ஒரு கவிஞன் கற்பனை (அல்லது புனைவு), இசை, கதை, கட்டமைப்பு, ஆகிய நான்கு மனோபாவங்களில் ஏதாவது ஒன்றில் பிறக்கிறான் அதே நேரத்தில் மற்ற மூன்றையும் வலுப்படுத்துவதற்கு உரிய வேலையை அப்படி உருவாகும் கவிதைக்கு உள்ளே தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறான் என்கிறார் Gregory orr.
ஓலைச்சுவடி இதழ் 8 இல் வெளிவந்துள்ள ச.துரையின் “அலுவலகம் சில குறிப்புகள்” கவிதை மேலே குறிப்பிட்ட கற்பனையில் பிறந்து கதை கட்டமைப்பு இசை ஆகிய மூன்றையும் வலுப்படுத்துவதற்கு கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.
நிறங்களின் விளிம்பில் இருந்து தொடங்கும் கவிதை “எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது” என்று அருகில் உரையாடும் ஒரு நண்பனின் பேச்சைப் போல தொடங்குகிறது. ஆனால் “கவிதை ஒரு சுழல் நிலை என்று ஆலிஸ் புல்டன் கூறியதுபோல தொடர்ந்து செல்கிறது.
கற்பனை அல்லது புனைவு என்ற மனோபாவத்தில் பிறக்கும் கவிஞன் தொடர்ந்து கதையையும் கட்டமைப்பையும் வலுப்படுத்திக் கொண்டு செல்கிறான். அதற்கு உள்ளே செல்லும் வாசகனை ஒத்திசைவு கொள்ளச் செய்து இசையை உருவாக்குகிறார்.
சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்
இந்த வரிகள் நம் வாழ்வின் அன்றாடத்தோடு தொடர்ந்து பொருந்திப் போகிறது. சக பணியாளர் என்பவன் சக மனிதனாக விரிவு கொள்கிறான். சுட்டுவிரல் என்பது நம் வாழ்வின் இறக்கங்கள் ஆக மாறுகிறது.
ஆனால் அது ஒருபோதும் நிரந்தரமல்ல எனவே “இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு“. என்று நம்மை ஒரே இடத்தில் தேங்கி விடாமல் நகர்த்துகிறார்
மணல்கடிகாரத்தை கூட இடையில் நிறுத்த அதிகாரம் இல்லாதவன் முகத்தில் உள்ள பள்ளங்களில் தேங்கும் கண்ணீரை தினமும் பெய்யும் மழை என்று சொல்வது கவிதையின் அற்புத அழகியல்.
வாழ்வில் எப்போதும் ஏதேனும் ஒரு அபாய மணி ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் அது கேட்கிறதோ இல்லையோ ஒருவர் ஓடுவதைப் பார்த்து மற்ற மனிதர்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த கவிதையை வாசிக்கும் போது வாசகன் பல்வேறு சூழ்நிலை அனுபவங்களையும் மேற்குறிப்பிடப்பட்ட அனுபவங்களையும் பல்வேறு கோணங்களில் பெற முடியும் அந்தக் கவிதையை நீங்களும் படித்துப் பாருங்கள்
சிவப்பு
எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது
எனது வெள்ளை கையுறை திடீரென சிவந்தது
பதறினேன் அதை மேலதிகாரி கவனிக்கவில்லை
ஆனாலும் பயந்தேன் கால்சாராய்க்குள்
கைநுழைத்து எடுக்கும் போது
சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்
சிவந்த கையுறை எங்கே போனதென்று தெரியவில்லை
பின்கதவின் வழியே ரகசியமாக
என்னை கொண்டு செல்லும் போது
கோட்டையின் பாதியை திறந்தார்கள்
அங்கு குவிந்திருந்தன ஏகப்பட்ட சுட்டுவிரல்கள்.
