குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாக்கு



#தண்ணீரின்_சிரிப்பு

ஸுரோவ்ஸ் அஃபோரிஸம் (தமிழில் கணேஷ்ராம் மொழிபெயர்த்து நூல்வனம் வெளியீடாக வந்தது) என்ற ஃபிரான்ஸ் காஃப்காவின் நுண்கவிதைகள் படித்தபோது நான் முதலில் ஏங்கியது, நேரடித் தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருமா என்றெண்ணினேன்.

அதன் பின், பாதசாரி ஐயாவின் “ஆழ்ந்தவின்ற சான்று” ஓரளவுக்கு அஃபோரிஸத்துக்கு நெருக்கமான புத்தகமாக எனக்குத் தோன்றியது.

அஃபோரிஸம் என்றால் என்ன? உலகின் பல்வேறு தத்துவங்களை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே கட்டமைத்து அவற்றைப் பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதி குவித்திருக்கிறார்கள். அதை மீறியத் தனி மனித கண்டடைவுகளை கவிஞனின் மனநிலையுடன் அணுகி, அதன் சக்கையை உதறி சாறை மட்டும் பருகத் தருதல். குறும்பாக்களாக மாறிவிடக் கூடிய எல்லா அடையாளமும் கொண்டவை அஃபோரிஸ கவிதைகள்.

பூவிதழ் உமேஷ் அவர்களின் “தண்ணீரின் சிரிப்பு” பற்றி முதலில் கேள்வி பட்டபோது அத்தொகுப்பை “தமிழின் முதல் அஃபோரிஸ கவிதை நூல்” என்ற அறிவிப்பு ஈர்த்தது. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. குழந்தையின் கையிலிருக்கும் செரலாக்கைத் தொட்டு நக்கத் துடிக்கும் தந்தையின் நாவைப் போல் எச்சிலூறியது.

அதேநேரம், பூவிதழ் உமேஷ் மற்றும் தாமரைபாரதி அவர்களுடன் அப்போது நிகழ்ந்த ஒரு ஃபோஸ் புக் உரையாடலில், திருக்குறள் இருக்கும் போது இதெப்படி தமிழின் முதல் அஃபோரிச நூலாக முடியும் என்ற ஒரு நல்ல விவாதம் நிகழ்ந்தது. அது பல புரிதல்களை ஏற்படுத்தியது. ஆனால், கண்டிப்பாக இந்நூல் அஃபோரிஸ கவிதை வெளிக்கான ஒரு மிகச்சிறந்த கதவைத் திறந்து விட்டிருப்பதாகவே எனக்கு இப்போது இந்நூலை வாசித்த பின் தோன்றுகிறது.

நூலின் சாராம்சமென்று சொல்ல வேண்டுமென்றால், பார்ப்பவற்றிலிருந்து உணர்ந்தவற்றைப் பிடித்து தன் மொழி ஆளுமையைத் தூரிகையாக்கிப் பட்டாம்பூச்சிக்கு வண்ணமடிப்பதைப் போன்று அழகாக படைத்திருக்கிறார். பல கவிதைகளில் பட்டாம்பூச்சிகள் உயிர் பெற்று படபடக்கிறது. அதை நாம் உணர்ந்து நம் மனம் படபடக்கவும் செய்கிறது. அதுவே நூல் ஆசிரியரின் வெற்றியென்று எனக்குப் படுகிறது.

சிலவற்றை நீக்கிவிட்டு, இன்னும் கொஞ்ச காலம் அவற்றில் இன்னும் ஒட்டியிருக்கும் சில சக்கைகளை மட்டும் நீக்கி மற்றொரு அஃபோரிஸ நூலில் நம்மிடம் கொடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

உதாரணத்துக்கு சில அஃபோரிஸ கவிதைகளை இங்கேப் பகிர்ந்து முடித்துக் கொள்ளலாம்தான். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்று எளிதில் விலக்கி வைத்து விட முடியாத பல அழகான பலாச்சுளைகள் நிறைந்த பழுத்த பலாவாக இருக்கும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்ல அந்த ஒரு கவிதையை மட்டும் பகிரவே எனக்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனாலும், ஒன்றே ஒன்று…

*******
அவசர காலத்தில் வெளியேறும்போது
கதவு அதிக பயன்மிக்கதாக மாறுவது போல
சில மனிதர்கள் இருக்கிறார்கள்.
*******
நன்றி!
– கவிஞர் குமரகுரு

மகாத்மா காந்திக்கு ஒரு கவிதை

Lexotan 12 ம்~ காந்தியாரும்

மனநல மருத்துவர் என்னிடம் கேட்டார்:

உங்கள் மூளையில் இருக்கும் அனைத்தையும் சொல்லுங்கள்.

