குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாக்கு



#தண்ணீரின்_சிரிப்பு

ஸுரோவ்ஸ் அஃபோரிஸம் (தமிழில் கணேஷ்ராம் மொழிபெயர்த்து நூல்வனம் வெளியீடாக வந்தது) என்ற ஃபிரான்ஸ் காஃப்காவின் நுண்கவிதைகள் படித்தபோது நான் முதலில் ஏங்கியது, நேரடித் தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருமா என்றெண்ணினேன்.

அதன் பின், பாதசாரி ஐயாவின் “ஆழ்ந்தவின்ற சான்று” ஓரளவுக்கு அஃபோரிஸத்துக்கு நெருக்கமான புத்தகமாக எனக்குத் தோன்றியது.

அஃபோரிஸம் என்றால் என்ன? உலகின் பல்வேறு தத்துவங்களை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே கட்டமைத்து அவற்றைப் பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்கள். அதை மீறியத் தனி மனித கண்டடைவுகளை கவிஞனின் மனநிலையுடன் அணுகி, அதன் சக்கையை உதறி சாறை மட்டும் பருகத் தருதல். குறும்பாக்களாக மாறிவிடக் கூடிய எல்லா அடையாளமும் கொண்டவை அஃபோரிஸ கவிதைகள்.

பூவிதழ் உமேஷ் அவர்களின் “தண்ணீரின் சிரிப்பு” பற்றி முதலில் கேள்வி பட்டபோது அத்தொகுப்பை “தமிழின் முதல் அஃபோரிஸ கவிதை நூல்” என்ற அறிவிப்பு ஈர்த்தது. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாவைப் போல் எச்சிலூறியது.

அதேநேரம், பூவிதழ் உமேஷ் மற்றும் தாமரைபாரதி அவர்களுடன் அப்போது நிகழ்ந்த ஒரு ஃபோஸ் புக் உரையாடலில், திருக்குறள் இருக்கும் போது இதெப்படி தமிழின் முதல் அஃபோரிச நூலாக முடியும் என்ற ஒரு நல்ல விவாதம் நிகழ்ந்தது. அது பல புரிதல்களை ஏற்படுத்தியது. ஆனால், கண்டிப்பாக இந்நூல் அஃபோரிஸ கவிதை வெளிக்கான ஒரு மிகச்சிறந்த கதவைத் திறந்து விட்டிருப்பதாகவே எனக்கு இப்போது இந்நூலை வாசித்த பின் தோன்றுகிறது.

நூலின் சாராம்சமென்று சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பவற்றிலிருந்து உணர்ந்தவற்றைப் பிடித்து தன் மொழி ஆளுமையைத் தூரிகையாக்கிப் பட்டாம்பூச்சிக்கு வண்ணமடிப்பதைப் போன்று அழகாக படைத்திருக்கிறார். பல கவிதைகளில் பட்டாம்பூச்சிகள் உயிர் பெற்று படபடக்கிறது. அதை நாம் உணர்ந்து நம் மனம் படபடக்கவும் செய்கிறது. அதுவே நூல் ஆசிரியரின் வெற்றியென்று எனக்குப் படுகிறது.

சிலவற்றை நீக்கிவிட்டு, இன்னும் கொஞ்ச காலம் அவற்றில் இன்னும் ஒட்டியிருக்கும் சில சக்கைகளை மட்டும் நீக்கி மற்றொரு அஃபோரிஸ நூலில் நம்மிடம் கொடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

உதாரணத்துக்கு சில அஃபோரிஸ கவிதைகளை இங்கேப் பகிர்ந்து முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்று எளிதில் விலக்கி வைத்து விட முடியாத பல அழகான பலாச்சுளைகள் நிறைந்த பழுத்த பலாவாக இருக்கும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்ல அந்த ஒரு கவிதையை மட்டும் பகிரவே எனக்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனாலும், ஒன்றே ஒன்று…

*******
அவசர காலத்தில் வெளியேறும்போது
கதவு அதிக பயன்மிக்கதாக மாறுவது போல
சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
*******
நன்றி!
– கவிஞர் குமரகுரு

தண்ணீரின் சிரிப்பு – சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் நவலை என்ற சிற்றூரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மொழிபெயர்ப்பு உட்பட ஆறுநூல்கள், சிறார் நூல்கள் பன்னிரண்டு முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது கவிதைத் தொகுப்பு.

Aphorism என்றால் தமிழில் பொன்மொழி என்பதே அதிகம் பொருந்தும் என்பது என் கருத்து. தமிழின் முதல் aphorisa நூல் என்ற முன்னுரையைத் தாங்கி வந்திருக்கும் நூலிது.

கவிதைக்கழகு மேற்கொண்டு செல்ல விடாது கண்களைக் கவ்விக் கொள்ளுதல். அது இந்தத் தொகுப்பில் அங்கங்கே நிகழ்கிறது.

