கவிதை கவனிக்கும் கலையில் பயிற்றுவிக்கிறது.


கவிதையின் உண்மையான மதிப்பு உடனடியாக உணரக் கூடிய தனிப்பட்ட நன்மைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலம். ஆனால் நம்முடைய உடனடி சூழ்நிலைகளுக்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு வழி கவிதை . அப்படி சிந்திப்பதற்கு வாய்ப்பு அமையும் நாள் மிக அழகானது .

ஒரு கவிதை நம்மை எப்படி கவர்கிறது – கவிதையை ரசிப்பதற்கு தயாராக இருக்கும்போது அது எளிதாக நடக்கிறது. இயல்பிலேயே இரசனை சார்ந்துதான் நான் கவிதைகளைப் படிக்கிறேன் அதிலும் எளிமை உருவாக்கும் அழகு எந்த பேருருவாளும் உருவாக்க முடியாது என்று நினைப்பேன்.
கவிதையில் அமையப்பெறும் உரையாடல் தன்மை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்,

“நான் கண்ணீரை எடுத்துவைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது “

  • அப்துல் ரகுமானின் இந்த வரிகள் உள்ள “போட்டி” என்ற கவிதையைப் பல முறை படித்து ரொம்ப ரசித்திருக்கிறேன் , இந்த ரசனை எனக்கு எங்கிருந்து வந்தது என்றால் கிராமங்களில் கூலி வேலை செய்பவர்கள் அலுப்பு தெரியாமல் இருக்க எதிர்பாட்டு பாடுவதை, விடுகதை போடுவதை அருகிருந்து கேட்டு வளர்ந்ததால் இது மிக நெருக்கமாகிவிட்டது. அப்படியான ஒரு தன்மையுள்ள ஒரு கவிதைதான் நான் மிகவும் ரசித்தது.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும் பாடுவதுபோல புனைவை அழகான கவிதையாக சித்துராஜ் பொன்ராஜ் எழுதியிருக்கிறார். அதில் தொழிற்படும் வடிவமே முதலில் எனக்குப் பிடித்தது.
கடற்கன்னி பாடுவதைப் பெரிய பத்தியாகவும் பறவைகள் பாடுவதை சிறிய பத்தியாகவும் அமைத்துள்ள விதம் கடற்கன்னி மற்றும் பறவைகளின் உருவ ஒப்பீடு போல எனக்கு முதலில் தோன்றியது பிறகு கவிதை நடக்கும் இடம் கடற் புறம் என்பதால் அலைகளின் உயர்வு தாழ்வு (அகடு – முகடு) போல பத்திகளின் அமைப்பு இருப்பதாகவும் பட்டது.
முதலில் இருக்கும் கடற்கன்னியின் பாடல் வெயிலில் தொடங்கி நிழலோடு முடிகிறது இந்த முரண் இத்தோடு முடிவதில்லை உள்ளுக்குள்ளே பல படிநிலைகளில் தொடர்ந்து வருகிறது. இக்கவிதை உருவமின்மையை தொடர்ந்து முன்னெடுக்கிறது அதன் தொடக்கமாக உருவமில்லாத வெயில் அமைகிறது.

இரண்டாவது பத்தியில் கடல் பறவைகள் பாடுகின்றன – அதில் கடலுக்கு நெய்தல் என்ற பெயர் எப்படி வந்தது என்ற புனைவு மிக அற்புதமாக உள்ளது. அது கடலுக்கு உருவமில்லை என்று முடிகிறது.

மீண்டும் கடற்கன்னி பாடுகிறாள் கடல் மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி என்ற உவமை மிக அழகானது அதில் முகம் பார்ப்பது யார்? அதன் எதிரொளி எங்கு செல்கிறது என்பதற்கான பதில் இன்மை என்பதாகிறது .ஒருவேளை வானம் என்றால் அதற்கும் உருவமில்லை. மேலும் இது முதல் பாட்டில் உள்ள பிரகாசமான வெயில் என்பதன் தொடர்ச்சியாக இருக்கிறது .
கடலுக்கு உருவம் இல்லை என்பதைப் பறவைகளை ஒட்டி கடற்கன்னியும் வழிமொழிகிறாள் ஆனால் ஒரு படி மேலே சென்று கடலை திணை மறுவிய வெற்றிடமான ஒரு மாய நிலம் என்று முடிக்கிறாள் இப்போது வாசிப்பவருக்கு கடற்பறவைகள் என்ன பாடும் என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

தன்பாட்டில் மனிதர்களை ஏற்றிவைத்த கடற்கன்னிக்குப் பதில் தருவது போல் பறவைகள்,
“மனிதர்கள் காற்றிலேறி வருவார்கள்
கவனம் கவனம்
காற்றும் திணை இல்லாத இடம்”
என்று புதிய பதிலைத் தருகிறது . இது கடற்கண்ணி கடலை திணை மறுவிய நிலம் என்று கூறியதற்குப் பதிலாக அமைகிறது.

பறவைகள் இப்படி பாடியதைக் கேட்ட கடற்கன்னி பறவைகள் எச்சரித்த மனிதர்களைத் திணை மறந்து தன்னிடம் வர வைப்பதற்காக கடலின் மூச்சைத் திணற வைக்கும் கர்ப்பத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறாள்
முறையில் திரிந்த நிலத்தைப் பாலை என்று சொல்வது போல கடலுக்குள் பயன்படாமல் இருக்கும் மலைகளையும் பாசிகளையும் உடைய நீர் நிலத்தைப் பாலை என்று சொல்லுகிறாள். இறுதியாக கடலை போதாமை என்று சொல்லி ஆசையை ஒப்பிடுகிறாள்.
இறுதியாக பறவைகள் பாடுகின்றன,
“கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம் கவனம்”
இந்த உரையாடல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் இல்லை அது தொடரும் அதைத் தொடர யார் வேண்டுமானாலும் வரலாம் இந்தக் கவிதையை வாசிக்கும் நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம்.