நான் கஷ்டப்பட்டேன்~

நான் அமைதியாக இருந்தேன்.

அவர் மீண்டும் கேட்டார்:

நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்?

பிரதமரின் உடை அலங்காரத்தை நினைத்துக் கொண்டிருக்கும் போது

திடீரென காந்தியிடமிருந்த

காகா கலேல்கரின் கைத்தடி ஞாபகம் வந்தது

அமைதியாக இருந்தேன்

அடுத்து கேட்டார்:

எதைப் பற்றி கவலைப்படுகிறீர்?

இந்திய நகரங்களின் பழைய பெயர்களுக்கும் எனக்குமான தூரம் குறித்து கவலைப்படுகிறேன் என்பதை மறைத்தேன்

இரண்டு நதிகளுக்கு இடையேயான குறைந்த தூரம் கண்ணீர் வழியும் இரு விழிகளுக்கு இடையேயானது என்றேன்.

அவர் உத்திரபிரதேசத்தில் வீடுகளை இடித்த JCB போல மூச்சு விட்டார்.

எனக்குக் குழப்பமாக இருந்தது.

கண்களை மூடும் போது உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்றார்.

கண்களை மூடினேன்

கல்கத்தாவின் ஒரு தெருவில்

காந்தியின் ஒரு துளி கண்ணீர் உலர்ந்த ஓர் இலையின் மீது விழுந்தது**

மருத்துவர் சொன்னார்:

இந்த ஆண்டிலும் நம்மால் எதுவும் செய்ய முடியாத இரண்டு நாட்கள் உள்ளன:

நேற்று மற்றும் நாளை*

காந்தியின் குரல் அவருக்கு எப்படி வந்தது?

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது

தெளிவு மெல்ல கூடியது

காந்தி ஒரு பாதி மனநல மருத்துவர் என்று

கண் விழித்து நிமிர்ந்தேன்.

எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது* என்று எழுதிய

சுவர் நாட்காட்டி தொங்கியது

மருத்துவர் தந்த

மருந்து சீட்டைப் பார்த்தேன்

Tab -Lexotan 12

காந்தி என்று எழுதி இருந்தது.

******

*****

*  காந்தியடிகள் எழுதியவை

** 14.8.1947 அன்று நவகாளி யாத்திரையில் நடந்தது.

மன நல மருத்துவர்

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா



இந்திய மொழிகளுக்கான கொண்டாட்டமாகத் கருதப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா கடந்த வியாழன் அன்று  நோபல் விருது பெற்ற எழுத்தாளர் அப்துல் ரசாக் குரானா அவர்களின்  தொடக்க உரையுடன் தொடங்கியது. எதிர்ப்பின் ஒரு வடிவமாக எழுதுதல் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
அதில் எழுதுவது என்பது மறதி, கவனச்சிதறல், புறக்கணிப்பு, நமக்குத் தெரிந்ததையும், நாம் நினைவில் வைத்திருப்பதையும் கடந்துபோக வைப்பதற்கான எதிர்ப்பின் வடிவமாக இருக்கிறது என்று அவர் பேசியுள்ளார்.

இவ்விழாவில் 21 இந்திய  மற்றும் 14 சர்வதேச மொழிகளைச் சேர்ந்த 350 எழுத்தாளர்களும் கவிஞர்களும் பங்கு கொண்டு ஐந்து அமர்வுகளில் உரை நிகழ்த்துகிறார்கள். 

நாளை மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி இந்த இலக்கியத் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கவிஞருக்கு வழங்கப்படும் கவிதைக்கான மகாகவி கண்ணையாலால் சேத்தியா விருது இந்த ஆண்டு  மலையாள கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்கள் பெறுகிறார். மலையாளத்திலிருந்து அவருடைய கவிதைகளும் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மனித ராசியின் தாய்மொழி கவிதை. அது மொழிகளுக்கு அப்பாலிருக்கும் மொழி. அது எல்லோருக்கும் சொந்தமானதுதான். மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும்கூட என்று சொல்லவே விரும்புகிறேன். ஏனெனில், கவிதையினூடாகப் பேசுவது மனிதர்கள் மட்டுமல்ல. அசைவதும் அசையாததுமான பிரபஞ்சம் முழுவதும்தான்.