உண்மையை அழகியல் சரிகையில் அலங்கரித்துக் காட்டுவது அஃபோரிசம்.
அதற்கு நல்ல உதாரணம் இந்தக் கவிதை:

இலையுதிர் காலத்தில் கடல்
எந்த இலையையும் உதிர்ப்பதில்லை
ஆனால் உப்பளம் எங்கும்
கடலின் சருகுகள்”

எது வசதியாக இருக்கிறதோ அதை விரும்புவதே மனிதசுபாவம். ஒளிக்க வேண்டியதற்கு இருளையும், பரப்ப வேண்டியதற்கு வெளிச்சத்தையும் அவ்வப்போது தேடுவதென்பது சுயநலம் தானே!

இருளை விட வெளிச்சத்தை
நாம் அதிகம் விரும்புவது
முன்பே இருக்கும் நாக்கை விட பிறகு
முளைத்த பற்களை விரும்புவது போன்றது”

உறவுகள் நேரத்தை கேட்பவை. நேரத்தை செலவுசெய்ய முடியாவிட்டால் நிறம்மாறும் உறவுகள். காலம் எல்லா உறவையும் தேய்த்துப் பரிசோதிக்கும் உரைகல்.

” காலடித்தடங்கள் குறையும் போது
ஒற்றையடிப் பாதைகள் மறையத்
தொடங்குகின்றன
உறவுகளும் அப்படித்தான்”

“whatever our souls are made of, his and mine are the same”. Wuthering Heights நாவலின் ஒரு Quoteஇது. நாவலை வாசித்தவர்கள் இந்த வரியை மறக்கவே முடியாது, இருவரின் உறவை இது தெளிவாகச் சொல்கிறது. அஃபோரிஸமும் கூட உண்மையை உரக்கச் சொல்ல உபயோகப்படுத்துவது.

246 கவிதைகள் அடங்கிய தொகுப்பில் அஃபோரிச வடிவத்தை உபயோகித்துத் தேறியவைகள் மிகக் குறைந்த சதவீதமே. ஒரு வடிவமோ அல்லது சித்தாந்தமோ ஒருவரின் கற்பனைக்குதிரையை லகானிடும் ஆபத்து உமேஷூக்கு மட்டுமல்ல, எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ளதே. அதிகம் பிடித்தவர்கள் நூறுபேரைச் சொல்லச் சொன்னால் ஐம்பது பேருக்குப்பிறகு எண்ணிக்கைக்காகத் தையல்காரரை சேர்க்கலாமா என்று யோசிப்போம். கவிதைகள் சிலவற்றைக் களையெடுத்திருக்கலாம். இருந்த போதிலும் புதியமுயற்சிக்கும், ஆர்வத்திற்கும் பாராட்டுகள்.

சரவணன் மாணிக்கவாசகம் – தமிழின் மிக முக்கியமான விமர்சகர். அச்சு இணைய ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்களையும் அறிமுகங்களையும் எழுதி வருகிறார் அவருடைய வலைப்பக்கத்தில் நூற்றுக் கணக்கான நூல்கள் பற்றி காணக்கிடைக்கின்றன. படித்துப் பயன் பெற அந்த இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2024
விலை ரூ. 150.

தண்ணீரின் சிரிப்பு – நீதி மணி

இப்போது வரும் அலை முன்பு வந்து சென்ற அலை இல்லை என்பது பூவிதழ் உமேஷ் -க்கு பொருந்தும்.

அவருடைய வெயில் ஒளிந்துக்கொள்ளும் அழகி, துரிஞ்சி,சதுரமான மூக்கு…ஒவ்வொன்றும் ஒரு மொழிதல் முறையை கொண்டவை.

அவரைப்போலவே மிக நிதானமாக பேசக்கூடியவை.

தன் முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் இப்போது “அஃபோரிச கவிதைகளுடன்” வந்திருக்கிறார்.

ஒரு கவிதை:

“நம் கால்கள் ஒவ்வொரு
பாதையிலும் செல்ல
முடியாது
ஆனால் ஒவ்வொரு பாதையும்
நம் கால்கள் இருக்கும்
இடத்தில்
ஏதோ ஒரு வகையில்
இணைக்கப்பட்டிருக்கிறது.”

இந்த தொகுப்பை படித்த போது இரண்டு எண்ணங்கள் தோன்றின.

ஒன்று, நாமும் இந்த வகைமையில் எழுதவேண்டும்.

இரண்டு, நம்முடைய ஒரு நூலுக்காவது  Karikalan R பங்காளியிடம் ஒரு அணிந்துரை வாங்கிடவேண்டும்.

இந்த கவிதைகளுக்கு  அருமையான ஒரு அணிந்துரையை அவர் அளித்துள்ளார்.

தம்பி உமேஷ்க்கு ஒரு வேண்டுகோள்.

நான் 246-கவிதைகளுக்கு பணம் கொடுத்து இந்த நூலை வாங்கியிருக்கிறேன்.