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும

சித்துராஜ் பொன்ராஜ்

கடற்கன்னி பாடுகிறாள்:

இதோ பிரகாசமான வெயில்:
கழுத்தின் பின்புறமாய்த் தூக்குக் கயிற்றின் கனத்தோடும் அசௌகரியத்தோடும் புரள்கிறது.

கடலின் கர்ப்பத்தை என்னுடன் இழுத்து வந்து போட்டதுபோல்
பொன்னிறமான மணலில் சிதறிக் கிடக்கும் நுரைகளின் மத்தியில் கிடக்கிறேன்.

நுரைகளைப்போலவே கடலின் கர்ப்பமும் அரூபமானது.

கடல் நிழல்களோடு கூடித் திளைக்கும் சூரியக் கிரணங்களால் சூலுற்றுத் தன் கர்ப்பத்தைத் தானே யுக யுகாந்திரமாய்க் கலைத்துக் கொண்டிருக்கிறாள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

நெய்வாசக் குழலுடைய ஒரு பெண் ஆயிரமாயிரம் மனிதர்களின்
காலடிகள் தட்டிப்போட்ட மணற்பரப்பில் அமர்ந்தபடியே கருநீல நிறத்தில்
பாடல்களை நெய்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்கள் வெவ்வேறு சமயங்களில் நெய்த பாடல்களே கடல்.

அதனால் கடலைச் சார்ந்திருக்கும் பகுதியும்
நெய்தல் என்று அழைக்கபடுகிறது.

கடலுக்கு உருவமில்லை.

கடற்கன்னி பாடுகிறாள்:

கடல், மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி.

அதற்கு உருவமில்லை.

அதன் உருவமின்மையின் மீதுதான் மனிதர்கள்
ஆழமான பெருமூச்சுகளின் ஓசையோடு
சலித்துத் திரும்பும் பாய்மரக் கப்பல்களின் வடிவத்தில்
தங்கள் போதை மிகுந்த ஆசைகளை ஏற்றி வைக்கிறார்கள்.

இந்தப் போதாமை எனக்கு வருத்தம் தருகிறது.

கடல், திணை மருவி வெறும் வெற்றிடமாகிப் போன மாய நிலம்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

மனிதர்கள் காற்றிலும் ஏறி வருவார்கள்.
கவனம்! கவனம்!
காற்றும் திணை இல்லாத இடம்.

கடற்கன்னி பாடுகிறாள்:

இடுப்புக்கு மேலே மனிதர்களின் உடம்பும்,
கீழே மீனின் வாலும் உடைய சந்ததியை உருவாக்கப் போகிறேன்.
கடலின் மூச்சுத் திணற வைக்கும் கர்ப்பத்தை
எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு.

ஒரு நாள் மூச்சுத் திணறி மனிதர்கள்
திணைகளைத் துறந்து என்னிடம் வரப் போகிறார்கள்.

இதோ கடலுக்கடியில் மலைகள்,
பவளங்கள் வளர்ந்திருக்கும் காடுகள்,
வயல் வரப்புகளாய் விரிந்திருக்கும் வாசனையுள்ள மண்,
நொடிக்கொரு தரம் இருப்பிடமின்றி
அலைந்து கொண்டிருக்கும் பாலை.

இது, கடல்.

இதுவே போதாமை.
அதனால் இதனை ஆசைக்கு உவமையாய்ச் சொல்கிறார்கள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம்! கவனம்!

எதிர்காலத்தில் இதுவே உங்கள் பாடலாய் இருக்கப் போகிறது.//

நன்றி: யாவரும்.காம்

சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். பாரதியார் போல பதினொரு மொழிகள் தெரிந்தவர் . ரஷ்ய மொழியில் இருந்தும் ஸ்பானிஸ் மொழியில் இருந்தும்இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் விரைவில் தனிநூலாக வர உள்ளன. இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இவருடைய ஆங்கில கவிதை தொகுப்பும் ஆங்கில மொழியில் சிறுகதைத் தொகுப்பும் வெளிவர உள்ளன. இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு இத்தாலியின் ஆவது சுலபம், ( அகநி ) இவருடைய மரயானை நாவல் (வம்சி) பரவலான கவனம் பெற்றுள்ளன.

அவருடைய வலைப்பக்கம்

https://sithurajponraj.net/

.

.

கவிஞன் பிறக்கும் மனோபாவங்கள்-ச.துரை கவிதையை முன்வைத்து

ஒரு கவிஞன் கற்பனை (அல்லது புனைவு), இசை, கதை, கட்டமைப்பு, ஆகிய நான்கு மனோபாவங்களில் ஏதாவது ஒன்றில் பிறக்கிறான் அதே நேரத்தில் மற்ற மூன்றையும் வலுப்படுத்துவதற்கு உரிய வேலையை அப்படி உருவாகும் கவிதைக்கு உள்ளே தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறான் என்கிறார் Gregory orr.

ஓலைச்சுவடி இதழ் 8 இல் வெளிவந்துள்ள ச.துரையின் “அலுவலகம் சில குறிப்புகள்” கவிதை மேலே குறிப்பிட்ட கற்பனையில் பிறந்து கதை கட்டமைப்பு இசை ஆகிய மூன்றையும் வலுப்படுத்துவதற்கு கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

நிறங்களின் விளிம்பில் இருந்து தொடங்கும் கவிதை “எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது”
என்று அருகில் உரையாடும் ஒரு நண்பனின் பேச்சைப் போல தொடங்குகிறது. ஆனால் “கவிதை ஒரு சுழல் நிலை என்று ஆலிஸ் புல்டன் கூறியதுபோல தொடர்ந்து செல்கிறது.