– சச்சிதானந்தன்

அவருடைய   இரண்டு கவிதைகள்.

தமிழில் சுகுமாரன்

நினைவில் காடுள்ள மிருகம்

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.
அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன”

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது,
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்.
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்.
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்.
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.
நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.

துரிஞ்சி : தெளிவின்மையின் இன்பம் – கவிஞர் கரிகாலன்


~
பூவிதழ் உமேஷின் துரிஞ்சி வெளியீட்டு நிகழ்வில் ஒரு பார்வையாளனாகச் சென்றிருந்தேன். திடீரென பேசச் சொன்னார்கள். திகைத்தேன். ஒருவழியாக சமாளித்து அவரது முந்தைய தொகுப்பை வாசித்ததின் வழி, உருவாகியிருந்த அபிப்ராயத்தை ஓரிரு சொற்களில் பகிர்ந்தேன்.

வெளியீட்டில் எனது கையிலும் துரிஞ்சி தொகுப்பை கொடுத்தார்கள். நள்ளிரவு ஊர் திரும்பியபோது துரிஞ்சியை ஞாபகமாக எனது பையில் எடுத்து வைத்தேன்.

Poovithal Umesh இன் கவிதைகளை இன்றுதான் வாசிக்க முடிந்தது. முழுவதும் இன்னும் வாசிக்கவில்லை. ஆனாலும் படித்த கவிதைகள் அனைத்துமே தமிழுக்குப் புதியன. கொலம்பஸைப்போல அவரது மொழி புதிய திசைகளைத் தேடிச் செல்கிறது.

வேளாண் நிலங்கள், விதைகள், தாவரங்கள், உழுகுடிகள், கால்நடைகள் இவற்றைதான் உமேஷும் எழுதுகிறார். ஆனாலும் அவர் எழுதும்போது மீன்கள் விதைகளாகின்றன. கடல் கவிதைகளை உண்கிறது. சூரியனின் காய்கறிக் கூடையில் மனிதர்கள் இருக்கிறார்கள்.
அவர் மேய்க்கும் எருமைக்கன்று குனிந்து வணக்கம் சொல்லும்.
எல்லா மலைகளும் பெண்களின் மார்புகளில் இருந்து உருவாகின்றன.

‘கலை என்பது கலைஞரின் உள்ளார்ந்த சிதைவால் ஈர்க்கப்பட்ட வெளிப்புற ஒருங்கிணைப்பு!’ எனும் கிளைவ் ஜேம்ஸ் கூற்றுதான் ஞாபகம் வருகிறது. ஒருவர் தனக்குள் உடையாமல் ஒரு கவிஞராக முடியாது.

இந்தச் சிதைவு எவ்வாறு ஏற்படுகிறது? அதிகாரம்தான் மனிதர்களின் தன்னிலையைக் (subjective)
கட்டமைக்கிறது. அதிகாரத்திடமிருந்து விடுபட்டு சுதந்திரமடைய விரும்புவர்களின் தேடலே இத்தகு சிதைவை ஏற்படுத்துகிறது.

இந்த சிதைவின் வழி அவர்கள் அதிகாரத்தை குழம்பச் செய்கிறார்கள். அதிகாரத்துக்கு எதிராகப் பேசிய கௌரி லங்கேஷுக்கு சமர்ப்பணமாக ஒரு கவிதை எழுதுகிறார் உமேஷ். /என் நாக்குக்குப் பதிலாக ஒரு கோடை மலரை வைத்திருக்கிறேன். இனி அவர்கள் என் நாக்கை எத்தனைமுறை வேண்டுமானாலும் துண்டிக்கட்டும்/
You can cut all the flowers but you cannot keep Spring from coming என்பாரே பாப்லோ நெருடா, அப்படி தமிழில் எழுத நமக்குக் கிடைத்த கவிஞன் பூவிதழ் உமேஷ்.

கவிதை விமர்சகர்களுள் முக்கியமானவரான பிலிப் லார்கின் கூறுகிறார், ‘அசல் தன்மை என்பது தன்னிலிருந்து வேறுபட்டது. மற்றவர்களிடமிருந்து அல்ல.’
உமேஷ் தொடர்ந்து தன்னிலிருந்தே, தன்னை குருதி வழிய புதிதாகப் பிய்த்து எடுத்துக் கொள்கிறார். ஒரு கவிதையில் கையாண்ட தேய்வழக்கை எவ்வித துயருமின்றி அடுத்த கவிதையில் விட்டுவிடுகிறார்.

