துரிஞ்சி : தெளிவின்மையின் இன்பம் – கவிஞர் கரிகாலன்


~
பூவிதழ் உமேஷின் துரிஞ்சி வெளியீட்டு நிகழ்வில் ஒரு பார்வையாளனாகச் சென்றிருந்தேன். திடீரென பேசச் சொன்னார்கள். திகைத்தேன். ஒருவழியாக சமாளித்து அவரது முந்தைய தொகுப்பை வாசித்ததின் வழி, உருவாகியிருந்த அபிப்ராயத்தை ஓரிரு சொற்களில் பகிர்ந்தேன்.

வெளியீட்டில் எனது கையிலும் துரிஞ்சி தொகுப்பை கொடுத்தார்கள். நள்ளிரவு ஊர் திரும்பியபோது துரிஞ்சியை ஞாபகமாக எனது பையில் எடுத்து வைத்தேன்.

Poovithal Umesh இன் கவிதைகளை இன்றுதான் வாசிக்க முடிந்தது. முழுவதும் இன்னும் வாசிக்கவில்லை. ஆனாலும் படித்த கவிதைகள் அனைத்துமே தமிழுக்குப் புதியன. கொலம்பஸைப்போல அவரது மொழி புதிய திசைகளைத் தேடிச் செல்கிறது.

வேளாண் நிலங்கள், விதைகள், தாவரங்கள், உழுகுடிகள், கால்நடைகள் இவற்றைதான் உமேஷும் எழுதுகிறார். ஆனாலும் அவர் எழுதும்போது மீன்கள் விதைகளாகின்றன. கடல் கவிதைகளை உண்கிறது. சூரியனின் காய்கறிக் கூடையில் மனிதர்கள் இருக்கிறார்கள்.
அவர் மேய்க்கும் எருமைக்கன்று குனிந்து வணக்கம் சொல்லும்.
எல்லா மலைகளும் பெண்களின் மார்புகளில் இருந்து உருவாகின்றன.

‘கலை என்பது கலைஞரின் உள்ளார்ந்த சிதைவால் ஈர்க்கப்பட்ட வெளிப்புற ஒருங்கிணைப்பு!’ எனும் கிளைவ் ஜேம்ஸ் கூற்றுதான் ஞாபகம் வருகிறது. ஒருவர் தனக்குள் உடையாமல் ஒரு கவிஞராக முடியாது.

இந்தச் சிதைவு எவ்வாறு ஏற்படுகிறது? அதிகாரம்தான் மனிதர்களின் தன்னிலையைக் (subjective)
கட்டமைக்கிறது. அதிகாரத்திடமிருந்து விடுபட்டு சுதந்திரமடைய விரும்புவர்களின் தேடலே இத்தகு சிதைவை ஏற்படுத்துகிறது.

இந்த சிதைவின் வழி அவர்கள் அதிகாரத்தை குழம்பச் செய்கிறார்கள். அதிகாரத்துக்கு எதிராகப் பேசிய கௌரி லங்கேஷுக்கு சமர்ப்பணமாக ஒரு கவிதை எழுதுகிறார் உமேஷ். /என் நாக்குக்குப் பதிலாக ஒரு கோடை மலரை வைத்திருக்கிறேன். இனி அவர்கள் என் நாக்கை எத்தனைமுறை வேண்டுமானாலும் துண்டிக்கட்டும்/
You can cut all the flowers but you cannot keep Spring from coming என்பாரே பாப்லோ நெருடா, அப்படி தமிழில் எழுத நமக்குக் கிடைத்த கவிஞன் பூவிதழ் உமேஷ்.

கவிதை விமர்சகர்களுள் முக்கியமானவரான பிலிப் லார்கின் கூறுகிறார், ‘அசல் தன்மை என்பது தன்னிலிருந்து வேறுபட்டது. மற்றவர்களிடமிருந்து அல்ல.’
உமேஷ் தொடர்ந்து தன்னிலிருந்தே, தன்னை குருதி வழிய புதிதாகப் பிய்த்து எடுத்துக் கொள்கிறார். ஒரு கவிதையில் கையாண்ட தேய்வழக்கை எவ்வித துயருமின்றி அடுத்த கவிதையில் விட்டுவிடுகிறார்.

கவிதைகள் அர்த்தத்தால் நம்மை மூடுபவை அல்ல. கற்பனையால் வாசிப்பவரை மலர வைப்பவை . ‘தெளிவின்மை அதிகமானால், இன்பம் அதிகமாகும்! ‘ என்றவர் மிலன் குந்தேரா. உமேஷின் கவிதைகள் தெளிவின்மையின் இன்பத்தை தம்முள் வைத்திருப்பவை.

வாழ்வின் சிக்கல்களோடு உரையாடுபவை இவரது கவிதைகள். அசட்டுத்தனமான எளிமையிலிருந்து தப்பி விலகும் மொழியின் அற்புதத்தை உடையவை. அபத்தங்களை உன்னதமாக்கும் முயற்சி உடையவை. சாமுவேல் ஜான்சன் சொல்வார்.
‘ஏறக்குறைய அனைத்து அபத்தமான நடத்தைகளும், நம்மால் ஒத்திருக்க முடியாதவர்களைப் பின்பற்றுவதிலிருந்து எழுகின்றன!’ ஒத்துப்போகாத பிறழ்மனமே கவிதையின் தாய்.

உமேஷின் ஒரேயொரு கவிதையை மட்டும் இங்கே பகிர ஆசைப்படுகிறேன்.

பறவைகளின் மூன்று வேலைகள்

பள்ளி நண்பர்களைப் போல
தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு
அவை நாள்தோறும்
மூன்று வேலைகளைச் செய்கின்றன
துல்லியமான தருணத்தில்
மரத்தின் உறுப்பாக இருப்பது
பறக்கும்போது
மேகங்களைப் போல நடித்துக்காட்டுவது
அப்பறவைகளின் பெயரிலேயே
மீதம் வாழ்வது என
மூன்று வேலைகளைச் செய்கின்றன.

பகல் முழுவதும் பள்ளியின் ஒரு உறுப்பாக இருந்தேன். இப்போது கவிதை விமர்சகனைப்போல் நடித்துக் காட்டுகிறேன். கரிகாலன் எனும் பெயரிலேயே மீதமுள்ள நாட்களையும் வாழ்வது எனும் தீர்மானத்தோடும் இருக்கிறேன்.

என்னால் உமேஷை நெருங்க முடிகிறது. அதிகாரம் சிவிலியன்களின் நிலையை
தெளிவற்றதாக மாற்றியிருக்கிறது. ஆகவேதான் சிமோன் டி பொவார் , குடிகள் தோல்வி மற்றும் மூர்க்கத்தனத்தின் மூலம் தன் இருப்பைக் காப்பாற்ற முயல்கிறார்கள்! என்கிறார்.

இதைதான் கவிஞர்கள் மொழியில் காட்டுகிறார்கள்.

வாழ்த்துகள் பூவிதழ் உமேஷ்.
••

துரிஞ்சி
எதிர் வெளியீடு,
அ.பே 99425 11302

Leave a comment