கற்பனை அல்லது புனைவு என்ற மனோபாவத்தில் பிறக்கும் கவிஞன் தொடர்ந்து கதையையும் கட்டமைப்பையும் வலுப்படுத்திக் கொண்டு செல்கிறான். அதற்கு உள்ளே செல்லும் வாசகனை ஒத்திசைவு கொள்ளச் செய்து இசையை உருவாக்குகிறார்.

சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்

இந்த வரிகள் நம் வாழ்வின் அன்றாடத்தோடு தொடர்ந்து பொருந்திப் போகிறது. சக பணியாளர் என்பவன் சக மனிதனாக விரிவு கொள்கிறான். சுட்டுவிரல் என்பது நம் வாழ்வின் இறக்கங்கள் ஆக மாறுகிறது.

ஆனால் அது ஒருபோதும் நிரந்தரமல்ல எனவே “இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு
“. என்று நம்மை ஒரே இடத்தில் தேங்கி விடாமல் நகர்த்துகிறார்

மணல்கடிகாரத்தை கூட இடையில் நிறுத்த அதிகாரம் இல்லாதவன் முகத்தில் உள்ள பள்ளங்களில் தேங்கும் கண்ணீரை தினமும் பெய்யும் மழை என்று சொல்வது கவிதையின் அற்புத அழகியல்.

வாழ்வில் எப்போதும் ஏதேனும் ஒரு அபாய மணி ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் அது கேட்கிறதோ இல்லையோ ஒருவர் ஓடுவதைப் பார்த்து மற்ற மனிதர்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்த கவிதையை வாசிக்கும் போது வாசகன் பல்வேறு சூழ்நிலை அனுபவங்களையும் மேற்குறிப்பிடப்பட்ட அனுபவங்களையும் பல்வேறு கோணங்களில் பெற முடியும் அந்தக் கவிதையை நீங்களும் படித்துப் பாருங்கள்

சிவப்பு

எப்போதைக்கும் போல்தான்
அந்நாளும் கொடுக்கப்பட்டது
எனது வெள்ளை கையுறை திடீரென சிவந்தது
பதறினேன் அதை மேலதிகாரி கவனிக்கவில்லை
ஆனாலும் பயந்தேன் கால்சாராய்க்குள்
கைநுழைத்து எடுக்கும் போது
சுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டது
சக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்
திரும்பத் திரும்ப கையை நுழைத்து
விரலை எடுக்க முயன்றேன்
இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்
சிவந்த கையுறை எங்கே போனதென்று தெரியவில்லை
பின்கதவின் வழியே ரகசியமாக
என்னை கொண்டு செல்லும் போது
கோட்டையின் பாதியை திறந்தார்கள்
அங்கு குவிந்திருந்தன ஏகப்பட்ட சுட்டுவிரல்கள்.

கருப்பு

எல்லோரும் உறங்கப் போனதும்
எனது சீருடை சொன்னது
உன்னால் உறங்க முடியாது
உன் மேலதிகாரி உன்னை விட
என்னைதான் அதிகம் நேசிக்கிறான்
நான் எதுவும் கூறவில்லை
அந்த பைப்பர் கூடம் காற்றில் ஆடியது
விடியும் போது நகர்ந்து வேறு
இடத்திற்க்கு போய்விடுமென நினைத்தேன்
காற்றில் குலுங்க குலுங்க சிரித்தபடி
சீரூடை மீண்டும் சொன்னது
எப்போதும் நான் கீழே விழலாம் பிறகு

நீ இலைகள்
உறங்குவதில்லையென பாடத் தயாராயிரு.

பச்சை

நிறைய புகார்களுக்கு மத்தியில் எனது
ஷுவை கழற்றச் சொன்னார்கள்
அதனுள் ஒரு சேரி படுத்திருப்பதாக
உதவியாளன் புகாரளித்தான்
மேலதிகாரி தனது மூக்கை பின்னந்தலைக்கு
மாற்றி வைத்தபடி நெருங்கினார்
உன்னுடைய எதற்கும் உதவாத சப்பாத்துகள்
மிதிபட தரையை கட்டவில்லை புரிகிறதா
நான் மிரண்டு போனேன்
உனது நல்ல ஷுக்கள் எங்கே?
படபடத்தபடியே பூர்வீகத்தில் என்றேன்.

சாம்பல்

மணல்கடிகாரத்தை இடையிலே நிறுத்தும்
அதிகாரம் கூட இல்லாத போதும்
அதை படுக்க வைக்க விரும்பினேன்
கொஞ்சம் கூட கனவுகளை நிமிர்த்த எண்ணியதில்லை
காய்ச்சிய இரும்பு ராடுகளை சுமக்கும்
நமது பற்களுக்கு இதெல்லாம் தேவையா என்பார்கள்
எதுவுமே தெரியாத மாதிரி வாழ முகம் கிடைத்திருக்கிறது
அதன் மேல் தினமும் இரும்பு ராடுகள் சரிய
முகத்தில் ஏகப்பட்ட பள்ளங்கள்
ஒவ்வொரு நாளும் அதில் மழை தேங்கியபடியே இருக்கிறது.

நீலம்

உயரமான சுவர்களுக்கு அடுத்து கடற்கரை வந்தது
எல்லோரும் இறங்கினோம்
நிறைய உதவியாளர்கள் இருந்தார்கள்
மேலதிகாரி பாதி உடயையோடு எங்களை நோக்கினார்
நீங்கள் குளிக்கலாம் ஆனால் உடைகளோடு என்றார்
எங்களுக்குள்ளே முகங்களை பார்த்தோம்
சீருடைகள் கடலை பார்த்தன.