கவிதைகள் அர்த்தத்தால் நம்மை மூடுபவை அல்ல. கற்பனையால் வாசிப்பவரை மலர வைப்பவை . ‘தெளிவின்மை அதிகமானால், இன்பம் அதிகமாகும்! ‘ என்றவர் மிலன் குந்தேரா. உமேஷின் கவிதைகள் தெளிவின்மையின் இன்பத்தை தம்முள் வைத்திருப்பவை.

வாழ்வின் சிக்கல்களோடு உரையாடுபவை இவரது கவிதைகள். அசட்டுத்தனமான எளிமையிலிருந்து தப்பி விலகும் மொழியின் அற்புதத்தை உடையவை. அபத்தங்களை உன்னதமாக்கும் முயற்சி உடையவை. சாமுவேல் ஜான்சன் சொல்வார்.
‘ஏறக்குறைய அனைத்து அபத்தமான நடத்தைகளும், நம்மால் ஒத்திருக்க முடியாதவர்களைப் பின்பற்றுவதிலிருந்து எழுகின்றன!’ ஒத்துப்போகாத பிறழ்மனமே கவிதையின் தாய்.

உமேஷின் ஒரேயொரு கவிதையை மட்டும் இங்கே பகிர ஆசைப்படுகிறேன்.

பறவைகளின் மூன்று வேலைகள்

பள்ளி நண்பர்களைப் போல
தோற்றமளிக்கும் சில பறவைகள் உண்டு
அவை நாள்தோறும்
மூன்று வேலைகளைச் செய்கின்றன
துல்லியமான தருணத்தில்
மரத்தின் உறுப்பாக இருப்பது
பறக்கும்போது
மேகங்களைப் போல நடித்துக்காட்டுவது
அப்பறவைகளின் பெயரிலேயே
மீதம் வாழ்வது என
மூன்று வேலைகளைச் செய்கின்றன.

பகல் முழுவதும் பள்ளியின் ஒரு உறுப்பாக இருந்தேன். இப்போது கவிதை விமர்சகனைப்போல் நடித்துக் காட்டுகிறேன். கரிகாலன் எனும் பெயரிலேயே மீதமுள்ள நாட்களையும் வாழ்வது எனும் தீர்மானத்தோடும் இருக்கிறேன்.

என்னால் உமேஷை நெருங்க முடிகிறது. அதிகாரம் சிவிலியன்களின் நிலையை
தெளிவற்றதாக மாற்றியிருக்கிறது. ஆகவேதான் சிமோன் டி பொவார் , குடிகள் தோல்வி மற்றும் மூர்க்கத்தனத்தின் மூலம் தன் இருப்பைக் காப்பாற்ற முயல்கிறார்கள்! என்கிறார்.

இதைதான் கவிஞர்கள் மொழியில் காட்டுகிறார்கள்.

வாழ்த்துகள் பூவிதழ் உமேஷ்.
••

துரிஞ்சி
எதிர் வெளியீடு,
அ.பே 99425 11302

வழி தவறி வந்த நிலவுகள்

 

நான்கு நிலவுகள் உள்ள கோளில் இரவில் சூரியனின் பாதி வெளிச்சம் இருக்கிறது.

அவளுடைய கண்ணில் ஒரு நிலவும் அவனுடைய கண்ணில் ஒரு நிலவும் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் நீளமான கையிருந்தால் உன் தோளுக்குப் பதிலாக நிலவின் தோளிலிலே போட்டிருப்பேன் எனச் சொல்லி சிரிக்கிறான்.

நிலவுகளை அருகருகே வரவழை அதைவிட அழகான உள்ளாடை எதுவும் இருக்காது எனச் சொல்லி அவளும் உரத்து சிரிக்கிறாள்.

நீ அப்படி செய் நான் வரவழைக்கிறேன் என அவள் காதோரம் ஏதோ கிசுகிசுக்கிறான். சினுங்கி சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பே அவர்களை நிலவுகளுக்குப் போட்டியாக ஒளிரச் செய்கிறது.

