்கிற சிறிய மனிதன் தெரிகிறான் என்று பாடி
அவளை முத்தமிட்ட உதடுகளை விற்கமாட்டேன்
அந்த உதடுகளால் எல்லாவற்றையும் மீட்டுக்கொண்டு
அவளைச் சந்திக்காமல்
ஒரு செடியைப் போல ஒரே இடத்தில் வாழ்ந்துவிடுவேன்.