முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

 

 

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

 

எனக்குக் காதலிகள் இல்லை என்று சொன்னால்

யாரும் நம்புவதில்லை

இருப்பினும்

என் கடந்தகாலத்தில் மட்டும் இருக்கும் பெண்களைக் காதலிக்கிறேன்

வாழ்வு மறப்பதற்கு நிறைய அனுமதிக்கப்பட்டது,

இதில்

அன்பு ஒரு வகை மாமிசம்

அதை இறந்தவனைப் போல சாப்பிடலாம்.

முன்னாள் காதலியோடு பேசுவது அலுவலகக் கடிதம் போல இருக்கிறது

உரையாடுபவர்களை A மற்றும் B என குறியீடுகளாக மாற்ற வைக்கிறது

இதை விட அதிர்ச்சி எதுவென்றால்

இதயம் இயற்கைக்கு மாறாக இயங்கத் தெரியாத விலங்கு போல நடந்து கொள்வதுதான்.

 

 

திறப்பு

கண்களை இறுக மூடியிருக்கும் துறவி

வேறு யாராலும் திறக்க முடியாத அளவு

மெல்லியதாய்க் கண் திறந்து பார்த்துக்கொள்கிறார்

கேனி

நான் காகிதத்திலிருந்து பிறந்து வந்தேன் என்று
சொல்லித் திரியும் கேனி
ஒரு காகிதத்தை
அவளின் அம்மா என்று சொல்லிக்கொண்டு திரிகிறாள்
உற்றுப் பார்த்தால்
அக்காகிதம் இரண்டுபக்கமும் வெற்றுப் பக்கமாக இருக்கிறது.
காகிதத்தில் ஒரு பூட்டிய கதவு இருப்பதாகவும்
அதன் சாவியைத் தேடுவதாகவும் அடிக்கடி புலம்பியவள்,
இன்று
தினமும் அவளைப் பார்த்து
குலைத்துத் திரிந்த நாயை மடியில் வைத்திருக்கிறாள்
அவளிடம் காகிதம் எதுவும் இல்லை.
சாவிகள் உலோகத்தால் செய்யப்பட்டதாகவோக
உயிரற்றதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லைதானே?

Leave a comment