இரசிப்பதற்கும் அதிகமாக குடித்த குடிகாரனுக்கு எட்டு நிலவுகள் தெரிகின்றன. அவற்றைத் தலைக்கு மேலே நடந்துவரும் நாய்க்குட்டிகள் எனக் கூப்பிடுகிறான். மேகங்கள் நகர்வதால் அவை நடப்பதாக நம்பி புறப்படுகிறான்.

எடையைக் குறைத்துக்கொண்டு விலையை மாற்றாத நான்கு பிஸ்கட்களை அவற்றிற்கு வாங்கிச் செல்கிறான். வீட்டிற்குள் சென்றதும் பிஸ்கட்டுகளையே நாய்க்குட்டிகள் எனக் கொஞ்சி விளையாடுகிறான்.

அவன் குடித்து அழிவதாகச் சண்டையிட்டு கோவித்துச் சென்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டிற்கு வர நெடுநேரம் காத்திருந்து இலவச பயணச்சீட்டுக்காக நகரப்பேருந்தில் ஏறுகிறார்கள்.

கடலை ஒரு போதும் கேலி செய்யாத ஆறு  திருவிழாவிற்குக் கரையில் கூடியுள்ள மக்களின் கண்களால் உடல் முழுவதும் நிலவுகளையே சுமந்து செல்கிறது.

தன் இணையைக் கூடுவதற்குக் கூச்சப்பட்டவன் விரட்ட முடியாத வெள்ளைக்காகங்களாக இந்த நிலவுகள் இருக்கின்றன மேகமே உன் கருணை நல்ல கம்பளியாக மாறாதா என்று வேண்டுகிறான்.

சின்னஞ்  சிறுவனும் சிறுமியும் அட்சரங்களை மண்ணில் எழுதி பழகுகிறார்கள்.

அதே நான்கு நிலவுகள் அவர்களின் கண்களிலும் இருக்கின்றன. அறிவை வெளிச்சமாக்கும் ஒளி கடவுளுக்கு முன்பு ஏற்றப்படும் கற்பூரம் அல்லது மெழுகுவர்த்திக்கு நிகராகிறது

பூங்காவில் இருக்கும் கொரில்லா அப்படியும் இப்படியும் சில அடி தூரம் மட்டும் நடக்கிறது. ஏதேனும் ஒரு நிலவைத் தட்டிப்பறிக்க எட்டி எட்டி குதித்துப் பார்க்கிறது.

சர்க்கஸில் வாங்கிய  அப்பளங்களைக் கொண்டுவந்த சிறுமி அதை நோக்கி எறிகிறாள். அவை சிதறுகின்றன. உடைந்த நிலாக்களைக் கண்ட  கொரில்லா  வருத்தத்தோடு அமர்கிறது.

இன்னும் சில நிமிடங்களில் இந்த நிலவுகள் மறைந்துவிடும் என அரசு அறிவிப்பு செய்கிறது.

புதிய நிலவுகளைப் பார்க்க மூன்றிலிருந்து பதினொட்டு சதவீதம் வரி விதித்தால் என்ன என நிதியமைச்சரின் செவ்வி தொலைகாட்சிகளில் ஓடுகிறது.

நிலவுகளைப் பராமரிப்பது அரசாங்கத்தால் முடியாது எனவே தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்கிறார்.

இடதுசாரிகள் மாணவர்கள் எதிர்க்கிறார்கள்.

வாகனத்திற்கும் சாலைக்கும் குறுக்கே வந்தது போல கண்களுக்கும் வானத்திற்கும் குறுக்கே எதற்காக வருகிறீர்கள் என்று முழங்குகிறார்கள். மக்கள் எப்போதும் போல உண்டு உறங்குகிறார்கள்.

வழிதவறி பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்த மூன்று நிலவுகள் இன்னொருமுறை வழிதவறி வெறெங்கோ சென்றன.

வழிதவறிய ஆட்டைத் தேடி சென்ற ஏசு ஆரண்யத்தில் மாய மானைத் தேடும் இராமனைச் சந்திக்கிறார்.

ஆட்டையும் மானையும் மறந்துவிட்டு இருவரும் நிலவுகளைத் தேடிச்செல்கிறார்கள்.

ஒரு போதும் திரும்பப் போவதில்லை என அவர்களுக்கும் தெரியவில்லை.

 

கிணற்றின் வீடு

நான் கிணற்றின் வீட்டிற்குத் திரும்பினேன். நீர் மட்டம் உயர்ந்திருந்தது, கைகளை நீட்டினால் முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்.