செங்கருப்பு

சுற்றளவு விட்டமென தோண்டி
கற்கள் உறைகளென பூசப்பட்ட பின்
கிணற்றின் இடை இடையே இருந்த துளைகளை
மேலதிகாரி பார்த்தார்
பிறகு எங்களின் சிலரை துளைகளில்
நாள்முழுக்க பூசியபடி நிற்க வைத்தார்.

காவி

அன்று மதிலிலிருந்த பூனையொன்று
வெல்வேட் வெண் நிற திரைச்சீலையில் குதித்தது
எனக்கு என்ன செய்வதென்று தோன்றாத போதும்
சீலையின் கரையை உற்று நோக்கினேன்
அதிலிருந்த குட்டி குட்டி கரைகள் நீண்டு
ஒரு வரைபடத்தை நிவர்த்தி செய்தது
அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அபாயமணி ஒலித்தது எல்லோரும் என்னை தாண்டி
ஒருவன் தப்பித்துவிட்டான் என ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நன்றி: ஓலைச்சுவடி இதழ் 8

கவிஞர் ச.துரை தமிழின் குறிப்பிடத்தகுந்த இளம் தலைமுறைக் கவிஞர்களில் ஒருவர். இவரின் முதல் கவிதை தொகுப்பு மத்தி ( சால்ட் பதிப்பகம் ) குமரகுருபரன் இலக்கிய விருது வாசகசாலை இலக்கிய விருது ஆகியவற்றை பெற்றுள்ளது. இவருடைய கவிதைகள் தமிழில் அனேக இதழ்களில் வெளிவந்துள்ளன.

கவிதையின் உயரம்

கவிதைகள் படிமத்தாலும் சொற்களாலும் கருத்தாலும் தூக்கி நிறுத்தப்படுகின்றன.
கவிதை தனது உயரத்தைத் தானே வளர்த்துக்கொள்கிறது ஆனால் அதன் நிழலின் நீளம் மட்டும் எங்கு விழுகிறது என்று எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை அதை அனுபவித்து வாசிக்கும் ஒருவரால்தான் அதை கண்களால் காண முடியாமல் உணர்ந்து கொள்ள முடியும்.

இம்மாதம் ஓலைச்சுவடியில் வெளிவந்துள்ள கதிர் பாரதியின் கவிதைகளை வாசிக்கும் போதுநான் முதலில் குறிப்பிட்ட முதல் இரண்டான படிமத்தாலும் சொல்லாலும் உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கவிதைகளைக் காண நேர்ந்தது.

எல்லா திசையிலும் ஒளிரும் விளக்குகளால் சூழப்பட்டுள்ள ஒருவர் நிழலைக் காண்பது அரிது அதுபோல தண்ணி அருகில் இருப்பவற்றை கூர்ந்து நோக்கும் ஒருவர் கவிஞராக இருக்கும்போது அது கவித்துவம் நிரம்பிய ஒன்றாக மாறுகிறது. அந்தக் கவித்துவக் காட்சி கவிதையாக மாறும் போது மொழியின் ஒரு அற்புத கணமாக மாறுகிறது.

முதல் கவிதையில் உனது ஏரியை பெரிய கிண்ணம் ஆக நினைத்துக் கொண்டு செல்லும் சிட்டுக்குருவி கவிதை படிமத்தால் உயரமாகிறது.

அடுத்த கவிதை யதார்த்தம் என்ற சொல் தொழிற்படும்போது அதன் உச்சபட்ச உயரத்தை அடைகிறது

நான் குறிப்பிட்ட இரண்டு கவிதைகளை கீழே குறிப்பிட்டுள்ளேன் மற்ற கவிதைகளை வாசிக்க கீழே உள்ள இணைப்பை தட்டவும்.

சிட்டு

ஏரித் தண்ணீரை
கிண்ணத்தில் மொண்டுவைத்தேன்
சிட்டுக்குருவி தாகத்துக்கு.
பெரிய கிண்ணத்தில்
குடித்துக்கொள்கிறேன் என
ஏரிக்குப் பறந்தது சிட்டு.
இனி அது
எனை எப்படி நம்பவைக்கும்
தானொரு
சிட்டுக்குருவி என்று.

மலர் நீட்டம்

யதார்த்தத்தைவிட
சற்று நீட்டமாக வளர்ந்துவிட்ட
நெருஞ்சி மலர் நம்புகிறது
பூமியைத் தூக்கிக்கொண்டு
தான் பறப்பதாக.

சல்லிவேர்களும் நம்புகின்றன
அட்ச – தீர்க்க ரேகைகளுக்கு
தாங்கள் உயிரூட்டுவதாக.

சும்மா இருந்த பூமிமீது
ஒரு விதை விழ
சற்று நீட்டமாக
ஓர் அனுபவம் வளர்கிறது
அவ்வளவுதான்.

கதிர் பாரதி: சமகால தமிழ் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவருடைய முதல் தொகுப்பான மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அடுத்ததாக உயர்திணை பறவை (இன்சொல் பதிப்பகம்) என்ற தொகுப்பு வெளிவர உள்ளது. இவரின் கவிதைகள் தமிழின் அநே இதழ்களில் வந்துள்ளன. யுவ புரஸ்கார் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

நன்றி: ஓலைச்சுவடி இதழ் – 8

மலைையை நேசிப்பது எப்படி?

மலையை நேசிப்பது எப்படி?

