நான்கு நிலவுகள் உள்ள கோளில் இரவில் சூரியனின் பாதி வெளிச்சம் இருக்கிறது.
அவளுடைய கண்ணில் ஒரு நிலவும் அவனுடைய கண்ணில் ஒரு நிலவும் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் நீளமான கையிருந்தால் உன் தோளுக்குப் பதிலாக நிலவின் தோளிலிலே போட்டிருப்பேன் எனச் சொல்லி சிரிக்கிறான்.
நிலவுகளை அருகருகே வரவழை அதைவிட அழகான உள்ளாடை எதுவும் இருக்காது எனச் சொல்லி அவளும் உரத்து சிரிக்கிறாள்.
நீ அப்படி செய் நான் வரவழைக்கிறேன் என அவள் காதோரம் ஏதோ கிசுகிசுக்கிறான். சினுங்கி சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பே அவர்களை நிலவுகளுக்குப் போட்டியாக ஒளிரச் செய்கிறது.
இரசிப்பதற்கும் அதிகமாக குடித்த குடிகாரனுக்கு எட்டு நிலவுகள் தெரிகின்றன. அவற்றைத் தலைக்கு மேலே நடந்துவரும் நாய்க்குட்டிகள் எனக் கூப்பிடுகிறான். மேகங்கள் நகர்வதால் அவை நடப்பதாக நம்பி புறப்படுகிறான்.
எடையைக் குறைத்துக்கொண்டு விலையை மாற்றாத நான்கு பிஸ்கட்களை அவற்றிற்கு வாங்கிச் செல்கிறான். வீட்டிற்குள் சென்றதும் பிஸ்கட்டுகளையே நாய்க்குட்டிகள் எனக் கொஞ்சி விளையாடுகிறான்.
அவன் குடித்து அழிவதாகச் சண்டையிட்டு கோவித்துச் சென்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டிற்கு வர நெடுநேரம் காத்திருந்து இலவச பயணச்சீட்டுக்காக நகரப்பேருந்தில் ஏறுகிறார்கள்.
கடலை ஒரு போதும் கேலி செய்யாத ஆறு திருவிழாவிற்குக் கரையில் கூடியுள்ள மக்களின் கண்களால் உடல் முழுவதும் நிலவுகளையே சுமந்து செல்கிறது.
தன் இணையைக் கூடுவதற்குக் கூச்சப்பட்டவன் விரட்ட முடியாத வெள்ளைக்காகங்களாக இந்த நிலவுகள் இருக்கின்றன மேகமே உன் கருணை நல்ல கம்பளியாக மாறாதா என்று வேண்டுகிறான்.
சின்னஞ் சிறுவனும் சிறுமியும் அட்சரங்களை மண்ணில் எழுதி பழகுகிறார்கள்.
அதே நான்கு நிலவுகள் அவர்களின் கண்களிலும் இருக்கின்றன. அறிவை வெளிச்சமாக்கும் ஒளி கடவுளுக்கு முன்பு ஏற்றப்படும் கற்பூரம் அல்லது மெழுகுவர்த்திக்கு நிகராகிறது
பூங்காவில் இருக்கும் கொரில்லா அப்படியும் இப்படியும் சில அடி தூரம் மட்டும் நடக்கிறது. ஏதேனும் ஒரு நிலவைத் தட்டிப்பறிக்க எட்டி எட்டி குதித்துப் பார்க்கிறது.
சர்க்கஸில் வாங்கிய அப்பளங்களைக் கொண்டுவந்த சிறுமி அதை நோக்கி எறிகிறாள். அவை சிதறுகின்றன. உடைந்த நிலாக்களைக் கண்ட கொரில்லா வருத்தத்தோடு அமர்கிறது.
இன்னும் சில நிமிடங்களில் இந்த நிலவுகள் மறைந்துவிடும் என அரசு அறிவிப்பு செய்கிறது.
புதிய நிலவுகளைப் பார்க்க மூன்றிலிருந்து பதினொட்டு சதவீதம் வரி விதித்தால் என்ன என நிதியமைச்சரின் செவ்வி தொலைகாட்சிகளில் ஓடுகிறது.
நிலவுகளைப் பராமரிப்பது அரசாங்கத்தால் முடியாது எனவே தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்கிறார்.
இடதுசாரிகள் மாணவர்கள் எதிர்க்கிறார்கள்.
வாகனத்திற்கும் சாலைக்கும் குறுக்கே வந்தது போல கண்களுக்கும் வானத்திற்கும் குறுக்கே எதற்காக வருகிறீர்கள் என்று முழங்குகிறார்கள். மக்கள் எப்போதும் போல உண்டு உறங்குகிறார்கள்.
வழிதவறி பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்த மூன்று நிலவுகள் இன்னொருமுறை வழிதவறி வெறெங்கோ சென்றன.
வழிதவறிய ஆட்டைத் தேடி சென்ற ஏசு ஆரண்யத்தில் மாய மானைத் தேடும் இராமனைச் சந்திக்கிறார்.
ஆட்டையும் மானையும் மறந்துவிட்டு இருவரும் நிலவுகளைத் தேடிச்செல்கிறார்கள்.
ஒரு போதும் திரும்பப் போவதில்லை என அவர்களுக்கும் தெரியவில்லை.