கிணறே நீ எனக்கு குடிநீரைத் தராதே முகம் பார்க்கும் கண்ணாடியாக மட்டும் இரு என்றேன். சிற்றலையைச் சம்மதமாகத் தெரிவித்தது.

உடனடியாக கிடைக்கும் சம்மதம் குழந்தையின் வாயில் இருக்கும் இனிப்பை ஒத்தது.


கால்களை நல்ல வாடகைக்கு விட்டவன் போல நாடு நகரம் எல்லாம் சுற்றிவிட்டு ஒரு கோடையில் வந்தேன்.


கிணறு எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி இருந்தது முகம் பார்த்த கண்ணாடியை கைக்கும் கண்ணுக்கும் எட்டாத தூரத்தில் வைத்திருந்தது.


காலம் தாண்டி கானகம் தாண்டி வந்த ஒருவனை இப்படி ஏமாற்றலாமா என்றேன். என் குரலையே எதிரொலித்தது.


மற்றவருக்கு விருப்பமான ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்க முடியாத போது வாயையும் தொண்டையையும் எங்கோ வைத்து விடுவது போல கிணறு ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது.


கிணறு விளையாடுவதற்கு ஒரு பந்தை கொடுத்துவிட்டு திரும்பினேன்.


பெண்களிடம் மிக மரியாதையாக நடந்து கொள்ளும் ஒரு மரம். அன்று யாரும் வராத போதும் 41 வது பூவை எனக்காக உதிர்த்தது. ஒருமுறை நான் அழகாக இருந்ததை உணர்ந்தேன்.


உலர்ந்த தாவரங்களுக்கு எந்த உணவை கொடுப்பது என்று தெரியாமல் வெயிலில் நின்றேன். மழையை வர வைக்க தவளைகளை பிரார்த்தனை செய்ய கேட்டேன்.

சிறுவன் தீட்டிய சித்திரமாக பாதி மகிழ்ந்து இருந்தேன்.


அந்தியும் புலரியும் இரண்டு எளிய உயிரினங்களாக என்னுடன் வாழ்ந்தன. அவை ஒளிச்சேர்க்கையின் மூலமே உண்டு உயிர்த்து இருப்பைத் தக்கவைத்தன.

எவ்வளவு முட்டாள்தனமாக நீந்தினாலும் மீன் கரையை கடந்து வராது அது போல என் கால்களும் பூமியைத் தாண்டி எங்கும் போகவில்லை.

நானும் அதிகப்படியாக முட்டாளகவும் இருக்க முயன்றேன்.


நகங்களுக்குப் பதிலாக விரலை வெட்டினேன். பழங்களை எரிந்து தோலைத் தின்றேன். பறவைகளை குரங்குகள் எனவும் கடலைப் பட்டாம்பூச்சி எனவும் அழைத்தேன். என் தலைமுடிக்கு ஐநூறு வயது என்றேன்.

கார்காலம் தொடங்கியது. குதிரைகளின் காவலர்கள் கல்லாக மாறியதாக வந்த வதந்திகளை நம்பினேன். காற்று செத்துவிட்டது என்பதையும் நம்பினேன்.

இறுதியாக இரவிலும் கரும்பில் இருக்கும் இனிப்பாக என்னிடம் இருக்கும் அன்பு, விதைப்பவரின் கால்தடங்களும் தானியங்கள் என சொல்லிகொடுத்தது.

கார்காலம் முடிந்தது.

நனைந்து நனைந்து நானே மேகமாகிவிட்டது போல உணர்ந்தேன். கிணற்றின் வீட்டிற்குச் சென்றேன். நீர் மட்டம் உயர்ந்திருந்தது, கைகளை நீட்டினால் முகத்தை ஈரமாக்கிக் கொள்ளலாம்.

மீண்டும் எனது கண்ணாடியானதற்கு நன்றி கிணறே என்றேன்.

காலம் எல்லாவற்றையும் மாற்றும் காத்திருப்பு எல்லாவற்றையும் மாற்றும் என கிணறு முதலும் கடைசியுமாய் பேசியது.🌻.