நேர்மறையாக இருப்பது ஒரு மலைக்கு செல்வதைப் போன்றது எதிர்மறையாக இருப்பது ஒரு மலையிலிருந்து கீழே சறுக்குவது போன்றது

-சக் டி

மனித மனம் உயரத்தை மிகவும் இரசிக்கும் அது மலையாக இருந்தால் அதன் உச்சியாக இருந்தால் அம்மலையின் இளவரசன் போன்ற பெருமித உணர்வைத் தரும். அப்படியான ஒரு மலையேற்ற பயணம் பற்றிய கவிஞர் இந்திரன் அவர்களின் கவிதை தரும் அனுபவம் எளிமையான பேரழகி போல இருக்கு.

இந்தக் கவிதையை படிக்கும் போது முதலில் அதை long shot ல ஒரு Visuvalise பிறகு Close-up ல ஒரு Visualise என காட்டிவிட்டு

மலையை தன்னோடு உடன் ஏறி வந்த நண்பனைப் போல insight ஆகக் காட்டுவது மாறுபட்ட கோணம் இது படிப்பவர்களுக்கு நல்ல அனுபவம் தரும்

கவிதையில் juxtaposition மிக முக்கியமான அழகியல் அதை மலை என்ற மாபெரும் அமைப்பை எளிய மனிதனைப் போல அல்லது ஒரு செல்ல பிராணி போல கூட்டிசெல்வதாக கூறியுள்ளார்
சீனத்து நீர்வண்ண ஓவியம் என முதல் அலைவுறு பரப்பு | தெரிந்தவர்களுக்கு சீன ஓவிய அழகும் தெரியாதவர்களுக்கு அது சார்ந்த தேடலையும் தருகிறது
பிறகு
“திடீரென ஐம்பது வயது” என இரண்டாவது அலைவுறு பரப்பை முன்வைக்கிறது

முதல் அலைவுறுதல் மிக வலிமையாகவும் இருப்பது மலை ஏற்ற களைப்பையும்

இரண்டாவது மென்மையாக இருப்பது ஏறிய பின் வரும் ஆசுவாசத்தையும் தருவதாகக் கொள்ளலாம்

ஆனால் எனக்கு இரண்டாவது அலைவுறுதல் வரும் இடம் மகிழ்வின் சாதிப்பின் உச்சமாக அமையும் மலை உச்சி என்பதால் இன்னும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்

இந்தக் குறையை மலையை சகாவாக மாற்றியது தூள்தூளாக்கிவிட்டது

இப்போதுதான் புரிகிறது
நான் மலை ஏறியபோது
மலையும் என்னோடு ஏறி வந்திருக்கிறது என்று.
சமீப கவிதைகளில் மிக எளிமையான எல்லோருக்குமான நல்ல கவிதை புதியதாக வாசிக்க வருபவர்களுக்கு சுட்டிக்காட்ட கிடைத்த கவிதை இது . நமது பார்வையை கவிதையை ஒட்டி எழுதிப் பார்க்க கிடைத்த கவிதை

மலைக்காட்சி

சிகரத்தில் ஏற ஏற
சுவாரசியமாகி விடுகிறது மலை.
கீழே உள்ள மனிதர்கள்
எறும்புகளாக மாறிப் போகிறார்கள்.
தூரத்திலிருந்து பார்த்தபோது
குழந்தைகள் வரைவது போலிருந்த மலை
இப்போது
சீனத்து நீர்வண்ண ஓவியம்போல் தெரிகிறது.
பிறந்த குழந்தைக்குத் திடீரென
ஐம்பது வயது ஆகிவிட்டது போல
பார்வையில் பெரிய பக்குவம் வந்து விடுகிறது.

இப்போதுதான் புரிகிறது
நான் மலை ஏறியபோது
மலையும் என்னோடு ஏறி வந்திருக்கிறது என்று.
poetpoovithal@gmail.com

கவிதை என்னும் மின்சாரம்

கவிதை என்னும் மின்சாரம்

ஒரு கவிதையில் ஏதேனும் இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்

கவிதை என்பது அவற்றிற்கிடையே கடந்து செல்லும் மின்சாரம் போன்றது

அந்த இரண்டு விஷயம் எவை என்பதைக் கவிஞன் தான் தீர்மானிக்க வேண்டும் அப்படி தீர்மானிப்பதில் தான் கவிஞரின் அறிவும், நுட்பமும், உழைப்பும் இருக்கின்றன.

சொற்களால் கட்டமைத்த கவிஞனால் மட்டுமே உருவாக்க முடிந்த ஒரு காட்சிப் படிமம்
அல்லது சொற்களால் உருவாக்கப்பட்ட ஒரு வெளி
அதற்கு இணை கோடாகவோ அல்லது நேரெதிராகவோ கவிஞன் சொல்ல வரும் செய்தி அல்லது கவிஞனின் மனம் கவிஞனின் உலகம் எதுவாகவும் இருக்கலாம்
சில நேரங்களில் அது வெளிப்பாட்டு உத்தி ஆக கூட இருக்கலாம்

கடுக்காய் பால்

+

கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து

=

சுவர்

கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.

[ ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.

நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.

{ முத்துராசா குமார் – நன்றி – அரூ இதழ் }

உத்திக்கும் கருத்துக்கும் இடையில் வைத்து கவிதையை உருவாக்குகிறார்.
அற்புதமான கவிதையாக மாறுகிறது
முதலில் உருவாகும் கட்டுமானத்தின் மீது
கொத்தனும் சித்தாளும் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்பதில் எளிய மனிதர்களின் உழைப்பு மனிதனின் அன்றாட அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைப் போன்றது என்ற ஆழமான உள் உணர்வினால் ஊசி போகாமல் வாழ்கின்றனர் என்று சொல்கிறார்

அடுத்ததாக உள்ள


ஆணி இறங்கிய நெற்றியில்
தொன்ம புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்


என்ற பத்தியில் மிக நுட்பமான ஒரு காட்சிப் படிமத்தை உருவாக்குகிறார்
அதுமட்டுமல்லாமல் இந்த பத்திக்கு மேல் இருக்கும் அடைப்புக்குறி ஒரு புகைப்பட சட்டகம் போல் காட்சியளிப்பதும் ஒரு மாறுபட்ட அழகியல்

சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்

இந்தக்கடைசி பத்தியில் இறுதி வரிகள் இந்த கவிதையை மிக அற்புதமாக முடித்து வைக்கிறது

ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனதிற்கு நிறைய திறப்புகளை தரும் இந்த கவிதை மிக நேர்த்தியான பண்பினை மிக இயல்பான ஒரு புதிய உத்தியோடு இணைத்துள்ளது .