ஆனால்,60-ஆவது கவிதையே 244-ஆவது கவிதையாகவும் வந்துள்ளது.

அதனால் ஒரு கவிதை குறைகிறது.

இன்னொரு அஃகோரிச கவிதை எழுதி அனுப்பி இழப்பை ஈடுசெய்யுங்க.

எழுத்தாளர் நீதி மணி அவர்கள் கதைகள் பாடல்கள் கவிதைகள் என பல தளங்களில் பயணிப்பவர்.

தண்ணீரின் சிரிப்பு- சோலைமாயவன்

~தமிழில் முதல் அஃபோரிச கவிதை நூல் எழுதி கவிதையில் புதிய வழித்தடத்தை உருவாக்கி வரும் கவிஞர் பூவிதழ் உமேஷ்க்கு வாழ்த்துகள் ~இவரின் துரிஞ்சி கவிதைத் தொகுப்பு சிறப்பானவை என்றாலும் அதை உள்வாங்குவதற்குக் கூடுதலாக மெனக்கிட்டேன் ~ஆனால் தண்ணீர் சிரிப்பு கவிதைத் தொகுப்பில் எளிமை எளிமை தண்ணீர் போல் அதுபோல் அடர்த்தி அடர்த்தி தண்ணீர் போல் ~கரிகாலன் சார் எழுதிய அணிந்துரைக்குள் போகாமல் கவிதையை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்

246 கவிதைகளை எழுத்தியிருக்கிறார்
246 முறை என் இதயம்புன்னகைத்துக்கொண்டது ~ஒவ்வொரு கவிதைக்குள் ஆச்சரியம் அடர்த்தியும் செறிவாக பொருத்திருக்கிறார்

“அன்பும் சிகரெட்டும் சமமாக ஆபத்தானவை
என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால்
சிலர்தான் அதை கைவிட
விரும்புகிறார்கள்
அதிலும் சிகரெட்டை கைவிடுபவர்கள் சிலரே” ~காலில் முள் குத்தியது போல் அன்பு இல்லாமல் கைவிடப்பட்டவரின் வலியை எழுதுகிறார் இந்தக் கவிதை வரி உருவாக்கும் சித்திரம் உலகெங்கும் காட்சியாக தெரியும் சின்ன நகரங்கள்கூடபிள்ளைகளால் கைவிடப்பட பெற்றோர்களைப் பார்க்கிறோம் பெருநகரங்களை கணக்கெடுத்தால் இந்தக் கவிதை வரி தரும் வலி அறிவோம்

“எங்கும் செல்கிறோம் என்று தெரியாதபோது
ஏன் வேகமாக ஓட வேண்டும்
இந்தக் கேள்வியை எல்லோர் கையிலும் பரிசாக கொடுத்துவிட்டால்
உலக பாதி அமையாதிவிடும்”
~ மும்பை சென்னை போன்ற நகரங்களில் தான் மக்கள் அவசர அவசரமாக ஓடிக்கொண்டேயிருப்பார்கள் என்ற கருத்து பொய்யாகி போனது நவீன தொழில்நுட்பம் வாஸ்துகள் வீட்டிற்குள் நுழைந்த பின் கிராம்ம் நகரம் எதையும் விட்டுவைக்கவில்லை எல்லோரையும் பேய் போல் பிடித்து ஆட்டுகிறது அவசரம்
“ஒரு பன்னாட்டு நிறுவனம்
வேறு எந்த உறுப்புக்குப் பதிலாகவும்
உடலெங்கும்
கோரைப் பற்களை மட்டுமே கொண்ட காட்டு விலங்கு”
~ அஃபோரிசம் என்றால் என்ன எதுவும் அறிந்திடாமல் கவிதைகளை வாசிக்க தொடங்கினேன் ஆனால் மதிக்கெட்டான் சோலைக்குள் நுழைந்தவனின் போல் தொகுப்பை வாசித்துவிட்டு கீழே வைத்தேன்

கடைசியாக கவிஞர் கரிகாலன் சார் அணிந்துரை வாசித்தேன் அஃபோரிசம் என்பதை என்ன ஆரம்பித்து ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதிவிட்டார்
மறுமுறை உமேஷ் கவிதைகளை வாசித்துப் பார்கிறேன் பிரமாண்டமாக தெரிகிறது
கவிஞர் கரிகாலன் சார்” உமேஷ் கவிதைகள் ஒரு தியானம் போல் இருக்கின்றன நம் மனதின் அமைதியான இடங்களில் சிறிய சொற்களை வெடிக்க வைத்து கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசத்தைத் தருகிறார் என்கிற அவரின் வாழ்த்தை வழிமொழிகிறேன்

வாழ்த்துகள் தோழர் பூவிதழ் உமேஷ்

அன்புடன்
சோலைமாயவன்

கவிஞர் -சோலை மாயவனின் சமீபத்ய கவிதை நூல்