இரண்டு கவிதைகள்

தண்ணீர் வாக்கியம்

பேச யாருமில்லை
ஒரு குவளைத் தண்ணீர் மட்டும் அருகிலிருக்கிறது
காதை தூங்கச் சொல்லிவிட்டு
ஒரு மிடறு தண்ணீரில்
தொண்டைக்கு ஒரு வாக்கியத்தை அனுப்புகிறேன்




அவள் அழகாய் இருக்கும் நகரில்
நானும் அழகாய் இருந்தேன்

பழங்கள் ஆவியாகும் என்று யாரிடமாவது
பொய் சொல்லி நம்பவைக்க வேண்டும்
அதன் பிறகு வியாபாரியாவேன்
பறவையின் பாட்டு ஒளியாகும் காலம் வரும் என்று
நகங்களை விற்பேன்
கடல் முழுவதையும் இனிப்பாக மாற்றுவதற்கு தெரியும் என
ஒவ்வொரு விரலாய் விற்பேன்
அவளைச் சந்தித்த பிறகு மழையில் நடப்பதை
ஒரு பழக்கமாக்கிக்கொண்டேன் என
மணிக்கட்டுக்கு மேலே இருக்கும் கைகளை விற்பேன்
உதடுகளைத் தவிர எல்லாவற்றையும் விற்று
இனி எதுவுமே இல்லை என்ற நிலை வந்தால்
ஒரு விதை முளைத்து எழும்போது
கையை விரிக்கிற சிறிய மனிதன் தெரிகிறான் என்று பாடி
அவளை முத்தமிட்ட உதடுகளை விற்கமாட்டேன்
அந்த உதடுகளால் எல்லாவற்றையும் மீட்டுக்கொண்டு
அவளைச் சந்திக்காமல்
ஒரு செடியைப் போல ஒரே இடத்தில் வாழ்ந்துவிடுவேன்.

மூன்று இலட்சம் கவிதைகள்

 

 

பெண்களுக்காக ஆண்கள் எதற்காக இப்படி உருகுகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை ஆனால் இந்த உலகம் கவிதைகளுக்காக ஏன் இப்படி உருகுகிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் உண்டு. கவிதை தான் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் கண்டுபிடிப்பான மொழி உருவாக்கிய முதல் உயர்ந்த வடிவம் அதனால் தான் உலகம் கவிதைகளுக்காக உருகுகிறது.

ஆகஸ்ட் 24, 1899 இல் பியூனஸ் அயர்ஸில் பிறந்த ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்ஹேஸ் உலக இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ளார். நேற்று ஆகஸ்ட் 24 ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவின் 123 ஆண்டு பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

 

அவரின் பிறந்த நாளை அவர் பிறந்த அர்ஜென்டினா நாடு 2012ஆம் ஆண்டு முதல் வாசகர் தினமாகக் கொண்டாடி வருகிறது.

அவருடைய பிறந்த நாளை ஒட்டி நடக்கும் ட்விட்டர் மாரத்தானில் #MaratonElAleph என்ற ஹேஷ்டேக் இலும் வரும் வெள்ளிக்கிழமை வரை பதிவிடலாம் , போர்ஹெஸ் கலாச்சார மையத்தில் கல்வி மாநாடுகள், கச்சேரிகள், தியேட்டர் உள்ள புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் நூல்களுடன் “தி போர்ஹெஸ் அட்லஸ்” என்ற தலைப்பில் ஒரு புதுமை கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு பிரபலமாக உள்ள நடிகை மற்றும் பாடகி நாச்சா குவேரா என்பவர் அவருடைய நினைவிடத்தில் கவிதை வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

 

இக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக அந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கவிதைகளையும் கவிஞர்களையும் கொண்டாடுகின்றனர்.

அத்தகைய வரலாற்று கவிதை வெளியீட்டு நிகழ்வை, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அனைத்து கலாச்சார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிக்கவும் 1974 இல் தொடங்கப்பட்ட Fundación El Libro அறக்கட்டளை மற்றும் SADE (Argentine Society of Writers) ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து நாடு முழுவதும் 250 கவிஞர்களின்  கவிதைகள், மூன்று லட்சம் பிரதிகள் அட்டையில் அச்சிட்டு விநியோகித்து உள்ளனர்.