வாழ்த்துக்கள் முத்துராசா குமார்

முத்துராசா குமார், பிடிமண் (சால்ட் வெளியீடு) என்ற கவிதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் கவிஞர்

எதிர்க் கவிதை தாக்குப் பிடிக்குமா? – சித்துராஜ் பொன்ராஜ்

நண்பர் ஒருவர் நான் நிக்கனோர் பார்ராவின் ஸ்பானிய கவிதைகளைப் படித்துவிட்டுத் தானும் பல காலமாக எதிர்க்கவிஞராக இயங்கி வருவதாக என்னிடம் சொன்னார்.

நிக்கனோர் பார்ராவின் கவிதைகளை இரு வேறு சிந்தனைகள் எனக்குத் தோன்றின. ஒன்று, தமிழில் பார்ராவின் அளவுக்குக் கிரேக்க எதிர்க்கவிஞர் எலியஸ் பெட்ரோபூலோஸ் ஏன் வாசிக்கப்படவில்லை, அல்லது பேசப்படவில்லை (அல்லது ஏன் வேறெந்த உலக எதிர்க்கவிஞர்களும் பேசப்படவில்லை?)

இரண்டு, இந்த எதிர்க்கவிதை தாக்குப்பிடிக்குமா?

முதல் சிந்தனையை அப்படியே கைவிட்டு விட்டேன். புரிந்தாலும் புரியாவிட்டாலும் போர்ஹேஸையும் பாராட்டிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய விசாரிப்புக்கள் அபத்தம்.
எதிர்க்கவிதைகள் தாக்குப்பிடிக்குமா என்றால் அவை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டிருக்குமே தவிர கவிதையின் இடத்தை என்றுமே பிடித்துவிடாது என்பது எனது அபிப்பிராயம்.

எதிர்க்கவிதை அடிப்படையில் கவிதை என்ற வடிவத்தின் அத்தியாவசியக் கூறுகள் என்று அறியப்படுபவைகளை எல்லாம் நிராகரித்துவிட்டு எழுதப்படும் கவிதை.

குறிப்பாக லத்தீன் அமெரிக்க இலக்கியச் சூழலில் கவிதைகள் சந்த ஒழுங்கு, அணியலங்காரம், புளித்துப் போன பாடுபொருள் என்ற விஷயங்களில் மக்கிப் போய் நிலவும் சமுதாய அவலங்களோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத சொல் பிண்டங்களாக மாறி இருந்த சமயத்தில்தான் பார்ராவின் எதிர்க்கவிதைகள் தோன்றின.

பொது ஜனத்தின் அன்றாட பேச்சு வழக்கு, பயன்படுத்தும் சொற்கள், தேய்வழக்குகள், சாமானியர்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் என்பவைதான் எதிர்க்கவிதையின் லட்சணங்கள்.
லத்தீன் அமெரிக்கச் சூழலில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நிர்பந்தங்களை சாதாரண பேச்சு வழக்கில் உள்ள கவிதை வடிவத்தில் எடுத்துக் காட்டுவது பார்ராவின் குறிக்கோள்.

மிகப் பெரிய அவலங்களை சாதாரண பேச்சு வழக்கிலும் படிமங்களாலும் சொல்லும்போது ஒரு வகையான முரண் நகைச்சுவை சாத்தியமாகிறது. அவ்வகை முரண் நகைச்சுவையே வரிவரியாக அழுது வடிவதைக் காட்டிலும் அவலத்தின் தீவிரத்தை வாசகனுக்குத் தெளிவாகச் சொல்லிவிடுகிறது என்பது எதிர்க்கவிதையின் அடிப்படை சித்தாந்தம்.

அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானகுட் தன்னுடைய Slaughterhouse 5 நாவலில் இரண்டாம் உலகப் போரின் கொடூரத்தை எடுத்துக் காட்ட இதே உத்தியைப் பயன்படுத்துகிறார்.

ஆனால் எப்படிப் பார்த்தாலும் எதிர்க்கவிதை என்பது ஒரு குறிப்பிட்டச் சூழலுக்குப் பயன்படுத்தும் உத்திதான். அதுவே முற்று முதலான கவிதை வடிவம் அல்ல. உலக எதிர்க்கவிதை பிதாமகர் என்று அழைக்கப்படும் பார்ராகூட தொடர்ந்து அழகியல் கூறுகளை உள்ளடக்கிய கவிதைகளை எழுதி வந்திருக்கிறார்.

1954ல் வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்புக்கு “கவிதைகளும் எதிர்ம்கவிதைகளும்” என்பது தலைப்பு.

மேலும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் பெரிய விருப்பமுள்ள பார்ரா ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய iambic pentameter ஆங்கில யாப்பு வடிவத்துக்கு ஒப்பான ஸ்பானிய யாப்பு வடிவத்தில் கவிதைகள் எழுதியிருக்கிறார். (இந்த யாப்பு கவிதைகளுக்கு அவர் தந்த பெயர் ‘பழைய ஜாடிகளில் புது மது’ அல்லது ‘அழகிய கிரேக்க ஜாடியில் மலம்’).
சில ஆயிரம் வரலாறுடைய தமிழ்க் கவிதை வெளியில் எதிர்க்கவிதைகள் பல உத்திகளில் ஒன்றாக இருக்குமே அன்றி அதுவே எதிர்க்கால தமிழ்க் கவிதக் வடிவமாகாது.