கருப்பு
எல்லோரும் உறங்கப் போனதும்
எனது சீருடை சொன்னது
உன்னால் உறங்க முடியாது
உன் மேலதிகாரி உன்னை விட
என்னைதான் அதிகம் நேசிக்கிறான்
நான் எதுவும் கூறவில்லை
அந்த பைப்பர் கூடம் காற்றில் ஆடியது
விடியும் போது நகர்ந்து வேறு
இடத்திற்க்கு போய்விடுமென நினைத்தேன்
காற்றில் குலுங்க குலுங்க சிரித்தபடி
சீரூடை மீண்டும் சொன்னது
எப்போதும் நான் கீழே விழலாம் பிறகு
நீ இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு.
பச்சை
நிறைய புகார்களுக்கு மத்தியில் எனது
ஷுவை கழற்றச் சொன்னார்கள்
அதனுள் ஒரு சேரி படுத்திருப்பதாக
உதவியாளன் புகாரளித்தான்
மேலதிகாரி தனது மூக்கை பின்னந்தலைக்கு
மாற்றி வைத்தபடி நெருங்கினார்
உன்னுடைய எதற்கும் உதவாத சப்பாத்துகள்
மிதிபட தரையை கட்டவில்லை புரிகிறதா
நான் மிரண்டு போனேன்
உனது நல்ல ஷுக்கள் எங்கே?
படபடத்தபடியே பூர்வீகத்தில் என்றேன்.
சாம்பல்
மணல்கடிகாரத்தை இடையிலே நிறுத்தும்
அதிகாரம் கூட இல்லாத போதும்
அதை படுக்க வைக்க விரும்பினேன்
கொஞ்சம் கூட கனவுகளை நிமிர்த்த எண்ணியதில்லை
காய்ச்சிய இரும்பு ராடுகளை சுமக்கும்
நமது பற்களுக்கு இதெல்லாம் தேவையா என்பார்கள்
எதுவுமே தெரியாத மாதிரி வாழ முகம் கிடைத்திருக்கிறது
அதன் மேல் தினமும் இரும்பு ராடுகள் சரிய
முகத்தில் ஏகப்பட்ட பள்ளங்கள்
ஒவ்வொரு நாளும் அதில் மழை தேங்கியபடியே இருக்கிறது.
நீலம்
உயரமான சுவர்களுக்கு அடுத்து கடற்கரை வந்தது
எல்லோரும் இறங்கினோம்
நிறைய உதவியாளர்கள் இருந்தார்கள்
மேலதிகாரி பாதி உடயையோடு எங்களை நோக்கினார்
நீங்கள் குளிக்கலாம் ஆனால் உடைகளோடு என்றார்
எங்களுக்குள்ளே முகங்களை பார்த்தோம்
சீருடைகள் கடலை பார்த்தன.
செங்கருப்பு
சுற்றளவு விட்டமென தோண்டி
கற்கள் உறைகளென பூசப்பட்ட பின்
கிணற்றின் இடை இடையே இருந்த துளைகளை
மேலதிகாரி பார்த்தார்
பிறகு எங்களின் சிலரை துளைகளில்
நாள்முழுக்க பூசியபடி நிற்க வைத்தார்.
காவி
அன்று மதிலிலிருந்த பூனையொன்று
வெல்வேட் வெண் நிற திரைச்சீலையில் குதித்தது
எனக்கு என்ன செய்வதென்று தோன்றாத போதும்
சீலையின் கரையை உற்று நோக்கினேன்
அதிலிருந்த குட்டி குட்டி கரைகள் நீண்டு
ஒரு வரைபடத்தை நிவர்த்தி செய்தது
அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அபாயமணி ஒலித்தது எல்லோரும் என்னை தாண்டி
ஒருவன் தப்பித்துவிட்டான் என ஓடிக்கொண்டிருந்தார்கள்.
நன்றி: ஓலைச்சுவடி இதழ் 8
கவிஞர் ச.துரை தமிழின் குறிப்பிடத்தகுந்த இளம் தலைமுறைக் கவிஞர்களில் ஒருவர். இவரின் முதல் கவிதை தொகுப்பு மத்தி ( சால்ட் பதிப்பகம் ) குமரகுருபரன் இலக்கிய விருது வாசகசாலை இலக்கிய விருது ஆகியவற்றை பெற்றுள்ளது. இவருடைய கவிதைகள் தமிழில் அனேக இதழ்களில் வெளிவந்துள்ளன.