இதற்காக பியூனர்ஸ் அயர்ஸ் நகரத்தில் ஐந்து தெருமுனைகளிலும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள 60 SADE அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் கவிதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

விழா முன்னேற்பாட்டளர்கள் எந்தெந்த இடங்களில் எந்தெந்த கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பையும் முன்கூட்டியே சேர்த்து வெளியிட்டுள்ளனர்

 ஒரே நேரத்தில் மூன்று லட்சம் கவிதைகள் வெளியிடப்பட்ட அற்புதமான நிகழ்வு கவிதை வாசகனாகவும் கவிஞனாகவும் மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரைப் பற்றியும் அவருடைய கவிதைகளையும் படிக்க கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.

https://www.poetryfoundation.org/poets/jorge-luis-borges

 

 

 

விரைவில்

கவிதைகளோடு நான் இருக்கின்ற நேரம் மிக அதிகம் கவிதைகள் பற்றி உரையாடவும் யோசிக்கவும் மிக விருப்பமாக இருக்கும் எனக்கு அதுதான் இங்கு சக்தியாக உள்ளது.

என்னுடைய இரண்டு கவிதைத் தொகுப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. அது பற்றிய அறிவிப்புகளை இன்னும் சில தினங்களில் வெளியிட உள்ளேன்.

இரண்டு கவிதை தொகுப்புகளும் இரண்டு விதமான வெளிப்பாட்டு மொழிகளோடு வெளிவர உள்ளன.

கடந்த ஆண்டு நான் எழுதி முடித்த ஒரு தொகுப்பு. அதில் உள்ள சில கவிதைகள் இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் வெளியாகி உள்ளன.

இரண்டாவது கவிதை தொகுப்பு காதலை பாடியுள்ள கவிதை தொகுப்பாகும் நவீன கவிதை மொழியில் காதலின் அடர்த்தியை காதல் மிகுந்து கூடி முயங்கும் காட்சிகளை நான் எழுதிப் பார்த்து இருக்கிறேன் இந்த கவிதை தொகுப்பில் 100க்கும் அதிகமான கவிதைகள் இடம் பெறும் அத்தனை கவிதைகளையும் இரண்டரை மாதங்களில் நான் எழுதி இருக்கிறேன். அவை மட்டுமின்றி அன்றாடம் சார்ந்து மேலும் 60 கவிதைகள் அதே காலகட்டத்தில் எழுதினேன் அவை தற்போது நூலாகாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி நான் எழுதிய கவிதைகள் மொத்த எண்ணிக்கை 200க்கு தாண்டி இருக்கும் அவற்றுள் காதல் பற்றிய நூறு கவிதைகள் கூட ஒரு சில அதிகமாக சேர்ந்து நூலாக்கம் காண உள்ளன

காதலிக்காத பெண்ணுக்கு நிலவு ஒரு பழைய குடிசை

 

1.

அவள் உப்பு போன்றவள்

அவள் கண்கள் மிளகு போன்றவை

விரும்பியபடி இருக்கும்போது

அவள் நிழலில்

கண்டப்பேரண்டப் பறவையின் வலிமை இருக்கிறது

ஆனாலும்

ஆண்களின் பொய்களுக்கு எதிராக

அவள் இரண்டு மடங்கு உண்மையை சேகரிக்க வேண்டும்.

2.

அவள் உதடுகள் அழிஞ்சி பழம் போன்றவை

இளம் ஒஞ்சி உடைய அவளுக்கு

நிலவு ஒரு பழைய குடிசை

சிறு துளையை நகர்த்திக் கொண்டது போல உதடு குவித்து

அதைக் கூப்பிடுகிறாள்

அப்போது

கடவுளைப் போல இருப்பதற்கு அவளிடம் எல்லா காரணமும் இருக்கிறது.

ஆனாலும்

இறந்த மரம் நிற்பது போல

தங்கள் தேவை மீதே நிற்கும் ஆண்கள் அவளுக்கு முழுமையானவர்கள் இல்லை.

3.

யாருக்குத் தெரிந்தாலும் சிரித்து விடும்

ஒரு பாலியல் நகைச்சுவையை நினைத்து மெல்லியதாய் சிரிக்கிறாள்

அப்போது

அவள் ஆடையில் ஒட்டியுள்ள ஒட்டங்காய்ப்புல் கூட அழகாகத் தெரிகிறது

அவளது இரத்த ஓட்டத்தில் மகிழ்ச்சி ஒரு மீச்சிறு படகாக அசைகிறது

அதனால்

காதின் அணிகலன் காற்றில் அசைவதால் இசைக்கிறது

அதைக் கேட்க விரும்பினால் உங்கள் காதை மட்டும் நீட்டி அனுப்புங்கள்

ஆனாலும்

ஆண்களால் ஒரு பெண்ணை முழுதாக நேசிக்க முடியாது

ஏனெனில்

பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு

அரை இதயம்தான் இருக்கிறது.