சாமியைத் தூக்கி வரத்தான் பல்லக்கு, பல்லக்கே சாமியாகிவிடக் கூடாது.

ஆசிரியர் குறிப்பு

சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். பதினோரு மொழிகள் தெரிந்தவர் . ரஷ்ய மொழியில் இருந்தும் ஸ்பானிஸ் மொழியில் இருந்தும்இவர் மொழிபெயர்த்த கவிதைகள் விரைவில் தனிநூலாக வர உள்ளன. இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இவருடைய ஆங்கில கவிதை தொகுப்பும் ஆங்கில மொழியில் சிறுகதைத் தொகுப்பும் வெளிவர உள்ளன.

அவருடைய வலைப்பக்கம்

https://sithurajponraj.net/

தமிழ்க் கவிதைகளின் இன்றைய நிலை – 3


தலைப்புகளின் – காலம்

ஸ்காட்லாந்து நாட்டின் வரைபடத்தில் எங்கு தொடுகிறோமோ அந்த இடத்தை பற்றி ஒரு கவிஞர் எழுதிய கவிதையை படிக்கும் அளவுக்கு stanzapoetry என்ற இணைய இதழ் கவிதை வரைபடம்-( poetery map) என்ற புதுமையான முன்னெடுப்பை வழங்குகிறது, இதே போல pover poetery என்ற இணையதளமும் அமெரிக்க கவிஞர்களைக் வரைபடத்தில் காட்டுகிறது.
நிலம் சார்ந்த கவிதைகளை எழுதிய நம் முன்னோர்களும் அதை அவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்திய முன்னோர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் கவிதையில் புதுமையை செய்திருக்கிறார்கள்
ஆங்கில கவிதை உலகில் 1920களில் தான் எஸ்ரா பவுண்ட் அவர்கள் படிமம் என்ற இயக்கத்தை தொடங்குகிறார் ஆனால்அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ளுறை இறைச்சி போன்ற உத்திகள் தமிழின் அகப்பாடல்களில் அதிகம் காணலாம்
மேற்கண்ட கருத்துகளைப் பொருத்திப் பார்க்கும்போது தமிழ் கவிதைகள் அடிப்படையில் காலம்தோறும் தனக்குள்ளேயே ஏதேனும் ஒரு புதுமையை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது எனலாம்.
அதில் எதுகை மோனை என்று தொடங்கும் ஏழு நயங்கள் மட்டுமின்றி பாடலின் பொருளும் அது தரும் அழகுக்காகவும் செந்தொடை என்ற எட்டாவது நயத்தை அமைத்தனர். அதற்கு எடுத்துக்காட்டாக மிகவும் புகழ்பெற்ற பின்வரும் சங்கப் பாடலைக் குறிப்பிடலாம்

பூத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே

இன்றளவும்கூட சம கால தமிழ் கவிதைகள் இந்திய மொழிகளில் எழுதப்படும் மிகச்சிறந்த கவிதைகளாக விளங்குகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி மிகச் சிறந்த கவிதைகளை எழுத இளம் எழுத்தாளர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தப் பத்தியை எழுதுகிறேன்.

என்னுடைய முதல் கவிதை தொகுப்பான

வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி – நூல் குறித்த கருத்துக்களை நான் பலரிடம் கேட்டு அதில் உள்ள குறைபாடுகளை எப்படி களைவது என்றும் அறிந்து கொண்டேன் அவற்றோடு உங்கள் கவிதை எப்படி இருந்தால் கவனிக்கப்படும் என்பதைப் பற்றி நான் படித்து தெரிந்து கொண்ட செய்திகளை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்

கவிதைகளுக்கான தலைப்பைத் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்-
சமீபத்தில் வெளிவந்து சிறந்த கவிதைத் தொகுப்புகள் ஆக பேசப்பட்ட நூல்களில் நீளமான, புதுமையான தலைப்புகள் வைப்பது அந்தக் கவிதையை படிப்பதற்கான ஆவலையும் தூண்டுதலையும் எடுத்த எடுப்பிலேயே தருவதாக அமைகின்றன. எழுதியிருக்கும் கவிதையிலிருந்து ஒரு வரியை தேர்ந்தெடுத்தல் அல்லது ஒரே சொல்லில் ஒரு தலைப்பை வைப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளை மாற்ற முயற்சி செய்யலாம்,
இதற்கு உதாரணமாக Puschcart விருது பெற்ற ஒரு கவிதையின் தலைப்பையும் எனக்குப் பிடித்தமான ஆங்கில கவிதை நூலில் உள்ள ஒரு கவிதையின் தலைப்பையும் உங்களுக்கு தர விரும்புகிறேன்

“To the Man on the Bus Who Told Me to Go Back to Where I Came From ” – By Gavin Gao

“ Poem to be found among my possession following the occasion of my sudden disappearance and analysed for clues as to where I may have gone and why” –

_ இந்தக் கவிதை இடம்பெற்ற நூலைப் பற்றியும் நூல் ஆசிரியரைப் பற்றியும் வேறு ஒரு தனித்த பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.

