தண்ணீரின் சிரிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் நவலை என்ற சிற்றூரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மொழிபெயர்ப்பு உட்பட ஆறுநூல்கள், சிறார் நூல்கள் பன்னிரண்டு முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது கவிதைத் தொகுப்பு.

Aphorism என்றால் தமிழில் பொன்மொழி என்பதே அதிகம் பொருந்தும் என்பது என் கருத்து. தமிழின் முதல் aphorisa நூல் என்ற முன்னுரையைத் தாங்கி வந்திருக்கும் நூலிது.

கவிதைக்கழகு மேற்கொண்டு செல்ல விடாது கண்களைக் கவ்விக் கொள்ளுதல். அது இந்தத் தொகுப்பில் அங்கங்கே நிகழ்கிறது.

உண்மையை அழகியல் சரிகையில் அலங்கரித்துக் காட்டுவது அஃபோரிசம்.
அதற்கு நல்ல உதாரணம் இந்தக் கவிதை:

இலையுதிர் காலத்தில் கடல்
எந்த இலையையும் உதிர்ப்பதில்லை
ஆனால் உப்பளம் எங்கும்
கடலின் சருகுகள்”

எது வசதியாக இருக்கிறதோ அதை விரும்புவதே மனிதசுபாவம். ஒளிக்க வேண்டியதற்கு இருளையும், பரப்ப வேண்டியதற்கு வெளிச்சத்தையும் அவ்வப்போது தேடுவதென்பது சுயநலம் தானே!

இருளை விட வெளிச்சத்தை
நாம் அதிகம் விரும்புவது
முன்பே இருக்கும் நாக்கை விட பிறகு
முளைத்த பற்களை விரும்புவது போன்றது”

உறவுகள் நேரத்தை கேட்பவை. நேரத்தை செலவுசெய்ய முடியாவிட்டால் நிறம்மாறும் உறவுகள். காலம் எல்லா உறவையும் தேய்த்துப் பரிசோதிக்கும் உரைகல்.

” காலடித்தடங்கள் குறையும் போது
ஒற்றையடிப் பாதைகள் மறையத்
தொடங்குகின்றன
உறவுகளும் அப்படித்தான்”

“whatever our souls are made of, his and mine are the same”. Wuthering Heights நாவலின் ஒரு Quoteஇது. நாவலை வாசித்தவர்கள் இந்த வரியை மறக்கவே முடியாது, இருவரின் உறவை இது தெளிவாகச் சொல்கிறது. அஃபோரிஸமும் கூட உண்மையை உரக்கச் சொல்ல உபயோகப்படுத்துவது.

246 கவிதைகள் அடங்கிய தொகுப்பில் அஃபோரிச வடிவத்தை உபயோகித்துத் தேறியவைகள் மிகக் குறைந்த சதவீதமே. ஒரு வடிவமோ அல்லது சித்தாந்தமோ ஒருவரின் கற்பனைக்குதிரையை லகானிடும் ஆபத்து உமேஷூக்கு மட்டுமல்ல, எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ளதே. அதிகம் பிடித்தவர்கள் நூறுபேரைச் சொல்லச் சொன்னால் ஐம்பது பேருக்குப்பிறகு எண்ணிக்கைக்காகத் தையல்காரரை சேர்க்கலாமா என்று யோசிப்போம். கவிதைகள் சிலவற்றைக் களையெடுத்திருக்கலாம். இருந்த போதிலும் புதியமுயற்சிக்கும், ஆர்வத்திற்கும் பாராட்டுகள்.

சரவணன் மாணிக்கவாசகம் – தமிழின் மிக முக்கியமான விமர்சகர். அச்சு இணைய ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்களையும் அறிமுகங்களையும் எழுதி வருகிறார் அவருடைய வலைப்பக்கத்தில் நூற்றுக் கணக்கான நூல்கள் பற்றி காணக்கிடைக்கின்றன. படித்துப் பயன் பெற அந்த இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2024
விலை ரூ. 150.

Leave a comment