தமிழிலும் இதுபோன்ற கவரும் வகையிலான தலைப்புகள் பல நூல்களில் இடம்பெற்றுள்ளன. அதற்கு உதாரணமாக சமீபகாலங்களில் நான் வாசித்த நூல்களில் இருந்து சில தலைப்புகளை கீழே கொடுத்துள்ளேன் இதில் பல நூல்களில் உள்ள கவிதை தலைப்புகள் விடுபட்டிருக்கலாம்,

எனக்கு பிடித்த பெண்கள் எல்லோரும் ஆபாசத்துக்கு எதிரானவர்கள்
200 ஆம் ஆண்டை ஒரு சாண்ட்விச் தலைமுறைக்காரன் பார்க்கிறான்- சித்துராஜ் பொன்ராஜ்

சோகை பீடித்த அன்றாடத்தை விட்டு வெளியேற கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்குஅறிவுரை என்றால் திறக்கும் ஆண் வாய் அத்தனை பெரியது – பெருந்தேவி

எவ்வளவு பலம் கொண்டு ஊதியும் அதிகாரத்தின் மயிர் அசையாதது கண்டபின் ஒவ்வொரு மயிராக சுட துவங்கி விட்டவன்
தங்கவேல் முத்துவேல் ஞானவேல் வடிவேல்- இசை

ஒரு மரத்தை நம் வழிக்குக் கொண்டுவர
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் – இளங்கோ கிருஷ்ணன்

உலகத்தின்அத்தனை மகிழ்ச்சியான சொற்களாலும் எழுதப்பட்ட துயரம்
பறவைகள் குறித்த கவிதை உவமையை யாரும் புரிந்துகொள்ளவில்லை தட்சனே – வெய்யில்

லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கிழங்கு-மௌனன் யாத்ரீகா

சர்ரியலிசத்தனமான ஒரு பெண் முலை
டக்…டக்…டக்… டக்… டக்… -நரன்

வாரத்தின் எட்டாவது நாளில் வந்த கனவு குறிப்பு
காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன்
மீன்களை மனிதர்கள் போல யோசிப்பதை விட்டுவிடுங்கள் – பூவிதழ் உமேஷ்

நடுஇரவில் கரைந்து அழும் பூனைகளுக்கு- ஷங்கர்ராம சுப்ரமணியன்

கொஞ்சம் சுகவீனமும் சில மருந்து துணுக்குகளும் – கனிமொழி – ஜி

பிறை நிலவிலிருந்து மேகம் புடவையாக வீழ்வது- தேன்மொழி தாஸ்

உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்
செம் புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி- ஸ்டாலின் சரவணன்

முகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு
நனைந்த ஆடைகளை மழை நினைப்பதில்லை- பெரு. விஷ்ணுகுமார்

ஐந்து அப்பங்களும் இரு மீன்களும் ஒரு சிலுவையும்
வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்கு பழக்குதல் – கதிர்பாரதி

ஒரு பன்றியை வளர்ப்பதன் பின்னணியில் உள்ள இறையாண்மை எனும் கெட்ட வார்த்தை
தலைவன்தலைவி செய்ய தேவையான பொருட்கள் – ராம் சந்தோஷ்

இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள் – துரை

குதிரை முடியால் கொலை செய்யும் பெண்- நேசமித்திரன்

ஒரு செங்கொடி ஊர்வலம் சாலையை கடந்த பிறகு- ஸ்ரீசங்கர்

அதிகம் பயன்படுத்தப்பட்ட காலுறை என நாறும் ஒரு முத்தம்- சபரிநாதன்

சற்றே மேடான மூலையில் ஒடுங்கிய படி இரவைக் கழித்தல்- இயற்கை
சின்னஞ்சிறியசந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன – வே.நி.சூர்யா

நூலகத்தின்இருண்ட அறை புத்தகத்தின் பக்கங்களில் இருந்து- வேதாநாயக்

பியானோ என்பது ஒரு நீண்ட சவப்பெட்டி- சுபா செந்தில்குமார்

அவரது படுக்கையில் இருக்கும் ஒரு இறந்த மனிதருக்கு- சமயவேல் மொழிப்பெயர்ப்பு

கண்ணே நீ தான் உலகின் அன்றலர்ந்த அணிகலன்
என் சாவுக்கான இடம் டாட் காம் – அனுராதா ஆனந்த் மொழிபெயர்ப்பு

நூல் முழுவதும் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரே தலைப்போடு வரிசை எண் கொடுக்கப்பட்டு இருப்பதும் ஒரு முறையாக உள்ளது உதாரணம்
கோமாளிகளின் நரகம் கவிதைக்காரன் இளங்கோ

சில கவிதைகளுக்கு எண்களால் குறியீடுகளால் எழுத்துக்களால் தலைப்புகளை தருவதும் உண்டு
நாம்இதுவரை அறிந்திருந்த புகழ்பெற்ற வரிகளையே தலைப்புகளாககொண்ட கவிதைகளும் உண்டு உதாரணம்
உண்ண நாழி உடுக்க இரண்டு – யவனிகா ஸ்ரீராம்

இவ்வாறு அமையாமல் ஒரு தொகுப்பு முழுவதும் எவ்வித கவிதை தலைப்பு அமையாமலும் தொகுப்புகள் வெளிவந்துள்ளன உதாரணம்
சிறிய எண்கள் உறங்கும் அறை போகன் சங்கர்
உலர் இலை பக்கங்கள்- எஸ். சண்முகம்

எனவே ஒரு கவிதையின் தலைப்பு அந்த கவிதைக்கான நுழைவாயிலாக இருப்பது மட்டுமல்லாமல் வாசகனை ஈர்க்கும் ஒரு உத்தியாகும் இன்றைய கவிதைகளில் பார்க்கப்படுகிறது
இனி வரும் பதிவுகளில் கவிதையில் இடம்பெறும் சமகால கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பார்க்கலாம். வாசிப்பவர்கள் தவறாமல் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.